2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அந்த 45 நிமிடங்கள்: வைத்தியரின் உருக்கமான பதிவு

Niroshini   / 2021 மே 07 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான கர்ப்பிணியொருவரின் மரணம், இலங்கையில் முதன்முறையாக நேற்று முன்தினம் (05) பதிவானது. இந்த மரணம், இலங்கை வாழ் மக்கள் மனதில் பெரும் துக்கத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.  

குறித்த கர்ப்பிணியையும் அவரது வயிற்றில் வளர்ந்த சிசுவையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட ராகம வைத்தியசாலையின் வைத்தியரொருவர், மேற்படி கர்ப்பிணியின் மரணம் தொடர்பில், தனது பேஸ்புக் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றைப் பதிவு செய்துள்ளார்.

“அன்று மாலை 4.30 மணியிருக்கும். Covid HDU பிரிவு, மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. நானும் என்னுடைய நண்பனும், காலை முதலே நோயாளர்களைக் கவனித்து, மிகுந்த களைப்படைந்துக் காணப்பட்டோம். எங்களுடைய நேர்ஸ்மாரும், அப்போது தான், தங்களுடைய பணியிடை நேரமாற்றை (Shift) முடித்துக்கொண்டு திரும்பத் தயாராகிக்கொண்டு இருந்தார்கள். அப்போது தான், Ward registrar HDU வந்து, கர்ப்பிணியொருவருக்கென கட்டிலொன்றைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால், எமது வார்ட்டிலுள்ள 6 கட்டில்களும் நிரம்பியிருந்தன. அவர்கள் அனைவரும், உயிரிருக்கும் போராடிக்கொண்டிருந்தனர். சிலர் Ventilator உதவியுடனும் சிலர் CPAP உதவியுடனும், உயிருக்கும் போராடிக்கொண்டிருந்தனர்.

“அதிகபட்ச அளவில், அவர்களுக்கான ஒட்சிசனை வழங்கிக்கொண்டிருந்தோம். HDUக்குள் இருந்த அனைத்து Syringe Pumpகளும், நோயாளர்களுக்குப் பூட்டப்பட்டிருந்தன. அதனால், எவரும் அசையும் நிலைமையில் இருக்கவில்லை. இருப்பினும், Ward registrar HDUஇன் கோரிக்கை, இரண்டு உயிர்களுக்கானதாக இருந்தது.

“எங்கள் இருவருக்கும், வேறு வழி தோன்றவில்லை. ஓரளவுக்கேனும் தாக்குபிடிக்கக்கூடிய நிலைமையில் இருந்த நோயாளி ஒருவரை வேறு வார்ட்டுக்கு மாற்றிவிட்டு, அந்தக் கட்டிலை, கர்ப்பிணித் தாய்க்காக ஒதுக்கினோம்.

“மாலை 6.30 மணியிருக்கும். மினுவங்கொடை வைத்தியசாலையிலிருந்து மாற்றப்பட்டிருந்த அந்தக் கர்ப்பிணித் தாய் அழைத்து வரப்பட்டார். இரண்டு மாதக் கரு, அவரது வயிற்றில் வளர்ந்துகொண்டிருந்தது. அது, அவருடைய முதல் குழந்தை. அவர் HDUக்குள் நுழையும் போதே, தன்னையும் குழந்தையையும் காப்பாற்றுமாறு, கத்திக் கோரிக்கை விடுத்தார். அவர், மூச்செடுக்க மிகவும் சிரமப்பட்டார். உடனடியாகச் செயற்பட்ட எமது பணிக்குழு, அவரைக் கட்டிலில் படுக்கவைத்து, monitorக்குப் பொருத்தினர். CPAPஉம் தயாராகவே இருந்தது.

“மூச்செடுக்க சிரமப்பட்டிருந்த அவர், தன்னுடைய பையிலிருந்து அலைபேசியை எடுத்து, யாருக்கோ அழைப்பை ஏற்படுத்த முயன்றுகொண்டிருந்தார். பெரும்பாலும், அவர் தனது கணவருக்குத்தான் அழைப்பை ஏற்படுத்த முயன்றிருக்கலாம். ஆனால், அவருக்குப் பொருத்த வேண்டிய அனைத்து கருவிகளும் பொருத்தப்பட்டாதால், முயற்சி பயனிக்கவில்லை.

“சில விநாடிகளே சென்றன. என்னுடைய நண்பன், PPEஐ அணிந்துகொண்டு, அந்தக் கர்ப்பிணியிடம் ஓடிச் சென்றார். PPEஐ கூட அவர் ஒழுங்காக அணிந்திருக்கவில்லை. அந்தளவுக்குப் பதற்றமான நிலை காணப்பட்டது. அனைத்துத் தாதிமார்களும் resuscitationஐத் தொடங்கிய​ போது, Registrar, SR, Med Team அனைவரையும் அவ்விடத்துக்கு ​அழைக்கும் நடவடிக்கையில் நான் ஈடுபட்டிருந்தேன்.

சுமார் 45 நிமிடங்களாக, எம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்துபார்த்தோம். ஆனால், வாழ்க்கை நிரந்தரமில்லை என்று கூறிக்கொண்டு, அந்த இரு உயிர்களையும் கொவிட் நியூமோனியா பறித்துச் சென்றது. அங்கிருந்த நாம் அனைவரும், எவ்வித அசைவுமின்றி, அவ்விடத்திலேயே சில நொடிகள் உறைந்துவிட்டோம். தாதியர்களின் முகங்களில், கண்ணீர் வடிந்தோடியது.

“இது, மற்று​தொரு துரதிர்ஷ்டமான சந்தர்ப்பமாகும். எம்முடைய இயலுமையில் எல்லை, கைமீறிச் செல்கிறது. அனைத்துச் சுகாதாரத் தரப்பினரும் களைத்துப் போயுள்ளனர். அவர்கள், அவர்களால் முடிந்த அதிகபட்ச உழைப்பைப் போட்டுக்கொண்டே இருக்கின்றனர். பொதுமக்கள், தங்களுடைய பாதுகாப்பு தொடர்பில், இன்னும் அதிகமாகச் சிந்திக்க வேண்டும். இல்லாவிடின், இன்னும் சில நாட்களில், இந்தியா போன்றதொரு நிலைமையையே நாங்களும் எதிர்நோக்க நேரிடும்” என்று, அந்த வைத்தியர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .