2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆணாதிக்க காவலராக மைத்திரி

Gopikrishna Kanagalingam   / 2018 ஜனவரி 18 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் அண்மைக்கால அரசியல் வரலாற்றை உற்றுநோக்கிப் பார்ப்பவர்களுக்கு, ஒரு விடயம் மாத்திரம் உறுதியாகத் தெரிந்திருக்கும். சாதாரண சமூகத்தில், கலாசாரக் காவலர்கள் என்று கேலியாக அழைக்கப்படுபவர்களிடம் காணப்படும் அத்தனை குணாதிசயங்களும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் காணப்படுகின்றன என்பது தான் அது.

கலாசாரக் காவலர் எனும் சொற்கள், சாதாரணமாகப் பார்க்கும் போது, பழைமைவாதத்தைப் பின்பற்றுபவர்களைக் குறிக்கும் சொல்லாகவே தெரியலாம். ஆனால், நவீன காலக் கலாசாரக் காவலர்கள் என்போர், முன்னைய காலங்களில் காணப்பட்ட ஆணாதிக்கச் சூழலை மீண்டும் கொண்டுவருவதற்கே விரும்புகிறார்கள் என்பதை, சற்று அவதானித்துப் பார்த்தால் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.

ஒரு நாட்டின் ஜனாதிபதி, அதுவும், போர் நாயகராகக் கருதப்பட்ட, பெரும்பான்மை இனத்தவர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற ஒருவரை, அவரது கட்சியிலிருந்தே வந்து வெற்றிகொண்ட ஒரு ஜனாதிபதியை, சாதாரணமாக இவ்வாறு அழைத்துவிட முடியாது. ஆனால், ஜனாதிபதியின் அண்மைக்கால நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, இவ்வாறான ஒரு முடிவுக்கு வருவதைத் தவிர, வேறு வழிகளே இல்லை என்பது தான் உண்மையாக இருக்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைக்கால நடவடிக்கையாக, மதுபான சாலைகளில் பெண்கள் பணியாற்றுவதற்கும் மதுபான நிலையங்களிலிருந்து அவர்கள் மதுபானம் வாங்குவதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியமையை, இரத்துச் செய்யுமாறு பணிப்புரை விடுத்தமை அமைந்திருந்தது.

இலங்கையின் மதுபான நிலையங்களுக்குப் பெண்கள் சென்று, மதுபானங்களை எந்தளவுக்கு வாங்குகிறார்கள் என்பது சந்தேகத்துக்குரியதாக இருக்கும் நிலையில், பெண்களுக்கு இவ்வாறான தடை காணப்பட்டமை, இத்தடை நீக்கப்படும் வரை பலருக்கும் தெரிந்திருக்கவில்லை என்பது உண்மையானது.

அத்தோடு, இச்சட்ட ஏற்பாடு, முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை என்பதுவும் உண்மையானது. எங்காவது இதற்கான அனுபவங்களைப் பெற்ற பெண்களின் கருத்துகளைச் செவிடுத்தவர்களுக்குத் தான், இவ்வாறான சட்ட ஏற்பாடு இருப்பது தெரிந்திருந்தது.

என்றாலும் கூட, இப்படியான சட்ட ஏற்பாட்டை மாற்றுவதற்காக எடுத்த முடிவு, முக்கியமானது. ஆனால், அந்த முயற்சிக்கு எதிரான ஜனாதிபதி மைத்திரிபாலவின் எதிர்ப்பு, எந்த வகையிலும் புரிந்துகொள்ளப்பட முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

பெண்கள், மதுபானங்களை வாங்குவதற்கு எதிரான தடையை நியாயப்படுத்துவோர், பிரதானமாக, இரண்டு வகையினராக இருக்கின்றனர்:

1) கலாசாரக் காவலர்கள் - “பெண்களே நாட்டின் தெய்வங்கள். அப்படியான தெய்வங்கள், மதுபானம் வாங்குவதா? ஐயகோ!” என்று சொல்பவர்கள் இவர்கள். பெண்கள் மீது மதிப்பு இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும், ஆண்களால் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ள சமூக, சட்டக் கட்டமைப்புக்குள் பெண்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கும், பிற்போக்குவாதிகள் இவர்கள். இவர்களின் கருத்துகளை, காத்திரமான வாதக் கருத்துகளாக ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவை கிடையாது.

2) மதுபானத்துக்கு எதிரானவர்கள் - “நாட்டின் மதுபானப் பாவனை, ஏற்கெனவே அதிகளவில் இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும். கட்டுப்படுத்துவதை விடுத்து, பெண்களையும் வாங்க அனுப்பது எவ்வளவுக்குப் பொருத்தமானது?” எனக் கேட்பவர்கள். முதற்பிரிவினருக்குக் காணப்படும், ஆணாதிக்கச் சிந்தனை, இவர்களிடம் கிடையாது என்றில்லை. ஆனால், மதுபானத்துக்கு எதிரான நிலைப்பாடும் இவர்களிடம் உண்டு.

நியாயமான கேள்வி தான். ஐரோப்போவுடன் ஒப்பிடும் போது, 5 மடங்கு அதிகமாக, தனிநபர் ஒருவருக்கான சராசரி மதுபான உள்ளெடுப்புக் காணப்படுகிறது என, புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை குறிப்பிடுகிறது. ஐரோப்பாவில் 95 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் மது அருந்தும் நிலையில், சுமார் 20 சதவீதமானோரே இலங்கையில் மது அருந்துகின்றனர் எனவும், அதன் காரணமாக, மது அருந்துவோர், இன்னமும் அதிகம் அருந்துபவர்களாக இருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

எனவே, இலங்கையில் மதுப் பிரச்சினை என்ற ஒன்று காணப்படுகிறது என்பது உண்மையானது. அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது, அரசாங்கத்தின் பொறுப்புக் கூட. ஆனால், தடை செய்வது தான் அதற்கான தீர்வா? வளர்ந்தவர்கள், தங்களது விருப்பத்துக்குரிய தெரிவை மேற்கொள்வதை அரசாங்கம் தடுப்பது, மக்களின் உரிமைகளில் தலை போடும் விடயம் இல்லையா? அப்படித் தடை செய்வதாக இருந்தாலும், பெண்களுக்கு மாத்திரம் தடை விதிப்பது ஏன்? இலங்கையிலுள்ள பெண்களின் 3 சதவீதமானோர் மாத்திரமே, மது அருந்துகின்றனர் என, இலங்கையின் அரச தரவுகள் கூறும் நிலையில், அதிகமாக மது அருந்தும் ஆண்கள், மதுபானம் வாங்குவதைத் தடை செய்தால், இலங்கையின் மதுப் பிரச்சினைக்குக் காத்திரமான தீர்வொன்று கிடைக்க வாய்ப்புள்ளது அல்லவா?

பெண்கள் குடிக்க வேண்டும் அல்லது அவர்கள் குடிப்பது தான் சமவுரிமை என்ற வாதத்தை முன்வைக்கத் தேவையில்லை. மதுபானம் வாங்குவதற்குப் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை என்பது, மது பற்றியது கிடையாது. மாறாக, பெண்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தும் ஒரு செயற்பாடே தவிர, வேறெதுவுமில்லை. நாட்டில் 51.5 சதவீதத்துக்கும் அதிகமானோராகக் காணப்படும் பெண்களை, இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்துவது என்பது, நாட்டின் எதிர்காலத்துக்கும் எந்தளவுக்குப் பொருத்தமானது என்பது கேள்வியே.

மதுபானங்களை வாங்குவதற்குப் பெண்களுக்குத் தடை என்ற, பாலின ரீதியாக ஒடுக்குகின்ற, பழைமைவாதச் சட்ட ஏற்பாடு இருப்பதென்பது ஒரு விடயம். அது பிரச்சினைக்குரியது என்பதை அறிந்து, அதை மாற்றுவதற்கான முயற்சியை எடுத்த பின்னர், மீண்டும் பழைய ஏற்பாட்டுக்கே செல்வதென்பது, இன்னமும் மோசமானது.

இவையெல்லாம், இன்னொரு விதத்திலும் ஏமாற்றத்தைத் தருகின்றன. அண்மைக்காலத்தில், இலங்கையில் பெண்கள் தொடர்பான முக்கியமான சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதில் குறிப்பாக, உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களுக்கான கட்டாயமான 25 சதவீத ஒதுக்கீடு காணப்பட்டது. ஆண்களால் இன்னமும் ஆதிக்கம் செலுத்தப்படும் சமூகங்களிலும் சபைகளிலும், பெண்களின் 25 சதவீத ஒதுக்கீடு காரணமாக, அவர்களுடைய பிரச்சினைகளை எந்தளவுக்குத் தீர்க்க முடியும் அல்லது விவாதிக்க முடியும் என்ற கேள்வி காணப்படுகிறது. ஆனாலும் அதைத் தாண்டி, பெண்களுக்கான ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்ற இந்த ஏற்பாடு, தலைமைத்துவம் நோக்கிய, பெண்களுக்கான மிக முக்கியமான முதற்படியாக இருக்கிறது. இப்படி, ஆரோக்கியமான மாற்றமொன்று ஏற்படுத்தப்படும் அதே தருணத்தில், ஜனாதிபதி மைத்திரிபாலவின் பிற்போக்கான, ஆணாதிக்கத்தனம் மிகுந்த நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன என்பது, அதிகமான வருத்தத்தைத் தருகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பெண்களின் சுதந்திரத்தில் அடிக்கடி தலையீடு செய்யும் வரலாற்றைக் கொண்டவர் என்பது, நாமனைவரும் அறிந்ததே. இலங்கைக்கு வந்திருந்த பாடகர் ஒருவர் மீது, பெண்ணொருவர் தனது உள்ளாடையை வீசிய போது, அதற்கெதிராகப் பொங்கியெழுந்தவர் தான் ஜனாதிபதி. அதேபோல், சமபாலுறவாளர்கள், திருநங்கைகள், திருநம்பிகள், இருபால் விளைஞர் விடயத்திலும், பழைமைவாத அடிப்படைவாதத்தை வெளிப்படுத்தியிருந்தார். எனவே, இதுவொன்றும் புதிது கிடையாது.

ஆனால், ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டை, பெண்கள் மீதான கரிசனை என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால், “மதுபானம் வாங்குவதற்குப் பெண்களுக்கு அனுமதியா? அனுமதிக்கவே மாட்டேன்” என்று ஜனாதிபதி பொங்கியெழுந்த இதே காலகட்டத்தில் தான், சிறுமியொருத்தி வன்புணரப்பட்டுக் கொலை செய்யப்பட்ட செய்தி வெளியாகியிருந்தது. இவ்வாறு, சிறுமிகள் வன்புணரப்பட்டுக் கொலை செய்யப்படும் செயற்பாடுகள், அண்மைக்காலத்தில் அதிகரிப்பதை, ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

பெண்கள் பற்றிய உண்மையான அக்கறையைக் கொண்ட ஒருவராக இருந்திருந்தால், அதைப் பற்றிக் கவனமெடுத்து, இவ்வாறான விடயங்கள் ஏன் தொடர்கின்றன என, சட்டமும் ஒழுங்கும் அமைச்சரிடமும் பொலிஸ்மா அதிபரிடமும் ஏனைய அதிகாரிகளிடமும், ஜனாதிபதி கடிந்து கொண்டிருக்க வேண்டும். அதை அவர் செய்திருக்கவில்லை. 

அதேபோல், முஸ்லிம் தனியார் விவாக - விவாகரத்துச் சட்டம், முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதிக்கிறது என, முஸ்லிம் தனியார் சட்டச் சீர்திருத்தத்தை வேண்டிநிற்பவர்கள், தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால், பல்வேறுபட்ட அரசியல், சமூகக் காரணிகள் காரணமாக, அந்தச் சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சி, ஏறத்தாழ கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவது போன்ற தோற்றம் காணப்படுகிறது. பெண்களுக்கான சமவுரிமையை, எந்தவிதமான எதிர்ப்புக்கு மத்தியிலும் பெற்றுக் கொள்ளத் தயார் என்று ஜனாதிபதி கருதுவாராயின், இச்சட்டத் திருத்தத்தை முன்னின்று நடத்தியிருக்க வேண்டுமல்லவா?

இல்லையெனில், கருக்கலைப்புத் தொடர்பாகக் காணப்படும் கடுமையான சட்ட ஏற்பாடுகளைத் திருத்துவதற்கான முயற்சி கூட, அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. பெண்களின் உடல் தொடர்பாக முடிவெடுக்கும் உச்சபட்ச அதிகாரம், பெண்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பது தான், சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாக இருக்கிறது. ஆனால், கருக்கலைப்புச் சட்டங்களை, சிறியளவுக்குத் தளர்த்துவதற்கான முயற்சி கூட, முன்னேற்றமடையவில்லை. கிட்டத்தட்ட அனைத்து மதங்களையும் சேர்ந்த (ஆண்) மதத்துறவிகள், பெண்கள் என்ன செய்ய வேண்டுமென்பதைத் தீர்மானித்து, கருக்கலைப்புச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். அதையாவது முன்னின்று நடத்துவதற்கான முயற்சிகளை, ஜனாதிபதி எடுத்திருக்கலாம். அதையும் அவர் செய்திருக்கவில்லை.

இலங்கையில் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் பெண்களில் 90 சதவீதமானவர்கள், பாலியல் ரீதியான தொல்லைகளை, துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றனர் என, தொடர்ந்து வெளிவரும் பல்வேறு கருத்துக்கணிப்புகள் உறுதிப்படுத்துகின்றன. அதற்கெதிராக இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? எதுவுமே இல்லை. அது தொடர்பாக, எவ்வாறான கவனத்தை ஜனாதிபதி மைத்திரிபால வெளிப்படுத்தியிருக்கிறார்? இல்லவே இல்லை. எதுவும் இல்லை.

ஏனென்றால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தன்னுடைய வாக்கு வங்கி என அவர் கருதும் கிராமிய வாக்காளர்களைக் கவர்வதற்கு, பழைமைவாதத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளே அவருக்கு உதவுமே தவிர, உண்மையான, மக்கள் நலன்சார்ந்த நடவடிக்கைகள் கிடையாது. வாக்குகளைக் கவர்வதற்காக, “வர்த்தமானி தொடர்பில், ஊடகங்கள் மூலமாகத் தான் அறிந்தேன்” என்று, ஜனாதிபதி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளலாம். அது, கிராமப்புற மக்களிடம் வேண்டுமானால், எடுபடவும் கூடும்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதியாக இருந்துகொண்டு, அரசினதும் அமைச்சரவையினதும் தலைவராக இருந்துகொண்டு, முக்கியமான தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்கள் மூலமாகத் தான் அறிகிறார் எனக் கூறுவது, அவரது தலைமைத்துவப் பண்புகளைத் தான் கேள்விக்குட்படுத்துகிறது என்பதை, அவர் உணர வேண்டும்.

ஜேம்ஸ் ஃபிறீமான் என்ற எழுத்தாளர் கூறிய விடயத்தைத் தான், இங்கு வலியுறுத்த வேண்டியிருக்கிறது. “அடுத்த தேர்தல் பற்றிச் சிந்திப்பவன், அரசியல்வாதி. அடுத்த பரம்பரை பற்றிச் சிந்திப்பவன், தலைவன்”. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், கட்சி பேதமின்றி, அப்போதைய பொது வேட்பாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை அனைவரும் ஆதரித்தமை, அரசியல்வாதியாகப் பார்ப்பதற்குக் கிடையாது, மாறாக, நாட்டில் காணப்பட்ட தலைமைத்துவ இடைவெளியை நிரப்புவதற்கே. அதை அவர் செய்கிறாரா என்பதை, ஒரு கணம் தரித்து நின்று, அவதானிப்பது அவசியமானது.

ஏனென்றால், கவிஞனரொருவன் சொன்னது போல, “காதலும் அதிகாரமும், உச்சக்கட்டப் போதையைத் தருவன”. அதிகாரப் போதை, தலைக்கு ஏறியவர்கள், இதற்கு முன்னைய காலங்களில் சந்தித்த வரலாறுகளை, ஜனாதிபதி மறக்கக்கூடாது என்பது தான், மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .