2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆரம்பிக்கும் தோல்விக்கான தேர்தல் பயம்!

Editorial   / 2019 ஜூலை 14 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இலட்சுமணன்

தான் போகவே வழியில்லையாம் தவில்போல மத்தாப்புக் கேட்கிதாம் என்ற பழமொழி போல, நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ‘நானும் ஜெயிலுக்குப் போறேன். நானும் ரவுடிதான் , நானும் ரவுடிதான்” என்ற தமிழ்த் திரைப்பட வசனம் அடிக்கடி ஞாபகத்துக்கு வருகின்ற சம்பவங்கள் போன்று தான் இலங்கையின் தமிழ் அரசியல் நிலைமையும் இருக்கிறது. ஐயோ என்று தலையில் கையைவைத்துக் குந்திக் கொள்ள வேண்டியும் ஏற்படுகிறது.   

 கிழக்கில் மாத்திரமல்ல எல்லா இடங்களிலுமே அரசியல் போட்டி மிகப்பெரியதொரு போராட்டமாகவே மாறி வருகிறது. ஆனால், வழமைக்கு மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் அரசுக்கு எதிராக வாக்களிக்க கோரும் நிலைமை ஒன்று அண்மைக்காலமாக ஏற்பட்டு வருகிறது. இது நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பித்ததிலிருந்து அரசுக்கு ஆதரவான முடிவுகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும், எடுத்திருக்கும் நிலைப்பாடே இதற்குக் காரணமாகும்.   

 அரசாங்கத்துக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்க வேண்டும் என்ற வலியுறுத்தலே இப்போதைய ரெண்ட்.  

 இந்த வாரத்தில் மட்டக்களப்பில் நடைபெற்ற பட்டிருப்பு தொகுதி அரசியல் காரியாலயம் ஒன்றினை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் திறந்து வைத்ததும், அதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் அறிக்கை விட்டதும், அதற்குள் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் சம்பந்தப்படுத்தப்பட்டிருப்பதும் ஓர் அரசியல் சித்துவிளையாட்டு.  

 ஒவ்வொரு அரசியல்வாதியும் தங்களுடைய அரசியல் இருப்புக்காக முயல்வதும் அதனை அடுத்தவர் முறியடிப்பதும் வழமையானது என்றாலும் பரஸ்பரம் புரிந்துணர்வுடனும் விட்டுக் கொடுப்புகளுடனும் செயற்பட வேண்டியதாகவே இருக்கின்றது. இந்த இடத்தில் கருத்து தெரிவிப்பதற்கும் செயற்படுவதற்கும் வசதி இருக்கிறது என்பதற்காக வரிந்து கட்டிக்கொண்டு செயற்பட முனைவது தமிழர்களின் அரசியல் பாரம்பரியத்தில் மேலும் மேலும் கறையைப் பூசுவதாகவே இருக்கும்.   

 இந்த இடத்தில் மக்கள் பிரதிநிதிகளின் தகுதியும் இலட்சணமும் என்ற பார்வையொன்று செலுத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதில் இப்போதுள்ள அரசியல் வாதிகள் என்ற ஒழுங்கில் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியவற்றுக்காகத்தான் வடக்கு-கிழக்கைப் பொருத்தவரையில் சாத்தியங்கள் உள்ளன. தமிழருடைய பிரதேசங்கள் என்ற வகையில், வடக்கை விட்டுவிடலாம், நாம் கிழக்கைப் பார்ப்போம்.   

 அரசியல் என்பது எல்லாவற்றிலுமே ஆதிக்கம் செலுத்ததுவதாகத்தான் இருக்கிறது. இதனை யாரும் மறுக்க மாட்டார்கள். மிகப் பெரும் வரப்பிரசாதங்களைக் கொண்ட வகிபாகத்தையுடையவர்களாகத்தான் அரசியல் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். இது இலங்கையின் தலைவிதி.   

 ஒவ்வொரு தடவையிலும் இந்த அரசியல் பிரதிநிதித்துவத்துக்காகத் தேர்தலுக்கு வருபவர்கள் யாரையும் மக்கள் வலிந்து இழுத்துக் கொண்டு பட்டியலில் சேர்ப்பதோ, அவர்களிற்கான வேட்பாளர் பட்டியலில் கட்சிகள் சேர்ப்பதோ நடைபெறுவதில்லை. தனக்குத்தானே வேண்டுகோள் கடிதங்களைப் பெற்றுக் கொண்டு தன்னை ஒரு பெரு மனிதனாகவும் மக்கள் சேவகனாகவும் காட்டிக் கொண்டே தேர்தல் குதிப்பு நடைபெறுகிறது. இது வடக்குக்கிழக்கில் வழமையானதாக இருக்கிறது, இது கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்களுடைய விடயத்திலும் பொருந்தும்.   

 உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என்ற வட்டத்தையேனும் ஓரளவுக்கு விட்டுவிடலாம் என்றாலும், கிழக்கைப் பொறுத்தவரையில் இப்போது இருக்கின்ற எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலங்கையின் பிரதான மொழி மக்களின் பிரச்சினைகளைக் கையாளுவதற்காகவேனும் தெரிந்திருக்கிறது என்ற கேள்வியை முதலில் கேட்டுக் கொள்ள வேண்டும்.   

 இந்த இடத்தில் தான் நமது அரசியல்வாதிகள் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மை பெரும் அறிவாளிகள் சேவையாற்றக்கூடியவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் வெட்டுக் குத்துக்களுக்கும் தனிப்பட்ட நலனின் அக்கறைக்காகவும் மக்களையும் அதிகாரிகளையும் அச்சுறுத்துபவர்களாகவும், அடி பணியச் செய்ய முயற்சிப்பவர்களாகவுமே இருக்கிறார்கள். இதற்குப் பெயர் மக்களின் நலனுக்காகச் செயற்படுதலா?  

 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்புடைமையும் பொறுப்புக்கூறும் தன்மையும் இந்த இடத்தில் தான் கேள்விக்குட்படுத்தப்படுகிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் நாட்டின் பெரும்பான்மை அரசாங்கத்திடம் எதனையாவது கேட்டுப் பெறும் நிலைப்பாடே இருக்கிறது. இது யுத்தத்திற்கு முற்பட்ட காலத்திலும் சரி யுத்த காலத்திலும் சரி, இப்போதும் சரி மாற்றம் இல்லாததாகத்தான் இருந்து வந்திருக்கிறது. இப்போதைய காலத்தில் கொஞ்சம் அதிகமாகக் கேட்டுப் பெறும் நிலை காணப்படுகிறது. இது வேறு கதை.  

 ஒவ்வொரு பதவிக்கும் இருக்கின்ற அந்தஸ்தை வைத்துக் கொண்டு கட்சித் தலைமைகளை ஆசுவாசப்படுத்தி நடைபெறுகின்ற வேலைகளாகவே இருக்கிறது. கிழக்கைப் பொறுத்தவரையில் இருப்பவர்களை வைத்துக் கொண்டு சீர்தூக்கிப் பார்க்கின்ற நிலைமையில் மாற்றம் தேவைப்படுகிறது.   

 மக்கள் எதிர்பார்க்கின்ற பல்லின சமூகங்கள் வாழ்கின்ற, பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ ஆகிய மதங்களைக் கொண்ட நாட்டில், மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அம்பாறையில் ஒருவர், திருகோணமலையில் இருவர் உள்ளனர். இவர்களில் ஒருவரைத் தவிர எல்லோரும் கட்சித் தலைமையை நம்பி இருப்பவர்களாகவே இருக்கின்றன. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தங்களுடைய மக்களின் நலனுக்கான அனைத்துச் செயற்பாடுகளிலும் சுயமாகச் செயற்படும் நிலையில் இல்லை. அது மொழி சார்ந்து கூட.  

 இலங்கைப் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகுதி பற்றிய கேள்விகள் அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டு வந்தாலும், அதற்கான ஒழுங்குபடுத்தலை சட்டரீதியாக செய்து கொள்ளமுடியாத நிலையே உள்ளது. இந்த நிலையில் கிழக்கைப் பொறுத்தவரையில் மக்களின் நலன் சார்ந்து சிந்திக்கின்ற கட்சிகள், தங்களுடைய தேர்தல் கால வேலைகளைத் தொடங்கி வைக்கையிலேயே மும்மொழிப் புலமையுள்ள மக்கள் மத்தியில் பிரபலமுள்ள, சமூகம் சார்ந்தும், பக்கச்சார்பின்றியும் சிந்திக்கக்கூடிய, மேம்பட்ட செயற்பாடுகளுக்காக முன்செல்லக்கூடியவர்களைத் தேர்வு செய்வது முக்கியமானது.   

 அண்மையில் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் எதிர்வரும் தேர்தல்களில் இளையவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படும் என்ற ஒரு கருத்தினை முன்வைத்திருந்தார். அது நடைபெற வேண்டும். அதற்காக அறிவுஜீவித்தனத்துக்குட்படாதவர்கள் உள்வாங்கப்படுவதில் எந்தப்பிரயோசனமும் இல்லை.   

 அரசியல் கட்சிகளின் தலைமைகளுக்கு அப்பால் அதன் செயற்குழு, மத்தியகுழு போன்றவைதான் தீர்மானங்களை நிறைவேற்றுகின்றன தகுதி என்பது எழுத்தறிவோ, பாடசாலைக் கல்வியோ மட்டுமல்ல. நாடாளுமன்ற உறுப்புரிமை கிடைப்பதென்பது ஒரு பாக்கியம்தான். ஆனால், அவர்கள் அங்கு சென்று நாடாளுமன்றத்தில் சும்மா இருந்துவிட்டு வருவதற்கல்ல. அல்லது மக்கள் மத்தியில் வீராவேசப் போக்குகளைக் காட்டுவதும், அதிகாரத்தனமாகப் பழிவாங்கும் செயற்பாடுகளை நடத்துவதுமல்ல.   

 இலங்கையில் 225 பேரைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 196பேர் மக்களால் தெரிவு செய்யப்படுகின்றார்கள். 29 உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் மூலமாக நியமிக்கப்படுகிறார்கள். தகுதியில்லாதவர்களை தேர்தல்களில் தேர்வு செய்து அனுப்பி வைத்துவிட்டு அவர்களைப் பற்றி பின்னர் விமர்சிப்பதில் என்ன பயன் இருக்கிறது என்ற கேள்விக்கு கட்சிகள் விடுகின்ற பிழைகளும் காரணம்தான்.  

 தமிழர்கள் தங்களது உரிமைக்கான போராட்டங்கள் நடைபெற்ற காலங்களில் உணர்வுக்காக வாக்களித்துப் பழக்கப்படடவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தததே. அந்த வகையில் தமிழ்த் தேசிய நலனுக்காக யாரை நிறுத்தினாலும் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற சிந்தனையை வைத்துக் கொண்டு தீர்க்கமான முடிவுகளை எடுக்கத் தெரியாத, படித்தவர்கள், பதவியில் இருந்தவர்கள் என்ற நிலைப்பாடுகளுக்கு அப்பால் அரசியல் பாரம்பரியத்துடன் புலமைகளுடன் சார்ந்தவர்களை தேர்தல் காலத்தில் பட்டியல்களில் சேர்ப்பதே சிறப்பானதாக இருக்கும். ஓய்வு பெற்றவர்களையும், அரசாங்கத்தில் பணியாற்றி ஓய்வைக் கொடுத்துவிட்டு வருபவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினார்களாக்குவது மேலும் மேலும் ஒழுங்கு விதிகளைப் பற்றிப் பேசுபவர்களாகவே இருப்பார்கள்.   

 இந்த இடத்தில் உருவாகின்ற கேள்வி ஒழுங்கு விதிகளைப் பேசுவதற்கும் கடைப்பிடிப்பதற்கும் எதற்காக அரசியல்வாதிகள் தேவை என்பதுதான். அவ்வாறானால் அரசியல்வாதிகளை மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக ஆக்கி வைக்கத் தேவையில்லை. அரச அதிகாரிகளிடமே எல்லாவற்றையும் முடித்துவிடலாம் என்பதும் தான்.   

 மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் நாடாளுமன்றத்தில் மாத்திரம் கர்ச்சித்துவிட்டு வீட்டில் குந்தியிருக்க முடியாது. அதே நேரத்தில் மக்களின் சுமைகளைக் குறைப்பதற்கான வேலைகளிலும் ஈடுபட வேண்டும்.   

 எது எவ்வாறானாலும் இப்போது உருவாகி வருகின்ற அடுத்த தேர்தல்களுக்காக முயற்சிகளில் கிழக்கைப் பொறுத்தவரையில் தகுதியான முன்னாள் உறுப்பினர்கள் உள்வாங்கப்படுவதும், தகுதியுடைய புதியவர்கள் சேர்க்கப்படுவதுமே தேவையாக இருக்கிறது. எனையவர்கள் தம்முடைய தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி வைத்துவிட்டு தோல்விக்கான தேர்தல் களத்தினை உருவாக்கக் உருவாக்காதிருப்பதே சிறப்பு.  

 கடந்த காலத்தில் நடைபெற்ற யுத்தம், அப்போதிருந்த அச்சுறுத்தலான சூழ்நிலைகளின் பயன்களின் மூலம் காலம் கடத்தியவர்கள் இன்றைய காலகட்ட அரசியலில் மீன்பிடிக்க முயல்வது தோல்விக்காக மரணப்பயணமாகவே இருக்கும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .