2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இழுபறிகளை முடிவுக்கு கொண்டுவருமா தீர்ப்பு?

மொஹமட் பாதுஷா   / 2018 டிசெம்பர் 13 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்ன வைத்தியம் பார்த்தும், நாட்டைப் பீடித்துள்ள அதிகாரப் பைத்தியம் தீர்ந்தபாடில்லை. பிரதான கட்சிகள் ‘பிளான் ஏ,’ ‘பீ’, ‘சி’ என, ஒவ்வொரு திட்டமாக அடுத்தடுத்து நகர்த்திக் கொண்டிருப்பதால் சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதையே காண முடிகின்றது. ‘இதோ, இன்று முடிந்து விடும்’, ‘இதோ, நாளை வருகின்ற நீதிமன்றத் தீர்ப்புடன், எல்லாம் சரியாகி விடும்’, ‘இந்த வெள்ளிக்கிழமை ஒரு முடிவு கிடைத்துவிடும்’ என்று நினைத்துக் கொண்டே, ஒன்றரை மாதங்கள் சென்றுவிட்டன.   

இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக நவம்பர் எட்டாம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான மனுக்கள் மீதான தீர்ப்பை நேற்று (13) மாலை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கின்றது.

அதாவது, இலங்கையின் அரசமைப்பின் பிரகாரம், நான்கு வருடங்களும் ஆறு மாதங்களும் நிறைவடைவதற்கு முன்னர், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குக் கிடையாது என்று குறிப்பிட்டுள்ள உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், அதன்படி இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசமைப்புக்கு முரணானது என்றும் இதன்மூலம் மனுதாரர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பெழுதியுள்ளது. இந்தத் தீர்ப்பை ஏழு நீதியரசர்களும் ஏகமனதாக எடுத்திருக்கின்றமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 
   
மானங்கெட்ட மல்யுத்தம்   

இலங்கையில் நடக்கின்ற அரசியல் மல்யுத்தம் என்பதில் ‘ஜனநாயகம்’ சம்பந்தப்பட்டு இருக்கின்றது. என்றாலும், ஜனநாயகம், இறைமையின் அடிப்படைக் கூறுகளான, பொது மக்களின் உணர்வுகளுக்கு, எந்த அரசியல் கட்சியும் மதிப்பளிக்கவில்லை. 

எனவே, அவர்களது நகர்வுகள் வெற்றிபெற்றாலும் அவை மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாத முன்னகர்வுகளாகவே உள்ளன. அதாவது, வெற்றிகரமான தோல்விகள் என்று இவற்றைக் குறிப்பிடலாம்.   
அதேபோன்று, சட்டவாக்க சபையான நாடாளுமன்றத்திலும் சட்டவாட்சி அமைப்பான நீதிமன்றத்தின் ஊடாகவும் மேற்கொள்ளப்படுகின்ற நகர்வுகள், ஒரு தரப்புக்கு வெற்றிகரமான தோல்வியாகவும் இன்னுமொரு தரப்புக்கு, தோல்விகரமான வெற்றியாகவும் இருக்கிறது. 

இருந்தபோதிலும், இந்த நாட்டில் அமைதியும் சௌஜன்யமும், நெருக்கடியற்ற நிலையும் இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற மில்லியன்கணக்கான மக்களைப் பொறுத்தமட்டில், நிஜத்தில் இவையெல்லாம் வெற்றிகரமான தோல்விகள்தான் என்பதை, உன்னிப்பாக நோக்குவோர் புரிந்து கொள்வர்.   

ஒக்டோபர் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை, ‘இரவுப் புரட்சி’, ‘தந்திரோபாய புரட்சி’ மேற்கொள்ளப்பட்டதில் இருந்து, இன்று வெள்ளிக்கிழமை வரையும் 47 நாள்களாக, மூன்று பெருந்தேசியக் கட்சிகளும் பரஸ்பரம் எத்தனையோ நகர்வுகளைச் செய்துவிட்டன; இன்னும் செய்து கொண்டிருக்கின்றன. 

பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டமை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை என்பவற்றைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும், ஏதாவதொரு நகர்வு குறித்த செய்தி, வந்து கொண்டுதான் இருக்கின்றது. நேற்றைய தீர்ப்பு மட்டுமே, ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு, மனமகிழ்ச்சியைத் தந்திருக்கின்றது என்றாலும், வேறு எந்தச் செய்திகளும் மக்களுக்கு நிம்மதி தருவதாக அமையவில்லை.   

நாட்டின் உயரிய சட்டவாக்க சபையான நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புகள், நம்பிக்கையில்லாப் பிரேரணை,  நம்பிக்கையை வெளிப்படுத்தும் பிரேரணை, வாக்கெடுப்புகள், அமளிதுமளிகள், அடாவடித்தனங்கள், சபை அமர்வுகளைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆயினும், நாட்டின் அரசியல், இன்னும் ஸ்திரத்தன்மைக்கு வரவில்லை. இந்தத் தீர்ப்புக்குப் பிறகும், அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படும் என்பதும் நிச்சயமற்றதாகவே இருக்கின்றது.   

நீதிமன்றத்தின் ஊடாக, நீதிதேடும் செயற்பாடுகளிலும் இரு பிரதான தரப்புகளும் ஈடுபட்டிருக்கின்றன. அந்த வகையில், நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான மனுக்கள், ஆதரவான மனுக்கள், மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அமைச்சர்கள் அப்பதவிகளை வகிப்பதை ஆட்சேபிக்கும் மனுக்கள், இரண்டு இடைக்காலத் தடையுத்தரவுகள், அதில் ஒரு தடையுத்தரவை ஆட்சேபிக்கும் மனு, இவ்விவகாரங்கள் சம்பந்தமான இடையீட்டு மனுக்கள் என, ஏகப்பட்ட மனுக்கள் உயர்நீதிமன்றத்திலும் மேல்நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.   

இவ்வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இரு விடயங்களில் மாத்திரம் இடைக்காலத் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே சில மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.   

நவம்பர் எட்டாம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலானது இலங்கை அரசமைப்புக்கு முரணானது என்று கூறி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணையைஆரம்பித்திருந்த உயர்நீதிமன்றம் அந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியிருந்த நிலையில் நேற்று இறுதித் தீர்ப்பை அறிவித்திருக்கின்றது.

அரசமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தை கலைத்ததைத் தவறுஎன்று குறிப்பிட்டுள்ள உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம்,அவ்வாறு நான்கரை வருடத்துக்கு முன்னர் அவ்வாறு நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது என்று கூறியுள்ளது. இது உண்மையில் மிகவும் மகிழ்ச்சிகரமானதே. 


தீர்ப்பு யாருக்குச் சாதமாக அல்லது பாதகமாக இருந்தாலும், இவ்விடயத்துக்கு ஒரு தீர்வு கிடைத்திருக்கின்றது என்பது மிக முக்கியமானது. அத்துடன், இலங்கையின் அரசமைப்புக்கு வியாக்கியானம் கூறும் அருகதை, உயர்நீதிமன்றத்துக்கு மட்டுமே இருக்கின்றது என்றபடியால், யாரும் இத்தீர்ப்பை (அது எதுவாக இருப்பினும்) விமர்சிக்க முடியாது.   

ஆனால், நீதிமன்றத் தீர்ப்புக்கள், நாடாளுமன்ற நடைமுறைகளின் மூலம், நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இடியப்பச் சிக்கலான இந்த அரசியல் இழுபறிகள் எல்லாம் முடிவுக்கு வந்து, நாட்டில் ஸ்திரத்தன்மையும் அமைதியும் ஏற்பட்டு விடாது என்றே கருத முடிகின்றது.   

நாட்டில் இன்றைய நிலைவரப்படி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோ, ஐக்கிய தேசிய முன்னணியோ, பொதுஜன பெரமுன கட்சியோ, இந்த நாட்டு மக்களின் நலன்களுக்கு, முன்னுரிமை அளிப்பதாக இப்போதெல்லாம் எண்ண முடியாமல் இருக்கின்றது. 

மைத்திரிபால சிறிசேனவும் சரி, மஹிந்த ராஜபக்‌ஷ, ரணில் விக்கிரமசிங்கவும் சரி மூவருமே, தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதை, நிரூபிக்கவே முனைகின்றனர். இதற்காக, முயலின் நான்காவது காலை வெட்டவும் தயங்கமாட்டார்கள் என்பது பட்டவர்த்தனமானது.   

இன்று ஏற்பட்டிருக்கின்ற இந்த அதிகாரச் சண்டை மிக மோசமானதும் அற்பத்தனமானதும் ஆகும். என்றாலும், இதில் வெற்றிபெறும் தரப்பே அடுத்த ஒன்று அல்லது இரண்டு தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான சாதக நிலையைப் பெறும் என்ற அடிப்படையில், இது சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுனவுக்கு இடையிலான வாழ்வா சாவாப் போட்டியாகும். எனவேதான், என்னதான் மானம் போனாலும், எந்த வெட்கக் கேடான காரியத்தைச் செய்தேனும், இதில் வெற்றிபெறவே பிரயத்தனங்களை மேற்கொள்ளும். நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் வேட்கை தீரப் போவதில்லை.   

முஸ்லிம் அரசியல்  

இதற்கிடையில் பெரும் அரசியல் வித்தகர்களாகக் காட்டிக் கொள்ளும் அரசியல் தலைமைகளால் வழிநடத்தப்படும் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் கட்சிகள் எந்தவித நிபந்தனையோ, எழுத்துமூல வாக்குறுதிகளோ இன்றி, ரணில் விக்கிரமசிங்க தரப்புக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு நிற்கின்றன. மற்றைய முஸ்லிம் கட்சியான தேசிய காங்கிரஸின் தலைவர், கடிதம் எழுதிக் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றார்.   

முஸ்லிம் அரசியல், முஸ்லிம் மக்களுக்கான அரசியலாக இல்லை என்பதையும் அது கட்சிகளின்,  அதன் தலைவர்களின் அரசியல் ஆடுகளமாகவே கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. இதைவிட உறைக்கும்படி, காலத்தால் சொல்ல முடியாது. ஆனால், முஸ்லிம் மக்களில் ஒரு கூட்டம், ஜனநாயகம் என்ற மாயைக்குள்ளும் ரணில் எதிர்ப்பு என்ற கருத்துக்குள் இன்னுமொரு கூட்டமும் அறிவிலித்தனமாக மூழ்கிக்கிடக்கின்றது.   

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அப்படியில்லை. அவர்களுக்கும் வெளிப்படையான, மறைமுக நிகழ்ச்சி நிரல்களும் சுயஇலாப நோக்குகளும் இருந்தாலும் கூட, கொஞ்சமாவது சமூகத்துக்காகப் பேசுவதைக் காண முடிகின்றது. எல்லாச் சந்தர்ப்பங்களையும் அவர்கள் ஏதோவோர் அடிப்படையில் பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள். நேற்று முன்தினம் இடம்பெற்ற, ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணை வாக்கெடுப்பிலும் அவர்கள் அவ்விதமே செயலாற்றியிருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வேறு தரப்பினரின் நிகழ்ச்சி நிரல்களுக்காகச் செயற்படுவதாக, ஒரு விமர்சனம் இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும், தமிழ்த் தேசியம், பேரம் பேசுவதற்கான ஒரு வாய்ப்பை வருகின்ற போது, அதன் தலைவர், தனக்கு அமைச்சுப் பதவி வேண்டுமென்று கேட்கவில்லை; இப்போதிருக்கின்ற அமைச்சுடன் இன்னுமோர் அமைச்சையும் சேர்த்துத் தாருங்கள் எதிர்காலத்தில் என்று, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் கோரப் போவதும் இல்லை. எத்தனை பிரதியமைச்சு, எத்தனை தேசியப் பட்டியல் எம்.பிகளைத் தருவீர்கள் என்று கோரியதாக, எந்த வரலாற்றுப் பதிவுகளும் இல்லை. ஆனால், முஸ்லிம் அரசியலில் நிறையவே இப்பண்புகள் இருக்கின்றன.   

தேர்தல் வரை  

அண்மைக்காலத்தில் அரசியலிலும் நாட்டின் மற்றைய எல்லாக் கட்டமைப்புகளிலும் ஏற்பட்ட அதிர்வுக்கு, இரு பிரதான காரணங்கள் எனலாம். ஒன்று, பிரதமரை மாற்றியது; மற்றையது, நாடாளுமன்றத்தைக் கலைத்தது. இதில், பிரதான பிரச்சினைக்கான சட்ட ரீதியான தீர்ப்பு, நேற்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதற்குள், மற்றைய விவகாரத்துக்கான தீர்வும் மறைந்திருக்கின்றது.    

ஆனால், நேற்று வெளியாகியுள்ள தீர்ப்பு, அடுத்த வருடம் ஜனவரியில் வெளியாகவுள்ள நீதிமன்றத் தீர்ப்புகளோ, சமகாலத்தில் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற நடைமுறைகளோ இந்த நாட்டில் அமைதியைக் கொண்டு வருமா? இந்த அரசியல் இழுபறிகள் எல்லாம் முடிவுக்கு வருமா என்பதுதான் இப்போது நம்முன் இருக்கின்ற வினாவாகும்.   

இதற்கான விடை, ‘இல்லை’ என்பதாகவே இருக்கும். நாம் மேலே குறிப்பிட்டது போல, இது தீவிர அதிகாரச் சண்டை என்றபடியால், நீதிமன்றத் தீர்ப்பு, ஒருவேளை சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெற்றால், அதையும் தாண்டி அடுத்த தேர்தல் நடைபெறும் வரைக்கும் இந்த குழப்பங்களும் அரசியல் இழுபறிகளும் தொடர்ந்தும் இடம்பெறப் போகின்றன என்றே அனுமானிக்க முடிகின்றது. 

நேற்றைய தீர்ப்புக்குப் பின்னரான வெற்றிக் களிப்புகள், விரக்தியின் வெளிப்பாடான ஆத்திரத்தாலும் தூண்டப்படும் சம்பவங்களில் இருந்து இந்த அமைதியின்மைளுக்கு ஊக்கமருந்தளிக்கப்படலாம்.   
நீதிமன்றத் தீர்ப்பை நாம் மதிக்கின்றோம். ஆனால், நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இன்றைய இழுபறிகளுக்கு, நாடாளுமன்ற நடைமுறைகளின் ஊடாகத் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை இல்லாது போயிருக்கின்றது. 

அவ்வாறே, நீதிமன்றத் தீர்ப்பு, நாட்டில் முழுமையான, தீர்க்கமான அமைதியைக் கொண்டு வந்துவிடும் என்றும் கூற முடியாத நிலையே காணப்படுகின்றது. ஆகவே, இன்னும் சில மாதங்களுக்கு, இலங்கை அரசியல்களம் கொந்தளிப்பான வானிலையையே கொண்டிருக்கும்.   

இந்த நாட்டு மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமை உடையவர்கள், இறைமைக்கும் வாக்குரிமைக்கும் சொந்தமான மக்களாவர். தங்களது ஆட்சிக்காக, பதவி ஆசைக்காக மக்களைச் சற்றும் கருத்திலெடுக்காது காய்நகர்த்துகின்ற அரசியல்தலைமைகள் அல்லர். அதுபோல, பணத்துக்காகக் கட்சிமாறும் மக்கள் பிரதிகளும் அரசியல் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் அருகதையற்றவர்கள்.   

அப்படியாயின், இறுதித் தீர்ப்பாளர்களான மக்களே இதற்குத் தீர்வு கண்டு, தமது ஆணையின் ஊடாக உறுதியான ஆட்சியொன்றை உருவாக்கும் வரைக்கும் இந்த இழுபறிகள் தொடரவே செய்யும். அதாவது, என்னதான் மாற்றங்கள் நடந்தாலும் தேர்தலுக்கான வாக்கெடுப்பொன்று நடக்கும் வரைக்கும் இந்த முக்கோண குழிபறிப்பு தொடரவே சாத்தியம் இருக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .