2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஈரான் தொடர்பில் வலுவற்றுப் போகும் ஐ.அமெரிக்காவின் கொள்கை

Editorial   / 2018 நவம்பர் 12 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜனகன் முத்துக்குமார்

ஈரானுக்கு எதிராக, ஐக்கிய அரேபிய அமைப்பொன்றைத் தோற்றுவிப்பதில் ஐக்கிய அமெரிக்கா தோல்வியடையும் என்றே கருதவேண்டியுள்ளது. அரேபிய நாடுகள், தமக்குள்ளேயே பல பிராந்திய, உள்நாட்டுச் சவால்களைச் சந்திக்கின்ற இந்நிலையிலும், ஈரான் அப்பிராந்தியத்தில் வலுவான பிராந்திய வல்லரசாகத் தொடர்ந்து இருக்கும் நிலையிலும், குறித்த அமைப்பைத் தோற்றுவித்தலில் அவ்வளவு விரைவில் ஐ.அமெரிக்கா வெற்றிபெறும் என கருதமுடியாது.

ஐ.அமெரிக்கா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், ஜோர்டான், பார்வையாளர்களாக மொராக்கோ, லெபனான் ஆகியவற்றின் பங்களிப்புடன், எகிப்தின் வடமேற்குப் பிராந்தியமான மார்லா மாதோவில் உள்ள மொஹம்மட் நாகுப் இராணுவத் தளத்தில் இராணுவ, கடற்படை, விமானம், சிறப்புப் படைகளும், கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய இராணுவ ஒத்திகை ஒன்றை நடாத்தியிருந்தன. குறித்த ஒத்திகை, நவம்பர் 16ஆம் திகதி வரை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த இராணுவ ஒத்திகையானது, அரபு இராணுவத்தை ஒன்றிணைத்த “அரபு நேட்டோ”வின் எழுச்சிக்கான ஒரு பேச்சுவார்த்தைக் களத்தை உருவாக்கும் ஒரு செயற்பாடாகவே காட்டப்பட்டதுடன், சுவாரசியமாக, கட்டார், ஓமான் ஆகியன இந்தப் பயிற்சியில் பங்குபெறவில்லை. மேலும், இவ்விராணுவ செயற்பாடு நடைபெறும் இடமான எகிப்து, பிராந்தியத்திலேயே மிகப்பெரும் அரபு இராணுவம் கொண்ட அரபு நாடு என்பதுடன், இதுவே அரபு நேட்டோவின் தலைமையகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த அரபு நேட்டோவின் நோக்கம், இஸ்‌ரேலை எதிர்ப்பது நிச்சயமாக அல்ல. இதுவே, அரேபிய நாடுகள் சமீபத்தில் இஸ்‌ரேலுடன் தங்கள் உறவுகளை இயல்பாக்குவதை நோக்கி நகர்வதன் நோக்கமாக இருக்கின்றது. உண்மையில், ஐ.அமெரிக்கா, இந்நேட்டோ உடன்பாட்டை எட்டுதல் மூலம், இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பாதுகாப்பு நிலைமையை மத்திய கிழக்கில் செயற்படுத்தல் - அவ்வுடன்படிக்கையின் படி, படிப்படியாக இஸ்‌ரேல் - மத்திய கிழக்கில் நட்புடன் செயற்பட முடிவெடுத்து, பிராந்தியத்தில் புதியதொரு பாதுகாப்பு, இராணுவ ஒழுங்கை உருவாக்குவதற்கான முனைப்புகளைக் கொண்டிருத்தலே, குறித்த இராணுவக் கட்டமைப்பை நிறுவுவதன் நோக்கமாக கொள்ளமுடியும். இதன் பிரகாரம், இவ்விராணுவப் பாதுகாப்பு அமைப்பின் இறுதி இலக்கு, ஈரானிய, பலஸ்தீனிய, லெபனானின் எதிர்ப்பு சக்திகளுக்கு எதிராக, புதியதோர் ஒழுங்கின் அடிப்படையில் இராணுவ தலைமையொன்றை நிறுவுதலே ஆகும்.

சர்வதேச ஆய்வாளர்கள் குறித்த இராணுவக் கட்டமைப்பை 2019க்குத் தள்ளிவைத்தல் அவசியம் என்றே கூறுகின்றனர். இதற்குக் காரணம், சவூதி அரேபியா, ஜமால் கஷோக்ஜியின் படுகொலை வழக்கில் சம்பந்தப்பட்டு இருக்கின்றமை, கட்டார் நெருக்கடி, யேமன் போர்,  பலஸ்தீனப் பிரச்சினை உட்பட பிராந்தியப் பிரச்சினைகளில் அரபு நாடுகள் கொண்டுள்ள உள்நாட்டு வேறுபாடுகள் என்பனவே இப்பிற்போடலுக்கான காரணமாகும்.

மேலும், தர்க்க ரீதியாக சவூதி அரேபியா, எகிப்து ஆகியவை, “பயங்கரவாதம்” என்பதன் மீது வேறுபட்ட விளக்கங்களைக் கொண்டுள்ளன. சவூதி அரேபியா, யேமனில் உள்ள முஸ்லிம் சகோதரத்துவத்துடன் ஒத்துழைக்கையில், எகிப்து சுன்னி இஸ்லாமிய அமைப்பை, பயங்கரவாதக் குழுவாகக் கருதுகிறது. சவூதி அரேபியா, கட்டார் ஆகியவை, இவை தொடர்பில் தொடர்ச்சியாகவே எதிர்க்கருத்துகளைக் கொண்டுள்ளன.

அரசியல் ரீதியாக, சிரியா, ஈராக், லெபனான் உள்ளிட்ட அரபு நாடுகளில் ஈரானின் செல்வாக்கு, குறித்த இராணுவக் கட்டமைப்பை அமைப்பதற்கு மேலும் தடைகளை உருவாக்குகின்றது.

ஐ.அமெரிக்கா, சவூதியின் பிராந்திய நலன்களுக்காக, யேமன் யுத்தத்தில் சவூதிக்கு ஆதரவு அளிக்கும் படியாக மத்திய கிழக்கைக் கோருகின்றது. இதற்கு மத்திய கிழக்கின் எல்லா நாடுகளும் ஒத்துழைக்கப்போவது கிடையாது. மேலும், அல் ஹொடெய்டா துறைமுகத்தைத் திரும்பப் பெறுதல், கட்டார் உடனான நல்லிணக்கம் ஆகியவை உட்பட, பிராந்தியத்தின் ஏனைய பிரச்சினைகளும், அரபு நாடுகளால் உடனடியாகத் தீர்க்கக்கூடிய ஒன்றல்ல. இவற்றின் மத்தியிலேயே, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பலஸ்தீனப் பிரச்சினையைப் தீர்ப்பதற்கு “நூற்றாண்டின் உடன்படிக்கை” என்று அறியப்படும் நிகழ்ச்சி நிரலொன்றுக்கு, குறித்த கட்டமைப்பொன்றை நிறுவுதல் குறித்துக் கரிசனை செலுத்துகிறார்.

எது எவ்வாறாக இருக்கின்ற போதிலும், இவ்வொப்பந்தத்தின் மூலப்பகுதி, ஈரானைத் தடுக்கும் இராணுவக் கட்டமைப்பொன்றை நிறுவுதல் ஆகும். ஏனெனில், மறுபுறம் ஈரான், அதன் மூலோபாயக் கூட்டணியை வலுப்படுத்தியதன் மூலம், இப்பிராந்தியத்தில் அதன் நிலைப்பாட்டைத் தொடர்ச்சியாக ஊக்குவித்து வருகின்றமையே ஆகும்.

ஈரானுக்கு எதிராக ஐ.அமெரிக்கா தனி ஒரு வல்லரசாகப் போராடுவதில் தோல்வியே கண்டுள்ளது. ஈரானுக்கு எதிரான தடைகள் என்பதைத் தாண்டி, வேறெதுவும் காணப்படவில்லை. இது, ஐ.அமெரிக்காவின் இராஜதந்திரத் தோல்வியே ஆகும். இந்நிலையிலேயே, அரேபிய அமைப்பொன்றைத் தோற்றுவிப்பதன் மூலம், பிராந்திய மட்டத்தில் ஈரானைத் தோற்கடிக்கமுடியும் என ஐ.அமெரிக்கா நம்புகின்ற போதிலும், இன்னமுமே அதற்கான சாத்தியப்பாடுகள் பெருமளவில் எட்டப்படவில்லை என்பதே இப்போதைய நிலைமையாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .