2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

உள்ளூராட்சி கனவுகள்

மொஹமட் பாதுஷா   / 2017 ஒக்டோபர் 27 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தேர்தலொன்று நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. முதலில் மாகாண சபைகளுக்கான தேர்தலா அல்லது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலா நடைபெறும் என்பது, நிச்சயிக்கப்படாத விடயமாகவே இதுவரையும் இருந்தது.   

இன்றிருக்கின்ற ‘நிலையை’ வைத்துப் பார்க்கின்ற போது, தேர்தலொன்றுக்கு முகம் கொடுப்பதற்கு, அரசாங்கம் சற்றுத் தயங்குவது பட்டவர்த்தனமாகத் தெரிகின்றது.   எனவேதான், மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கான ஒரு நகர்வை, அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.   

அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தோல்வியடைந்ததன் அடிப்படையில், அந்த நோக்கம் முழுமையாகக் கைக்கூடாத போதிலும், அதன்பின்னர் நிறைவேற்றப்பட்ட, மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின்படி, மாகாண எல்லை மீள் நிர்ணயம் என்ற பெயரில், சில மாதங்களுக்காவது தேர்தலை இழுத்தடிப்பதற்கு, அரசாங்கத்துக்கு முடிந்திருக்கின்றது.   

ஆனால், உள்ளூராட்சி அதிகார சபைகள் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டதாலும், அதற்கு முன்னரே எல்லை மீள்நிர்ணயப் பணிகள் முடிவடைந்திருந்தமையாலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை, சாக்குப்போக்குச் சொல்லித் தாமதிக்க முடியாத கட்டத்துக்கு அரசாங்கம் வந்துள்ளது.   

அந்த வகையில், முதலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் சாத்தியங்கள் உள்ளன. தேர்தலொன்றை நடத்துவதற்கான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே இருக்கின்றது. அதை 19ஆவது அரசமைப்புத் திருத்தமும் மீள வலியுறுத்துகின்ற ஒரு சூழலில், அரசாங்கத் தரப்பிலிருந்தே பெரும்பாலும் “இதோ தேர்தலை நடத்தப் போகின்றோம்” என்ற குரல்கள் கேட்கின்றன.   

அந்தவகையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 27ஆம் திகதி (அல்லது அதற்கு முன்னர்) நடாத்துவதற்கு, பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருக்கின்றார்.   

விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரான பைஸர் முஸ்தபாவும் ஜனவரியில் தேர்தல் இடம்பெறும் என்ற தோரணையில் கருத்து வெளியிட்டுள்ளார். ஆனால், தேர்தல்கள் தொடர்பாக அறிவிக்கும் அதிகாரம் பெற்றவரான, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய, அவ்வாறான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்பது இங்கு கவனிப்புக்குரியது.   

இம்முறை, உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல், இலங்கையில் முதன்முதலாக வட்டார எல்லைகளை மையமாகக் கொண்டு, புதிய (கலப்பு) தேர்தல் முறைமையின் கீழ் இடம்பெறவிருக்கின்றது.   

முன்னதாக, உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது, அதில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென, ஆரம்பத்தில் கூறிவந்த பிரதான முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அந்தச் சட்டமூலத்துக்கு கண்ணைமூடிக் கொண்டு ஆதரவளித்து, அமோக வெற்றியடையச் செய்திருந்தனர்.   

இதற்கு விளக்கம் கேட்டபோது, “அதில் சில சீரமைப்புகளைச் செய்வதற்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். ஆனால், அது எவ்வாறான வாக்குறுதி என்றோ, அவ்வாக்குறுதிகள் இப்போது சட்டமாகியுள்ள  சட்டமூலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்றோ அவர்கள் விளக்கம் தரவில்லை.   

உள்ளூராட்சி சபைகளின் எல்லைப் பிரிப்புகளில் முரண்பாடுகள், 25 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவம், மக்கள் தொகைக்கு ஏற்றவாறு உறுப்பினர்கள் தொகை வகுக்கப்படாமை, ஒற்றை வாக்குச்சீட்டில் கலப்புத் தேர்தலுக்கான வாக்களிப்பு என முஸ்லிம்களுக்குப் பாதகமான அல்லது சிக்கலான விடயங்கள் புதிய திருத்தச் சட்டமூலத்தில் உள்ளடங்கியுள்ளனவென அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.   

அத்துடன், தேர்தல் திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர், செய்துமுடிக்க வேண்டிய பல பணிகளில், தடங்கல்களும் தாமதங்களும் இருக்கின்றன. “இதோ தேர்தலை நடத்தப் போகின்றோம்” என்று அரசாங்கம் சொன்னாலும், ஒன்றிணைந்த எதிரணி குறித்த பயங்களும், புதிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்குதல், தரமுயர்த்தல், அதன் உறுப்பினர்களைத் தீர்மானித்தல், வர்த்தமானி வெளியிடல் போன்ற இதர விடயங்களிலும் இறுதி முடிவை எடுத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே அரசாங்கம் இருக்கின்றது.  

எனவே, இப்பணிகளை எல்லாம் சம்பந்தப்பட்ட அரசாங்கம் நிறைவேற்றிய பின்னரே, ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய, தேர்தல் திகதியைத் தீர்மானிப்பார்.  

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில், முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பாதகமான நிலைமைகளுக்குப் பரிகாரம் தேடுவதற்கான எந்த முயற்சியையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸோ, மக்கள் காங்கிரஸோ, தேசிய காங்கிரஸோ அல்லது ஏனைய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களோ எடுக்காமல், பெருந்தேசியக் கட்சிகளைப் போலவே, வட்டாரங்களில் வேட்பாளர் தேடும் படலத்தை ஆரம்பித்திருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.   

புதிய தேர்தலுக்கான வட்டார எல்லைகள் என்ன? உள்ளூராட்சி எல்லைகள் என்ன? இத்தேர்தலில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் பிரதேசங்களில் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு தக்கவைத்துக் கொள்ளப் போகின்றோம்? பெண்கள் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு கையாளப் போகின்றோம் என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல், தடல்புடலாகத் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருப்பது, முஸ்லிம் அரசியல், இன்னும் முழுமைத்துவம் பெறவில்லை என்பதையே காட்டுகின்றது.   

குறிப்பாக,சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் சிலர், தம்மை ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துக்கான வேட்பாளராக அறிமுகம் செய்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.   

தேர்தலில் வாக்கெடுப்பு எவ்வாறு நடைபெறும்? தேர்தல் முறைமையின் ஆழ அகலங்கள் என்னவென்பதை அறவே கற்றுக்கொள்ளாத முகங்களாகவே, இவர்களில் அநேகர் தெரிகின்றனர்.   

பேஸ்புக்கில் ‘லைக்’ எடுப்பதற்கு, நடாத்தப்படும் ஒரு போட்டிக்காக, படங்களைப் பதிவேற்றுவது போல, தனிநபர்கள் தங்களைத் தாங்களே சுயபிரகடனம் செய்து கொள்வது, இளைஞர்களின் துடிப்பைக் காட்டிலும், முஸ்லிம் அரசியலின் பக்குவப்படாத தன்மையையே வெளிப்படுத்தி நிற்கின்றது.  

உள்ளூராட்சி சபைத் தேர்தலை, இவ்வருடம் டிசெம்பர் ஒன்பதாம் திகதி நடத்துவதற்கே தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தது. 

ஆனால், எல்லை மீள் நிர்ணயக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளின்படி, உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள், வட்டார எல்லைகள், அதிகரிக்கப்பட்ட உறுப்பினர்கள் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.   

இதனை அடுத்தவாரம் வெளியிடுவோம் என்று பல தடவை, இதற்கு முன்னர் கூறியிருந்த உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, கடந்த இரு தினங்களுக்கு முன்னரும், அதே அறிவிப்பை விடுத்திருக்கின்றார்.   

உண்மையில், அவ்வாறான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில் அதாவது, பந்தைத் தேர்தல் ஆணைக்குழுவின் கையில் கொடுப்பதில், அரசாங்கத்துக்கு பல சிக்கல்களும் தடங்கல்களும் ஏற்பட்டிருப்பதாகச் சொல்ல முடியும்.   

இதில் பிரதானமானது, புதிய உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்கும் கோரிக்கையும், தரமுயர்த்தும் கோரிக்கைகளுமாகும். இவ்வாறான கோரிக்கைகள் முஸ்லிம் தரப்பினாலும் தமிழ்த் தரப்பினாலும் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இதில் நியாயங்கள் இருக்கின்றன என்றாலும், உடனடியாக எல்லாக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதில் அரசாங்கத்துக்கு நடைமுறைச் சவால்கள் உள்ளன.   

அந்தவகையில், நுவரெலியா மாவட்டத்தில் புதிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்குவதற்கான கோரிக்கையை, அமைச்சர் மனோ கணேசன் முன்வைத்திருந்தார்.   

புவியியல் அடிப்படையிலும் சனத்தொகை அடிப்படையிலும் இந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது என்ற வகையில், அரசாங்கம் மேற்படி பிரதேசங்களில், புதிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. இப்பிரதேச சபைகளை வழங்கினால் மற்றைய பிரதேச சபைக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டி வருமே என்பதைத் தவிர, வேறு சிக்கல்கள் ஏதும் அரசாங்கத்துக்கு இருப்பதாகத் தெரியவில்லை.   

அதுமட்டுமன்றி, அமைச்சர் மனோ கணேசன், இதில் விடாப்பிடியாக நிற்பதால், அந்தக் கோரிக்கையை நிறைவேற்றாமல் விடவும் முடியாது.   

இதேவேளை, சாய்ந்தமருது பிரதேசத்துக்கான உள்ளூராட்சி சபைக் கோரிக்கை, இன்று வேறு ஓர் உருவெடுத்திருக்கின்றது. இந்தக் கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருவது மட்டுமன்றி, நியாயமானதாகவும் இருக்கின்றது. அந்த அடிப்படையில், இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும் மும்முரமாக, சாய்ந்தமருது பிரதேச சபையைப் பெற முயற்சி செய்தன.   

அது கைகூடி வரும் நிலையில், குறிப்பிட்ட ஒரு கட்சி சார்பான, உள்ளூர் அரசியல் நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட, ஒரு மோசமான நகர்வின் காரணமாக, பிரதேச சபைக் கனவு இன்று கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் அப்பிரதேச மக்கள் விசனமடைந்திருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.   

சமகாலத்தில் ஈ.பி.டி.பி கட்சியும் இதேபோன்ற கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றது. ஆனால், டக்ளஸ் தேவானந்தா எம்.பியின் இக்கோரிக்கைகள், ஒரு பிரதேசத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், பொதுவாக வடக்கு, கிழக்கை அடிப்படையாகக் கொண்டவையாகக் காணப்படுகின்றன.   

அதன்படி, மருதங்கேணி, கண்டாவளை, ஒட்டுசுட்டான், மடு ஆகிய பிரதேசங்களுக்குப் புதிதாக உள்ளூராட்சி சபைகளை உருவாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மானிப்பாய், சுன்னாகம், சங்கானை, நெல்லியடி சபைகளின் தரத்தை நகர சபையாக உயர்த்துமாறும் அக்கட்சி கோரியுள்ளது.   

அதுமட்டுமன்றி, திருகோணமலை, செங்கல்லடி, களுவாஞ்சிக்குடி, கிண்ணியா, மூதூர் மற்றும் வவுனியா உள்ளூராட்சி மன்றங்களைத் தரமுயர்த்துமாறும் கோறளைப்பற்று மத்தியையும் கோரளைப்பற்றையும் தனித்தனி பிரதேச சபைகளின் கீழ் கொண்டுவருமாறும் டக்ளஸ், அரசாங்கத்தைக் கோரியிருக்கின்றார்.   

எவ்வாறிருப்பினும் நாமறிந்த வகையில், இந்தக் கோரிக்கை மிகவும் அண்மையிலேயே முன்வைக்கப்பட்டுள்ளதால் அதை அரசாங்கம் உடன் நிறைவேற்றுவது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை.   

ஆனாலும், எல்லா மக்களினதும் கோரிக்கைகளையும் சம்மதிப்புடன் கவனத்தில் கொண்டு, நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இருக்கின்றது. குறிப்பாக, நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் சாய்ந்தமருது பிரதேச சபைக் கோரிக்கையும் சில காலத்துக்கு முன்னதாக முன்னகர்த்தப்பட்ட நுவரெலியாவில் புதிய சபைகளை உருவாக்கும் கோரிக்கையும் முன்னுரிமை அடிப்படையில் முன்கூட்டி நிறைவேற்றப்பட வேண்டியவை எனக் குறிப்பிட முடியும்.   

இன்னும் சொல்லப்போனால், இவ்விரு கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுக்காமல் மலையகத்தில் மனோ கணேசன், கிழக்கில் ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் போன்றோருக்குக் கட்சி அரசியல் செய்வது, பெரும் சவாலாக அமையும்.   

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, நிர்ணயிக்கப்பட்டுள்ள எல்லை மற்றுமுள்ள விடயங்கள் தொடர்பில், இன்னும் இற்றைப்படுத்தப்படாத பிரச்சினைகள் இருக்கத்தக்கதாக, பிரதேச சபைகளை உருவாக்குகின்ற விடயமும் அரசாங்கத்துக்குப் பெரும் சிக்கலைத் தோற்றுவித்திருக்கின்றது.   

பிரதேச சபைகளை வழங்கும் போது, ஒருதரப்புக்கு வழங்கிவிட்டு, இன்னுமொரு தரப்பைப் புறக்கணிப்பது மிகவும் ஆபத்தான விளைவுகளைக் கொண்டு வரும் என்றபடியால், இறுதித் தீர்மானமொன்றுக்கு வரமுடியாமல் அரசாங்கம் தர்மசங்கடத்துக்கு உள்ளாகியுள்ளது. அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்ட மறுநாளே, மேற்குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் எனலாம்.   

எது எவ்வாறாக இருப்பினும், அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போட இயலாது. ஜனநாயகத்தின் பெயர்சொல்லி, ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம், ஜனநாயகத்தின் முக்கிய கூறான வாக்களிக்கும் உரிமையைப் பிரயோகிக்கும் காலத்தை இழுத்துக் கொண்டு போக முடியாது.   

சமகாலத்தில், மாகாண சபைத் தேர்தலை ஒத்திப்போடுவதற்கு மேற்கொண்ட நகர்வுகளால், உள்நாட்டிலும் நாட்டுக்கு வெளியிலும் விமர்சனங்களை எதிர்நோக்கியுள்ள இன்றைய அரசாங்கம், அடுத்த வருடம் மார்ச் மாதம், மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறுவதற்கு முன்னதாக, இலங்கையில் ஜனநாயகம் நடைமுறையில் இருப்பதையும் மக்கள் ஆணை தமக்கு உண்டென்பதையும் நிரூபித்துக் காட்ட வேண்டியிருக்கின்றது. எனவே, பெப்ரவரி நடுப்பகுதிக்கு முன்னதாக, தேர்தல் நடைபெறும் சாத்தியமிருக்கின்றது.   

ஆனால், இன்னும் தேர்தல் குறித்த அறிவிப்பை அரசியல்வாதிகளே வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்களே தவிர, அதுவிடயத்தில் அதிகாரமுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் உத்தியோகபூர்வமாக அறியத்தரவில்லை.  

 நிலைமை இவ்வாறிருக்கையில், இப்புதிய தேர்தல் முறைமை தொடர்பில் இருக்கின்ற பாதகங்களை நீக்குவதற்கும் மக்களைத் தெளிவுபடுத்துவதற்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒரு சிறுமுயற்சியையேனும் செய்யாமலிருப்பதும், தேர்தல் எப்போது, எவ்வாறு நடைபெறும் என்றோ, முஸ்லிம் கட்சிகள், இணைந்தா, தனித்தா போட்டியிடும் என்றோ, அறிவிக்காத சூழலில், உள்ளுர் முஸ்லிம் இளைஞர்கள் தங்களை ஒரு வேட்பாளராகச் சுயபிரகடனம் செய்ய விளைவதும் ஆரோக்கியமானதல்ல.  

உள்ளூராட்சி சபை என்பது ஒன்றும்தெரியாத அரசியல்வாதிகள் ‘பழகிப் பார்க்கும்’ ஒரு களமல்ல. மாறாக, மாகாண சபை, நாடாளுமன்றம் என அடுத்த மேல் சபைகளுக்கு அனுப்புவதற்காக, மக்கள் பிரதிநிதிகளை அடையாளம் காண்பதற்கான அரங்கமாகும்.   
அத்துடன், ஏனைய இனங்களைப் போலவே, முஸ்லிம்களின் ஆகச் சிறிய அதிகார மையமாகவும் காணப்படுகின்றது. 

எனவே, இக்கனவை நிறைவேற்றுவதற்கான தேர்தல் தொடர்பான முன்னாயத்தங்களை முஸ்லிம்கள் புத்திசாலித்தனமாக அணுகுவதுடன், பொருத்தமான ‘முகம்’களை வேட்பாளர்களாக நிறுத்தவும் நடவடிக்கை எடுத்தல் காலத்தின் தேவையாகும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .