2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஒன்றிணையும் கோட்டா எதிரிகள்

கே. சஞ்சயன்   / 2018 ஜூன் 15 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

விரும்பியோ விரும்பாமலோ, ஊடகங்களில் இப்போது அதிகம் உலாவுகின்ற ஒருவராக மாறியிருக்கிறார் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ.   

அடுத்த ஆண்டு இறுதியில், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டியதொரு சூழலில், அதில் போட்டியிடும் வாய்ப்புள்ளவர்களில் கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னணி இடத்தில் இருக்கிறார்.    
ஆனால், அவரை வேட்பாளராக நிறுத்துவதற்கு, ராஜபக்‌ஷ விரும்பவில்லை என்றும், ராஜபக்‌ஷ குடும்பத்துக்குள் இது தொடர்பாகக் கருத்து முரண்பாடுகள் இருப்பதாகவும், அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன.  

“இன்னமும் ஒன்றிணைந்த எதிரணியின் வேட்பாளரைத் தீர்மானிக்கவில்லை. அதற்கான தருணம் வரும் போது, மக்களின் விருப்பத்தைக் கருத்தில் கொள்வேன்” என்று, மஹிந்த ராஜபக்‌ஷ கூறியிருக்கிறார்.  
அண்மைக் காலமாக ஜனாதிபதி வேட்பாளராகக் கோட்டாபய ராஜபக்‌ஷவை நிறுத்த வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தும், பல்வேறு பிரசார முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அவரே சிறந்த வேட்பாளர் என்ற துதிபாடல்களும் இடம்பெறுகின்றன.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள சிலர் கூட, அவரே தமது கட்சியின் சார்பில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர் என்று பகிரங்கமாகக் கூறும் அளவுக்கு, கோட்டாவைச் சூழவும் பல விம்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.  

இவ்வாறான முனைப்படைந்து வந்த போதும், மஹிந்த ராஜபக்‌ஷ மாத்திரம் அமைதியாக இருந்து வந்தார். அந்தக் கள்ள மௌனம், சிலருக்குச் சந்தேகத்தைக் கொடுத்தது.   

இப்படியான நிலையில் தான் மஹிந்த ராஜபக்‌ஷ, கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்‌ஷவைக் களமிறக்குவது பற்றி, கருத்தில் கொள்வதற்குத் தயார் என்று பச்சைக் கொடியைக் காண்பித்திருக்கிறார்.  

அவர் அவ்வாறு காண்பித்திருக்கும் பச்சைக்கொடி, கோட்டாபய களமிறங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற சாதாரண மக்களுக்குத் தெரிவிக்கப்பட்ட செய்தியா அல்லது தனது மௌனத்தால் அதிருப்தி கொண்டுள்ள ராஜபக்‌ஷ வட்டத்தைத் திருப்திப்படுத்தும் செய்தியா என்று பார்க்க வேண்டியுள்ளது.  

ஒரு பக்கத்தில், ஒன்றிணைந்த எதிரணியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக, கோட்டாபய களமிறக்கப்பட வேண்டும் என்ற கருத்துத் தீவிரமாக வலியுறுத்தப்படுவது போலவே, அவருக்கு எதிரான பிரசாரங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.  

கோட்டாபய, தமக்குச் சவாலான வேட்பாளர் அல்ல என்று ஐ.தே.கவினர் கூறுவது இயல்பானது. ஏனென்றால், அவரைப் பற்றி அஞ்சுவதாகக் காட்டிக் கொண்டால், அது ஐ.தே.கவின் பலவீனமாகப் பார்க்கப்படும். அதனால் ஐ.தே.கவினர் அவரைக் குறிவைத்துத் தாக்கிக் கொண்டே, அவர் ஒரு பொருட்டே அல்ல என்று அலட்சியமாகக் கூறிவருகின்றனர்.  

அதேவேளை, ஒன்றிணைந்த எதிரணி தரப்பில் இருந்து, கோட்டாபயவுக்கு எதிரான கருத்து வெளியாகிக் கொண்டிருப்பது தான் சிக்கலானது.  

ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகள், கோட்டாபயவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்குத் தயாராக இல்லை. குறிப்பாக, வாசுதேவ நாணயக்கார இதை எதிர்த்து வருகிறார்.  

கோட்டாபய ராஜபக்‌ஷவை நிறுத்துவதற்குத் தயார் என்று மஹிந்த ராஜபக்‌ஷ கூறிய பின்னர், “ஒன்றிணைந்த எதிரணியில் நாங்களும் இருக்கிறோம், யாரும் தனித்து முடிவெடுக்க முடியாது. கோட்டாபய ராஜபக்‌ஷவை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறியிருந்தார் வாசுதேவ நாணயக்கார.  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு, அவர்களின் தெரிவாக இருப்பது, சமல் ராஜபக்‌ஷ தான்.  

கோட்டாபயவின் கையில் நிறைவேற்று அதிகாரம் கொடுக்கப்பட்டால், அவர் தலைகால் புரியாமல் அதனைப் பயன்படுத்துவார் என்ற அச்சம் இடதுசாரிகளிடம் இருக்கிறது. 

ஏற்கெனவே, கோட்டாபய ராஜபக்‌ஷ, பாதுகாப்புச் செயலாளர் பதவியில் இருந்த போது, அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்தினார் என்பது அறிந்த விடயம். எனவே தான், கோட்டாபயவுக்கு ஆதரவு கொடுக்க இடதுசாரிகள் தயாரில்லை.  

இந்தநிலையில், கோட்டாபய ராஜபக்‌ஷ ஆபத்தான திசையில் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் என்று கலாநிதி தயான் ஜயதிலகவும் எச்சரித்திருக்கிறார்.  

இது முக்கிய கவனத்தைப் பெற்றிருக்கின்ற விடயம். ஏனென்றால், கோட்டாபய ராஜபக்‌ஷ முதலில், உருவாக்கிய ‘எலிய’ அமைப்பை ஆரம்பிப்பதில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவர் தயான் ஜயதிலக.  
மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் இருந்தபோது, ஐ.நாவுக்கான தூதுவராக ஜெனீவாவிலும், பாரிஸிலும் பணியாற்றியவர், பின்னர் மஹிந்த அரசாதங்கத்துடன் முரண்பட்டுக் கொண்டு இராஜதந்திரப் பணியில் இருந்து ஒதுங்கியிருந்தார்.  

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான அலையைக் கட்டியெழுப்புவதற்கு தயான் ஜயதிலகவும் பங்காற்றியிருந்தார். ஆட்சிமாற்றத்தை வரவேற்ற அவர், சிறிது காலத்திலேயே மஹிந்த ராஜபக்‌ஷவின் பக்கம் சாய்ந்து கொண்டார்.  

கோட்டாபய ராஜபக்‌ஷவின் பிரசாரக் கூட்டங்களில் அடிக்கடி தென்பட்ட தயான் ஜயதிலக, இப்போது ‘லக்பிம’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “கோட்டாபய ராஜபக்‌ஷ ஆபத்தான திசையில் பயணிக்கிறார்” என்று குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.  

பண முதலைகளும், கடும்போக்குவாத இராணுவ அதிகாரிகளுமே அவரைச் சுற்றியிருக்கிறார்கள் என்பதை அவர் ஒரு குற்றச்சாட்டாக முன்வைத்திருக்கிறார்.  

தயான் ஜயதிலக குறிப்பிட்டுள்ளது போன்று, கோட்டாவுக்கு நெருக்கமான செல்வந்தர் ஒருவர், வரும் ஓகஸ்ட் மாதம் புதிதாக ஆங்கில, சிங்கள நாளிதழ்களை வெளியிடப் போவதாகவும் செய்திகள் வெளியாகின்றன. கோட்டாவின் அரசியல் வெற்றியை உறுதிப்படுத்தவே இந்த ஊடகங்களை அவர் ஆரம்பிக்கப் போவதாக கூறப்படுகிறது.  

அதேவேளை, கோட்டாபய ராஜபக்‌ஷ தவறான பாதையில் பயணிக்கிறார் என்ற தயான் ஜயதிலகவின் கருத்து, பரவலான ஈர்ப்பைப் பெற்றிருக்கிறது.  

வாசுதேவ நாணயக்கார போன்ற இடதுசாரிகளின் எதிர்ப்பைக் கூட அவ்வளவாகக் கண்டு கொள்ளாதவர்களும், தயான் ஜயதிலகவின் கருத்தை உன்னிப்புடன் பார்க்கின்றனர்.  

தயான் ஜயதிலகவின் இந்தக் கருத்து வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான், அவரை ரஷ்யாவுக்கான தூதுவராக நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின.  

அந்தச் செய்தி வெளியானபோது, பலருக்கும் ஆச்சரியம்; மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு நெருக்கமான தயான் ஜயதிலகவை, அரசாங்கம் ஏன் ரஷ்யாவுக்கான தூதுவராகத் தெரிவு செய்திருக்கிறது என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.  

கோட்டாபய ராஜபக்‌ஷவின் பாதை தவறானது என்ற தயான் ஜயதிலகவின் விமர்சனம் வெளியான பின்னர், இந்தக் கேள்விக்கு புதிய விளக்கம் கொடுக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை.  

அதேவேளை, மஹிந்த ராஜபக்‌ஷவும் கூட, கோட்டாபயவின் ‌வாயை மூட வைப்பதற்கு, இதுபோன்ற வழிகளைக் கையாண்டிருக்கலாம். மஹிந்தவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் தான், இப்போது கோட்டாபயவை ‌போட்டியில் நிறுத்தக் கூடாது என்பதை வலியுறுத்துகிறார்கள். எனவே மஹிந்த, ‘பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டுகிறாரா’ என்ற சந்தேகம் இங்கு வரத்தான் செய்கிறது.  

எது எவ்வாறாயினும், கோட்டாபய ராஜபக்‌ஷவைப் பொறுத்தவரையில், ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவது மாத்திரமன்றி, வெற்றியைப் பெற்றுக்கொள்வது கூடப் போராட்டமாகத் தான் இருக்கப் போகிறது.  

ஏனென்றால், எந்தளவுக்குக் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவான அணி பலமடைகிறதோ, அதேபோன்று அதற்கு எதிரான விமர்சனங்களைக் கொண்ட தரப்பும் பலமடைகிறது.  

இப்படியான நிலையில், கோட்டாபய ஒன்றிணைந்த எதிரணியின் வேட்பாளராகக் களமிறங்கினாலும், முழுமையான ஆதரவு கிடைக்காது என்பதற்கான அறிகுறிகளே வெளிப்படுகின்றன.  

அமெரிக்காவும் அவரை எதிர்க்கும் நிலைப்பாட்டில் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன. இதுவும் கோட்டாவுக்குப் பாதகமானது தான்.  

இந்த நிலையில், அதிகாரம் தனது கையை விட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காக, மஹிந்த ராஜபக்‌ஷவே, கோட்டா எதிர்ப்பு அணியை வலுப்படுத்தினாலும் ஆச்சரியப்பட முடியாது.  

இப்படிப்பட்டதொரு சூழலில், ஜனாதிபதி கனவு என்பது கோட்டாபய ராஜபக்‌ஷவைப் பொறுத்தவரையில், அவ்வளவு இலகுவான ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால், அவர் உள்ளுக்குள்ளேயும் வெளியுலகத்திலும் பலமான எதிரிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .