2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கஞ்சாக் கடத்தலும் வடக்கின் மனநிலையும்

புருஜோத்தமன் தங்கமயில்   / 2019 ஜனவரி 30 , மு.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம்- கொழும்புக்கிடையில் அடிக்கடி பயணப்படும் நண்பரோடு, பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் போது, பேசிக் கொண்டிருந்தேன்.   

அவரின் பயணப்பை முழுக்க, சிறிய பூட்டுகளால் பூட்டப்பட்டிருந்தது. பயணப்பையில் சில ஆடைகளைத் தவிர பெறுமதியான பொருட்கள் எதுவும் இருப்பது மாதிரித் தெரியவில்லை. அவ்வாறு இருக்க, இத்தனை பூட்டுகள் இந்த பயணப்பைக்கு ஏன் போட்டிருக்கிறார் என்று சந்தேகம்? அவரிடமே கேட்டேன்.  

“...பாக்குக்குள் பெரிசாக ஒன்றும் இல்லை. சில உடுப்புகள்தான் இருக்கு. ஆனால், இப்ப வாகனங்களில் கஞ்சா கடத்திறாங்கள். அடிக்கடி பொலிஸ் மறிச்சு, செக் பண்ணுது. இவங்கள், கடத்திற கஞ்சாவை, சனத்தின்ர லக்கேஜூக்குள்ள போட்டு, சிக்கலுக்குள்ள தள்ளினாலும் தள்ளிடுவாங்கள். அதுதான், பாக்கில் இத்தனை பூட்டு...” என்றார்.  

விமானப் பயணங்களில், இவ்வாறான அச்சுறுத்தல்கள் எழுவது இயல்பு. இலகுவாகத் திறக்கக்கூடிய பயணப்பொதிகளை கடத்தல்காரர்கள், கையாள்வதும், அதனால் பயணிகள் சிக்கலுக்குள் மாட்டுவதும் உண்டு. அப்படி, சிறைகளில் நாள்களைக் கழித்தவர்கள் பலர். 

அவ்வாறான பயத்தை யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான பஸ் பயணம் ஏற்படுத்தி இருக்கின்றது என்றால், அது தொடர்பில் நாம் கவனம் செலுத்தியாக வேண்டும்.  

வடக்குக் கடற்கரையோரங்கள் பூராகவும் இலங்கைக் கடற்படையின் பெரும் கண்காணிப்பின் கீழ் இருக்கின்றது. அப்படியான கட்டத்திலும், நாளாந்தம் பெருமளவான கஞ்சா போதைப்பொருள், வடக்கு கடற்பரப்பில் வைத்துக் கைமாறி, நாட்டுக்குள் வருகின்றது.   

கிட்டத்தட்ட, வடக்கை கஞ்சாக் கடத்தலின் மத்திய நிலையமாக மாற்றுவதற்கான கட்டங்கள் பெரும் திட்டமிடலோடு மேற்கொள்ளப்படுகின்றன. போதைப்பொருள் கடத்தல் ‘மாபியா’க் குழுக்களின் அதிகார மய்யம் கொழும்பில் இருந்தாலும், இடைத்தரகர்களைக் கொண்டு, கடத்தல்காரர்களுக்கான கையாட்களைத் தயார்ப்படுத்தும் வேலைகள், வடக்கில் முன்னெடுக்கப்படுகின்றன.  

போர்ச் சிதைவுகளை முழுமையாகத் தாங்கி நிற்கின்ற தமிழ் மக்களை, ஊழலும் மோசடியும் அற்ற அர்ப்பணிப்பான தூரநோக்குள்ள வேலைத்திட்டங்களோடு முன்னோக்கிக் கொண்டுவர வேண்டும். போருக்குப் பிறகான கடந்த பத்து ஆண்டுகளில், அதற்கான முனைப்புகளை அரச தரப்போ, தமிழ்ச் சூழலோ பெரியளவில் முன்னெடுத்திருக்கவில்லை. ஒப்புக்காகச் சில வேலைத்திட்டங்களில் நின்று, படம் காட்டும் கட்டங்கள் மாத்திரமே நிகழ்ந்திருக்கின்றன.   

வடக்கு- கிழக்கிலுள்ள தமிழ் மக்களிடையே ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது, என்றைக்கும் இல்லாத அளவிலானது. சமூக ஒடுக்குமுறைகள் தலைவிரித்தாடிய காலத்துக்கு ஒப்பான ஒரு நிலையொன்று, தற்போது ஏற்பட்டிருக்கின்றது.   

பொருளாதார வசதி உள்ளவர்கள் இன்னும் இன்னும் அதனை அதிகரித்துக் கொண்டிருப்பதும், வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ளவர்களின் நிலை நாளாந்தம் படுமோசமாக மாறுவதும் கடந்த பத்து ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்திருக்கின்றது. இது, சமூக முரண்பாடுகளை அதிகரித்துள்ளதோடு, சமூக ஒழுக்கத்தையும் சிதைத்துவிட்டிருக்கின்றது.  

குறிப்பாக, போரால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களையும் போராடியவர்களையும் போருக்குப் பின்னராக காலம் புறக்கணித்து விட்டிருக்கின்றது. அவர்கள் குறித்து, தமிழ்ச் சூழலின் அதிகாரவர்க்கமோ, யாழ்ப்பாண மய்யவாத அரசியல் அரங்கோ, அக்கறையைப் பெரியளவில் வெளிப்படுத்தவில்லை. அவர்களோடு ஒத்தோடும், புலம்பெயர் தரப்புகளும் கவனத்தில் கொள்ளவில்லை.   

ஆட்கள் இல்லாத ஊர்களில் எல்லாம், கோவில்களைப் பெருப்பித்துக் கட்டுவதிலேயே புலம்பெயர் தேசத்தின் பெருமளவு நிதி, தற்போது செலவாகிக் கொண்டிருக்கின்றது. அதன், ஒருபகுதியைப் பொருளாதார நெருக்கடியோடு அல்லாடும் மக்களை நோக்கித் திருப்பி விட்டிருந்தாலே, பல குடும்பங்கள் வாழ்ந்திருக்கும். இதுவோர் உதாரணம்தான்.  

அப்படியான நிலையில், பொருளாதார ஏற்றத்தாழ்வும் சமூக முரண்பாடுகளும் அதிகரிக்கும் சமூகமான்றை, எதிர்த்தரப்புகளால் இலகுவாகக் கையாள முடியும். அதன் ஒருகட்டமே, கஞ்சா கடத்தலின் வழியில், வடக்குக் கரையோரங்கள் திணறிக் கொண்டிருக்கின்றன.   

கஞ்சா கடத்தலின் இடைத்தரகர்களாக இருப்பவர்களை, மக்களால் இலகுவாக அடையாளம் காண முடிகின்றது. அவர்களின் ஆசை வார்த்தைகளுக்குப் பிடிகொடுக்காமல் ஓடிக்கொண்டிருந்தாலும், வறுமை, ஒதுக்கப்பட்ட மனநிலையின் விளிப்பில், இடைத்தரகர்களின் கை ஓங்கிவிடுகின்றது. பலரும் கடத்தல் கூலிகளாக மாற்றிவிடுகின்றார்கள். அப்படி மாறிவிட்ட பலரும் வடக்கில் நாளாந்தம் பொலிஸாரிடம் மாட்டிக்கொள்கிறார்கள். சிறைகளில் மாதக் கணக்கில் அடைக்கப்படுகிறார்கள்.  

வடக்கின் ஏதோவொரு கரையோரத்தில், இத்தனை கிலோ கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது என்ற செய்தி ஊடகங்களில் நாளாந்தம் வந்து கொண்டிருக்கின்றது. ஆனால், அந்தச் செய்தியை, செய்தியாகவே கடக்கும் சூழலுக்கு, மக்களும் தயாராகிவிட்டார்கள்.   

இவ்வாறான அசட்டை நிலை, எங்கிருந்து தோற்றம் பெறுகின்றது? சீரிய கட்டுப்பாடும் சமூக ஒழுக்கமும் போதிக்கப்பட்டு, பேணப்பட்ட போராட்ட வடிவத்தின்பால் நின்ற சமூகமொன்று, அதிலிருந்து பிறழ்ந்திருக்கின்ற நிலையில், அதைச் சரியாக்க வேண்டிய பொறுப்பு, அனைவருக்குமாக மாறுகின்றது.  

 ஆனால், அதற்கான ஏற்பாடுகளைச் சார்ந்து, யாரும் சிந்திப்பதாக இல்லை. தேர்தல் அரசியல் நிகழ்ச்சி நிரலின் போக்கில், சமூகமொன்று தன்னுடைய அரசியலையும் அடையாளத்தையும் தொலைக்கும் கட்டத்துக்கு வந்திருக்கின்றது.  

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வடக்கில் சில இளைஞர்கள், கஞ்சாக் கடத்தல் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அழுத்தத்தால், அந்த இளைஞர்களைப் பொலிஸார் விடுவித்ததாகவும் தென்இலங்கை ஊடகமொன்று இனவாத வதந்தி பரப்பியது.   

அந்த வதந்தியை எடுத்துக் கொண்டு, யாழ்ப்பாணத்து மய்யவாத அரசியல் அரங்கு, எந்தவித பொறுப்புணர்வும் இன்றி, எவ்வாறு செயற்பட்டது என்பதைக் கண்டோம். தேர்தல் அரசியலில் எதிரிகள் என்று கருதும் நபர்களை இழிவுபடுத்துவதற்காக, யாரை வேண்டுமானாலும், பலிகொடுப்பதற்குத் தமிழ் சமூகம் தயாராகிவிட்டதா என்கிற சந்தேகம் அப்போது ஏற்பட்டது.   

ஏனெனில், தென்இலங்கை ஊடகத்தின் இனவாத அடிப்படையிலான அந்த வதந்தியை, உண்மையாகத் தமிழ் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தவர்களில், தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் முக்கியமானவர்கள். அவர்களிடம் சமூகப் பொறுப்பு என்பது சிறிதளவேனும் இருந்திருந்தாலே, அந்தச் செய்திக்குப் பின்னால் இருக்கின்ற உண்மை நிலையை, கொஞ்சமாகவேனும் ஆராய்ந்து அறிய முற்பட்டிருப்பார்கள்.   

ஆனால், அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல், தேர்தல் அரசியல் புள்ளியில் நின்று யோசித்துச் செயற்பட்டார்கள்; சிவில் உடையில் ஆயுதங்களோடு உலாவியவர்களை கேள்விக்குள்ளாக்கிய ‘அப்பாவி இளைஞர்கள்’ மீது, கஞ்சாக் கடத்தல்காரர்கள் எனும் போர்வையை, தென்இலங்கையோடு சேர்ந்து போர்த்தினார்கள்; எதிரிகளின் திட்டமிடலுக்குப் பலியானார்கள்.  

இன்னொரு பக்கம், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வடக்குக் கடற்பரப்பும், குறிப்பிட்டளவான இளைஞர்களும் போதைப்பொருள் கடத்தல் ‘மாபியா’க்களின் கூலிகளாக, வடக்கில் மாறிவிட்டார்கள் என்பதை ஏற்றுக்கொண்டுதான், ஆகவேண்டும்.   

ஆனால், அந்த நிலையை ஒரு சமூகமாக தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டும். பொலிஸாருக்கோ, அவர்களைக் கட்டுப்படுத்தும் தலைமைக்கோ, அதாவது தென்இலங்கைக்கோ கஞ்சாக் கடத்தலை வடக்கிலிருந்து ஒழிக்கவேண்டிய தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதை எதிர்கொள்வதற்கும் சமூகத்தின் மீதான பிறழ்வுகளைச் சரிசெய்வதற்குமான பொறுப்பு தமிழ்ச் சூழலுக்கு நிச்சயமாக உண்டு.  

பாரதூரமான விடயங்களையெல்லாம் செய்திகளாக மட்டும் எடுத்துக்கொண்டு கடக்கும் கட்டத்துக்கு தமிழ் மக்கள் தயாராகிவிட்டார்களா என்கிற கேள்வி பல காலமாகவே உண்டு. அதைச் சமூகப்பொறுப்பற்ற தன்மையை ஊக்குவிக்கும் தரப்புகள், மகிழ்வோடு செய்வதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.   

அவ்வாறான நிலையில், பாரிய குற்றச் செயல்களை நோக்கி மக்கள் திரும்புவதை இலகுவான ஒன்றாக, வழக்கமான ஒன்றாக எடுத்துக்கொள்ளும் மனநிலை வீச்சம் பெறுகின்றது. அவ்வாறான நிலையொன்று, கஞ்சாக் கட்டத்தல் கூலிகளாக மாறிவிட்டவர்களிடமும் அவர்களைச் சார்ந்தோரிடமும் ஏற்பட்டிருக்கின்றதோ என்கிற அச்சம் எழுகின்றது.   

சமூக ஒழுக்கத்துக்கு அப்பாலான ஒரு விடயத்தை அதாவது, குற்றமொன்றைச் செய்வதால் சமூகத்தால் பாரியளவில் ஒதுக்கப்படும் சூழல் ஏற்படுகின்றது என்கிற பயம், மக்களை நேர்வழிப்படுத்துவதற்கு உதவும். ஆனால், ஏற்கெனவே, சமூகத்தால் ஒதுக்கப்பட்டு, கைவிடப்பட்டவர்களுக்கு அவ்வாறான பயமொன்று ஏற்படுமா என்கிற கேள்வியும் உண்டு. அவ்வாறான கட்டத்தில்தான், தமிழ்ச் சமூகம் தன்னுடைய பொறுப்பைக் கடைப்பிடிக்கும் கடப்பாட்டை, வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகின்றது.   

குறிப்பிட்டளவானர்களைக் குற்றங்களை நோக்கித் தள்ளியமைக்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், கஞ்சாக் கடத்தல்கள் போன்ற குற்றச்செயல்களுக்குக் கூலிகளாக மாறிவிட்டவர்களையும் கஞ்சாப் போதைக்குள் தத்தளிக்கும் இளம் தலைமுறையையும் சரியான வழிகளைக் கையாண்டு, காப்பாற்றிக் கரை சேர்க்க முடியும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .