2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கருணாநிதியின் திருவாரூர் தொகுதி: திருப்புமுனை நோக்கி இடைத்தேர்தல்?

எம். காசிநாதன்   / 2019 ஜனவரி 07 , மு.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருவாரூர் இடைத்தேர்தல், தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்துமா என்ற கேள்வி, தீபோல் சூடாகப் பரவிக் கொண்டிருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி போட்டியிட்ட தொகுதி; ஒரு முறை அல்ல, இரு முறை வெற்றி பெற்ற தொகுதி. அதிலும், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில், வெற்றி பெற்ற இந்தத் திருவாரூர் தொகுதி, கருணாநிதியின் சொந்த ஊர் உள்ள தொகுதியாகும்.  

கஜாப் புயல் பாதிப்பால், அங்குள்ள மக்கள்,வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள். ஆளும்கட்சியாக இருக்கும் அ.தி.மு.கவுக்கு நிவாரணப் பணிகளை முறையாகச் செய்யத் தெரியவில்லை என்ற கோபம், மக்கள் மத்தியில் இருக்கிறது. கஜாப் புயலுக்கு உரிய, பேரிடர் நிவாரண நிதியை வழங்கவில்லை என்று, மத்திய அரசின் மீதும் இந்த மக்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். 

எதிர்க்கட்சியான தி.மு.கவுக்கோ, அ.தி.மு.கவிலிருந்து பிரிந்து வந்த டி.டி.வி தினகரனுக்கோ அந்தப் பிரச்சினை இல்லை என்றாலும், திருவாரூர் வாக்காளர்கள் எப்படி வாக்களிக்கப் போகிறார்கள்? என்பதில் சற்று சிக்கல் நிலை உள்ளது. 

திருவாரூர் தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளராக, ஸ்டாலின் நிற்பார் என்ற செய்தி, தி.மு.கவுக்குப் பலத்தை கொடுக்கவில்லை.மாறாக, அக்கட்சி இடைத் தேர்தலைப் பார்த்து பயப்பிடுகிறது என்ற ஒரு தோற்றத்தை வாக்காளர் மத்தியில் கொடுத்து விட்டது. 

ஸ்டாலின் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ள நிலையில், அடுத்த கட்டமாகக் களம் இறக்கப்படும் தி.மு.க வேட்பாளருக்கு, முதல் சுற்றிலேயே மக்கள் மத்தியில், ‘ஸ்டாலினுக்குப் பதில் இவரா’ என்ற கேள்விக்குறி எழும். அது, தி.மு.கவின் தேர்தல் பிரசார வியூகத்தில், தலைவலியை உருவாக்கும். 

திருவாரூர் கொம்யூனிஸ்ட் வாக்கு வங்கி, காங்கிரஸ் கூட்டணி போன்றவற்றால் தெம்பாகவே களத்துக்குச் செல்லும் தி.மு.கவின் தேர்தல் வியூகம், நிச்சயம் ‘ஆர்.கே.நகர் தேர்தல் வியூகம்’ போல் இருக்க முடியாது. வாக்காளர்களை, மற்றவர்கள் போல், போட்டி போட்டுக் கொண்டு கவனித்தால் மட்டுமே களத்தில் நிற்க முடியும், வெற்றி பெற முடியும் என்று, தி.மு.க முன்னணித் தலைவர்களுக்கே தெரிகிறது. ஆகவே, புதிய ‘திருவாரூர் வியூகத்தை’த் தயாரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தி.மு.க இருக்கிறது. 

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை உருவாக்க வேண்டிய நேரத்தில், திருவாரூர் இடைத் தேர்தல் தி.மு.கவைப் பொறுத்தமட்டில் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய தேர்தல் அல்ல. வாழ்வா, சாவா என்ற பிரச்சினையை, இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை தி.மு.க எதிர்கொண்டுள்ளது. ஏனென்றால், ஆர்.கே நகர் போல், இன்னொரு தோல்வியைத் திருவாரூரில் தி.மு.க சந்தித்தால், ஸ்டாலினின் தலைமையும் கேள்விக்குறியாகும். ஸ்டாலின் வழி நடத்தப் போகும் கூட்டணிக்கும் ‘இமேஜ்’ பாதிப்பை ஏற்படுத்தி விடும்.   

அ.தி.மு.கவிலிருந்து பிரிந்த, டி.டி.வி தினகரனைப் பொறுத்தமட்டில், ஆர். கே நகர் தொகுதியை விட, திருவாரூர் தொகுதி வலுவுள்ள தொகுதி என்றே நினைக்கிறார். ஆகவே, “எங்களுக்கும் தி.மு.கவுக்கும்தான் போட்டி” என்று, இப்போதே அறிவித்து, தேர்தல் பிரசாரத்துக்குத்  தயாராகி விட்டார். 

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், தினகரன் தனியாக அணி அமைப்பதற்குப் போதிய கட்சிகள் இல்லை. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி போன்றோர், அவரிடமிருந்து பிரிந்து விட்ட நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கூட்டணிக்குத் தலைமை தாங்க முடியுமா என்ற கேள்வி அவருக்கு எழுந்துள்ளது. 

திருவாரூரில் அவர் வாங்கும் வாக்குகள், அந்த ஸ்தானத்தை அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற ரீதியில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார். தவிர்க்க முடியாத நெருக்கடியால், அ.மு.மு.கவை அ.தி.மு.கவுடன் இணைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், “நான்தான் திருவாரூரில் அதிக வாக்கு வங்கியிருக்கிறேன். ஆகவே, அ.தி.மு.க தலைமை எனக்கே தரப்பட வேண்டும்” என்று வலியுறுத்தவும் இந்தத் திருவாரூர் தொகுதி உதவும் என்றே, தினகரன் கணக்குப் போடக் கூடும். 

பெங்களூரில் சசிகலாவைச் சந்தித்து விட்டு, “துரோகிகளுடன் எப்படி இணைய முடியும்” என்று அ.தி.மு.கவுடன் இணைவது குறித்துக் கேள்வி கேட்டுள்ள தினகரன், “அ.தி.மு.க - அ.மு.மு.க இணைப்புப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது” என்பதை ஒப்புக்கொண்டது போல்தான் தெரிகிறது. 

தினகரனைப் பொறுத்தமட்டில், இணைப்பை வெறுக்கவில்லை; எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரைத்தான் வெறுக்கிறார் என்றே தெரிகிறது. ஆகவே, தினகரன் தனது நாடாளுமன்றக் கூட்டணிக்காகவும் தனது அரசியல் எதிர்காலத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும் குறிப்பாகத் தன்னுடைய சொந்த, காவிரி டெல்டா பகுதியில் நிலை நிறுத்திக் கொள்ள முனைவதே, வியூகமாக இருக்கும். ஆர்.கே நகர் போல், ‘20 ரூபாய் நோட்டு’ வியூகமா, புதிய வியூகம் எதையும் வைத்துள்ளாரா என்பது, இனிமேல்தான் தெரியவரும்.   

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.கவைப் பொறுத்தமட்டில், அக்கட்சிக்குத் திருவாரூர் இடைத்தேர்தல் ஆட்சிக்கு இருக்கும் செல்வாக்கை நிரூபிக்க, அரியதோர் சந்தர்ப்பம். கஜா புயல் நிவாரணங்கள் அளித்தது, மத்திய அரசாங்கம் புதிதாக 1,146 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பது போன்றவை திருவாரூர் இடைத் தேர்தலுக்கு உதவும். 

பொங்கல் பண்டிகைக் காலமாகிய இந்த நேரத்தில், வாக்காளர்களைக் கவனிப்பதும் பெரிய சிக்கலாக இருக்காது. ஏனென்றால், பண்டிகை உதவியா அல்லது வாக்களிக்க உதவியா என்பது அ.தி.மு.கவுக்கு மட்டுமல்ல, பணம் கொடுக்க நினைக்கும் அனைத்துக் கட்சிகளுக்குமே ஒரு வரப்பிரசாதமாக அமையும். 

பணம் கொடுப்பதைப் பிடித்தால், “இது பொங்கல் அன்பளிப்பு” என்று சொல்லும் வாய்ப்பை, நான்கு நாள் பொங்கல் பண்டிகை நேரத்தில் நடைபெறப் போகும் தேர்தல் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. 

இது தவிர, பா.ஜ.கவுடன் கூட்டணி வைப்பதற்கு, திருவாரூர் இடைத் தேர்தல் உதவியாக இருக்கும். ஆட்சியிலிருந்தும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை, ஏற்கெனவே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க கோட்டை விட்டது. இந்தத் தேர்தலிலும் அப்படியொரு நிலை ஏற்பட்டால், அ.தி.மு.கவுடன் கூட்டணி வைக்கலாம் என்று கருதும் பா.ஜ.கவைச் சற்றுப் பின்வாங்க வைக்கும். 

ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தியும் எதிர்க்கட்சிதான் ஜெயிக்கும் என்றால், இந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதிகளைப் பிடிக்க முடியாது என்று, பா.ஜ.க தலைவர்கள் எண்ணலாம். ஆகவே, அப்படியொரு நிலை ஏற்பாடாமல் தடுக்க, திருவாரூரில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நோக்கியே அ.தி.மு.க தேர்தல் வியூகம் அமைக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

அத்தனை அமைச்சர்களும் அங்கு களம் இறங்கலாம். அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்கலாம். ஆளுங்கட்சி என்றாலே, இடைத் தேர்தல் அவர்கள் விரும்பும்படிதான் நடக்கும் என்ற குற்றச்சாட்டு, வழக்கம் போல் எழலாம். 

கூட்டணி வைப்பதற்கு, என் தலைமையிலான அ.தி.மு.கதான் உண்மையான அ.தி.மு.க என்று கூறுவதற்கு, தினகரனைத் தள்ளிவிட்டு, அ.மு.மு.கவை அ.தி.மு.கவுடன் இணைப்பதற்கு என்று எல்லா வகையிலும் உதவ வேண்டும் என்பதே, எடப்பாடி பழனிசாமியின் திருவாரூர் இடைத் தேர்தல் வியூகமாக இருக்க முடியும்.  

ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு வியூகங்களுடன் இருக்கின்ற நேரத்தில், 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேணர்தல் அறிவிக்க வேண்டிய தேர்தல் ஆணையகம், ஏன் ஒரேயொரு திருவாரூருக்கு மட்டும், இடைத்தேர்தலை அறிவித்தது என்ற கேள்வி எழாத திக்கு இல்லை என்றே சொல்லலாம். அதுவும், மத்திய அரசாங்கம் கஜாபுயல் நிவாரண நிதியாக, 1,146 கோடி ரூபாயை அறிவித்த ஒரு மணி நேரத்தில், திருவாரூர் இடைத் தேர்தலைத் தேர்தல் ஆணையகம் அறிவித்தது. 

இப்படி அறிவிக்கப்படுவது புதிதல்ல. முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை, முதல் நாள் கொடுத்து விட்டு, மறுநாள் ஆர்.கே நகர் இடைத் தேர்தலை, இதேதேர்தல் ஆணையகம்தான் அறிவித்தது. இந்த, ஒரு தொகுதி இடைத் தேர்தல் அறிவிப்பின் ஒரே பின்னணியில் பாரதீய ஜனதா கட்சியின் வியூகம் இருக்கிறது.  திருவாரூர் இடைத் தேர்தலில் தி.மு.க தோற்றால் பா.ஜ.கவைச் சகட்டு மேனிக்கு விமர்சிக்கும் தி.மு.க, தலையில் ஒரு குட்டு வைக்கவும், காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால் இதுதான் நிலைமை என்று எச்சரிக்கவும் உதவும். எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க தோற்றால், இனி அ.தி.மு.க ஒன்றுபடுவது மட்டுமே ஒரே வழி என்று அறிவுறுத்த முடியும். 

தி.மு.க வெற்றி பெற்றாலும் இதே அறிவுரையை, எடப்பாடி பழனிசாமிக்கும், தினகரனுக்கும் கொடுக்க முடியும். தமிழ்நாட்டில் ஒன்றுபட்ட அ.தி.மு.கவுடன் கூட்டணியா, அ.தி.மு.கவும்- தி.மு.கவும் இல்லாத புதிய கூட்டணியா என்பதை முடிவு செய்யவும் பா.ஜ.கவுக்கு  ஏதுவாக அமையும்.

அதனால்தான் 20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை நடத்தாமல் திருவாரூருக்கு மட்டும் இடைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. ஜனவரி 28 ஆம் திகதி வரும் தேர்தல் முடிவு, தமிழக அரசியல் கட்சிகளின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை நிச்சயம் ஏற்படுத்தும்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .