2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கேட்டதோ தமிழீழம்; கிடைத்ததோ ஜீப் வண்டிக் கதை

அதிரதன்   / 2017 டிசெம்பர் 19 , மு.ப. 02:42 - 1     - {{hitsCtrl.values.hits}}

கேட்டதோ தமிழீழம், கிடைத்ததோ ஜீப் வண்டிக் கதையை பலரும் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்.   

இதுதான் இலங்கை வரலாற்றில் அமிர்தலிங்கம் தலைமையில், தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் வெற்றிபெற்று, ஆனந்தசங்கரி, நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி, கிளிநொச்சிக்கு ஜீப் வண்டியில் வந்தவேளை, பேசப்பட்ட கதையே இது.   

நடைபெறவுள்ள உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல், பெண்களை அரசியல் தலைமைத்துவத்துக்காக அறிமுகப்படுத்தும் முதல்படியானது. அவர்களை இனங்காணும் வழியை ஏற்படுத்துவதும் இதன் முதல் நோக்கம்.   

தங்களுடைய இருப்புகளிலும் கொள்கையிலும் இருந்து மாறவில்லை என்பதைக் காட்டுவதற்காக, இந்தத் தேர்தலைச் சரியான முறையில் தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.   

 தமிழருடைய தனிநாட்டுக் கோரிக்கைகள் அதற்கான நியாயமான போராட்டங்கள், அர்ப்பணிப்புகள், இழப்புகள் இவையெல்லாம் தாண்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.   

ஆனால், வெறுமனே ஆசனப் பங்கீட்டுக்கான கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுக் கட்சிகள் மாறியிருப்பது தமிழ் மக்களுக்கு செய்கின்‌ற துரோகமாகவே கருதப்படுகின்றது.   

தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் இலங்கை அரசும், ஜனாதிபதியும் சமஷ்டித் தீர்வு தர மாட்டேன் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கின்ற சந்தர்ப்பத்தில், சம்பந்தன் சமஷ்டியை அடிப்படையாகக் கொண்ட தீர்வு வெளியாகின்றது என்று சொல்லியிருப்பது தமிழரசுக் கட்சி எதை அடிப்படையாகக் கொண்டு இதனைத் தெரிவிக்கின்றது.  

இந்தப் பேச்சுகளுக்குப் பின்னால் டெலோ, புளொட் போன்ற கட்சிகள் தமிழரசுக் கட்சியுடன் எந்தவிதப் பேச்சும் இல்லை என்று சொல்லிவிட்டுப் பின்னர்,      மீண்டும் கொழும்புப் பேச்சில் சுமுகமான தீர்வு கிடைத்தது என்று சொல்லுவது தங்களுடைய கட்சி இருப்புகளையும், தங்கள் ஆசனங்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையா? அல்லது தமிழ் மக்களின் இருப்புகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பேச்சுவார்த்தையா என்பதைத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவே வேண்டும்.  

இரண்டாவது விடயம், ரணில் மூலமாக சுமந்திரன் பேசுவதால், ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பின்னால் தமிழரசுக் கட்சி நிற்கின்றதா? அப்படியானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பேரில் முன்கதவில் நின்று தமிழ்த் தேசிய வாதத்தைப் பேசிக் கொண்டு, பின்கதவால் பேரினவாதக் கட்சிகளுக்குத் துணை போகின்றதா என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.  

அந்தத் தெளிவுபடுத்தலினூடாக டெலோ, புளொட் போன்ற கட்சிகள் தாங்கள் இனியும் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியாது என்று தெரிவித்துக் கொண்டு வெளியேறாமல் இருக்கின்றார்கள் என்றால் தமிழரசுக் கட்சியின் கொள்கைகளை இவர்கள் ஆமோதித்துச் செல்கிறார்களா?   

எனவே, தமிழ் மக்கள் சின்னங்கள் அல்ல பிரச்சினை என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். எமது உரிமைகள் சரியாகக் கிடைக்கின்றனவா? எந்த நோக்கத்துக்கான எமது போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன என்பதைத் திரும்பிப் பார்க்க வேண்டியது இதில் முக்கியம்.   

எமது மாணவர்களின் பல்கலைக்கழகத் தரப்படுத்தல், எமது பிரதேசங்களில் குடியேற்றம், எமது மக்களின் உரிமைகள், தொழில்வாய்ப்புகள் பறிக்கப்பட்டமை போன்ற விடயங்களுக்காகவே போராட்டங்களுக்கான வித்து, தந்தை செல்வா அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.  

அஹிம்சைப் போராட்டம் பயனளிக்கவில்லை என்பதால் தான் ஆயுதம் தூக்கி எமது இளைஞர்கள் போராடினார்கள். கடந்த 70 ஆண்டுகள் அஹிம்சையிலும், ஆயுத ரீதியிலும் போராடியவர்களுக்குச் சர்வதேச அனுக்கிரகங்களுடன் கிடைக்கப்பெறுகின்ற தீர்வுகள், முன்மொழியப்படுகின்ற தருவாயிலே வெறுமனே அதிகாரத்துக்காகவும், பதவிக்காகவும், கதிரைக்காகவும் தமிழ் மக்களின் உரிமைகளை இராஜதந்திர ரீதியாக, சர்வதேச அணுகுமுறைகளையும் புறந்தள்ளி, தமது சொந்த, சுயநல விருப்பு வெறுப்புகளுக்குள் தமிழ் மக்களின் உரிமைகளைப் பலியிடுவதென்பது, தமிழ் மக்களுக்குச் செய்யும் அப்பட்டமான துரோகமேயாகும்.  

இந்த இடத்தில்தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போதிலும், புலிகளுக்குப் பிறகு அந்த நோக்கத்தை அவர்கள் முன்னெடுக்கவில்லை.    

எனவே, மாற்றுத் தலைமையின் ஊடாகப் புலிகளின் சித்தாந்தங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. தமிழ் மக்களின் உரிமைக்காகத்தான் ஆயுதப் போராட்டம் இடம்பெற்றது.   

இன்று அரசியல் இருப்புகளில் இருப்பவர்கள் போராட்டத்தின் பெயரால் தங்கள் சொந்த வாழ்க்கையை வளம்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். சர்வதேச ரீதியாகவும் தேர்தல் விஞ்ஞாபன ரீதியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்குறுதி அளித்ததைப் போன்று, எந்த முன்னெடுப்புகளையும் இதுவரை முன்னெடுக்கவில்லை என்பது புரிந்து கொள்ளப்படவேண்டும் என்பது ஒரு சிலரது கருத்து.  

குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று சொல்லப்படுகின்ற மக்களின் கட்சியைப் பதிவு செய்வதற்குக் கூட தயாராக இல்லாமல் இருக்கின்ற மக்களின் பிரதிநிதிகளாகவே இவர்கள் காணப்படுகின்றார்கள்.   

தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் கிஞ்சித்தும் பார்க்காத தலைமைகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றன என்பது போன்ற விமர்சனங்களும் இருக்கத்தான் செய்கின்றன.  

இந்த இடத்தில் தான் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, முன்னாள் போராளிகள் போன்ற பல கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை அமைத்த‍ விடயம் இடைச்செருகுகிறது. 

எனவே, மாற்றுத் தலைமையுடனான சிந்தனை தமிழ் மக்கள் விட்ட இடத்தில் இருந்து தங்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடிச் செல்வதற்கு உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.   

அவ்வாறு பயன்படுத்துவதன் மூலம்தான் உரிய கிராமியத் தேர்தல்கள் மூலம் இழந்த பொருளாதாரங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களையும் முன்மொழிவுகளையும், தங்களுடைய செயற்பாடுகளின் மூலம் தங்கள் தீர்மானங்கள் சரியானது என்று முடிவெடுப்பதற்கான ஒரு சர்வதேச அங்கிகாரத்துக்கான வெளிப்பாடுகளையும் இந்த மாற்றுத் தலைமைகளுக்கு வழங்குவதன் மூலமே இதற்கான தீர்வைக் கண்டுகொள்ள முடியும்.  

தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தைப் புலிகளுக்கு வழங்க மாட்டேன் என்று கூறியதிலிருந்து தொடங்கிய பிரச்சினை, வேறு தனிப்பட்ட பிரச்சினைகளாக மாற்றம் பெற்று, புலிகளின் துரோகிகள் பட்டியலில் மூத்த தமிழ் அரசியல்வாதிகளில் ஒருவரான வி.ஆனந்தசங்கரி இருந்தார்.  

இந்தக் கூட்டணி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக தந்தை செல்வா போராடினார். அந்தப் போராட்டத்தின் தோல்வி நிலையிலேயே தமிழ் மக்களை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னார்.   

ஆனால், போராட்டக் கொள்கைகளை அவர் கைவிடவில்லை. ஆனால் ஒருவிடயம், தந்தை செல்வாவின் போராட்டக் கொள்கைகள் அஹிம்சையில் பயனளிக்கவில்லை என்றுதான் ஆயுதப்போராட்டத்தை இளைஞர்கள் ஆரம்பித்தனர். ஆனால், ஒரு விடயம், போராட்ட வடிவங்கள் மாறலாம்; ஆனால் போராட்டக் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கவில்லை.  

எனவே, இந்த உரிமைகளை அவர்கள் நியமித்த தலைவர்கள், பிரதிநிதிகள் மக்களிடம் வாக்குப் பெற்று தங்கள் நடத்துக்காக விலைகளுக்கு அடிமையாவது பொருத்தப்பாடில்லாததும் ஏற்றுக்கொள்ளமுடியாததுமாகும்.   

ஒட்டு மொத்த தமிழ் மக்கள் தங்களுடைய பிரதிநிதிகள் அவர்களுக்கெதிராக தங்கள் நலன் சார்ந்து செயற்படுவது என்பது அர்த்தமற்ற விடயம். எனவே, மக்களுடைய அரசியல் அபிலாஷைகளை வெறுமனே இனவாதமாகவும் மதவாதமாகவும், பிரதேச வாதமாகவும், தங்கள் சொந்த நலன்களுக்காக மாற்றிக் கொள்வதென்பது போராட்ட வடிவங்களை மாற்றாது போராட்டத்தையும் மாற்றாது. தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்ட அஹிம்சை வடிவமும், விடுதலைப் புலிகளின் தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப்போராட்டமும் மௌனிக்கப்பட்ட பின்னர், தமிழ் மக்கள் தங்களுடைய போராட்டத்தை அஹிம்சையா, அல்லது ஜனநாயக வடிவமா என்பதைத் தாங்கள் தெரிவு செய்த பிரதிநிதிகள் செயற்படுத்துவார்கள் என்றே எதிர்பார்த்தனர்.  

அந்தப் போராட்டங்கள் கையறு நிலையை அடைகின்ற வேளையில் போராட்ட வடிவங்களைத் தங்கள் கைகளில் எடுத்திருக்கிறார்கள். அதன் பிரதிபலிப்புத்தான் இயல்பான போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.   

இதற்குச் சரியான தீர்வு கிடைக்காது விட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்ற திலீபனின் கருத்துக்கமைய உருவாகும். எனவே தான் எல்லா நாட்களிலும் எல்லோரையும் ஏமாற்ற முடியாத என்பதற்கமைய சில நாள் பலரையும், பல நாள் சிலரையும் ஏமாற்ற முடியும்.   

எனவே, போராட்ட வடிவங்கள் மாறலாம், பேராட்டம் மாறலாம் என்பதே கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இதுவே எதிர்வரும் தேர்தலில் நிரூபிக்கப்படும் என்று நம்புவோமாக. 


You May Also Like

  Comments - 1

  • கிருவை Tuesday, 19 December 2017 10:59 AM

    கடவுள் காப்பாற்ற வேண்டும் என தந்தை செல்வா சொன்னது சிறிமாவோ தேர்தலில் வெற்றி பெற்ற மறுநாள் 1960ல். அதன்பின் அவர் அவ்விதம் எங்கும் சொல்லவில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .