2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

சர்வகட்சி மாநாடு: இணக்கமும் பிணக்கும்

என்.கே. அஷோக்பரன்   / 2018 ஜூன் 04 , மு.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 146)

யுத்தம் தொடர்பாகப் பல்வேறுபட்ட தத்துவநிலை விளக்கங்களுண்டு. ‘நியாயயுத்தம்’ என்ற தத்துவ விளக்கமானது, மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது.  

 நியாயயுத்தத்தை நாம், மகாபாரத காலத்திலும் காணலாம். மிகச்சுருக்கமாக, இதன் சாரத்தைக் கூறுவதென்றால், யுத்தம் என்பது தார்மீக ரீதியில் தவறானதெனினும், அனைவருக்குமான பெருநன்மை ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக யுத்தம் செய்வதில் தவறில்லை.   

இந்தத் தத்துவம் இன்றுவரை, உள்ளூரிலும் உலக அரங்கிலும் பயன்படுத்தப்பட்டு வருவதை  அவதானிக்கலாம். ஒவ்வொரு யுத்தமும், ஏதோவொரு வகையில், அனைவருக்கும் நன்மை தரத்தக்க உயர்தார்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு, நியாயப்படுத்தப்படுவதைக் காணலாம்.  

 மனித உரிமைகள், அடக்குமுறையைத் தகர்த்தல், சர்வாதிகார எதிர்ப்பு, ஜனநாயகம், விடுதலை, ஆபத்தான ஆயுதங்களை இல்லாதொழித்தல் என அனைவருக்கும் பொதுவான, உயர்தார்மீக சித்தாந்தங்கள் அண்மைக்காலத்தில் முன்வைக்கப்பட்டன. இத்தகைய உயர்தார்மீக சித்தாந்தங்கள், அனைவருக்கும் நன்மை பயக்கத்தக்கதாக அமைந்த அதேவேளை, உலகளவில் நடந்த பல்வேறு யுத்தங்களையும் நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டமையையும்  காணலாம்.  

 வள்ளுவன் மொழியின் உதவியுடன் சொல்வதானால், ‘புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின்’ யுத்தம் தவறில்லை. மிக எளிய மொழியில் சொல்வதானால், “நான்கு பேருக்கு நல்லது என்றால், எதுவுமே தப்பில்லை” என்ற பாணியிலான அணுகுமுறை இது. 

இந்த அணுகுமுறையிலுள்ள சிக்கல் என்னவென்றால், அந்த யுத்தத்துக்குச் சம்பந்தமில்லாத அப்பாவிகள், அந்த யுத்தத்தில் கொல்லப்படுவதை, உயர்தார்மீகத்தை அடையப் பெறுவதற்கான துணையீடாகப் பார்த்தலாகும்.  

 அதாவது, ஒரு பெரு நன்மையை அடைவதற்காக, சில ‘தியாகங்கள்’ தவிர்க்கமுடியாதவை என்ற பாணியிலான பார்வையாகும். நியாயயுத்தத்தின் இந்தப் பார்வையை, தார்மீக முழுமைக் கொள்கையாளர்கள் மறுக்கிறார்கள்.   

தவறான ஒரு விடயம், ஒருபோதும் சரியாகிவிட முடியாது என்பது அவர்களின் வாதமாகும். யுத்தத்தில் சம்பந்தப்படாத பொதுமக்கள் கொல்லப்படக்கூடாது என்பது, ஒரு முழுமையான உயர்தார்மீகமாகும். அதை மீறுதல், எந்த வகையிலும் நியாயப்படுத்தத்தக்கதல்ல என்பது அவர்களுடைய வாதம்.  

 இரண்டாம் உலக யுத்தத்தில், இந்த உலகம் கண்ட மனிதப் பேரவலத்தின் பின்னர், மறுபடியும் உலகம் அத்தகைய பேரவலம் ஒன்றைக் கண்டுவிடக் கூடாது என்ற உயர்தார்மீக அடிப்படைகளின்படி, ஜெனீவா ஒப்பந்தங்கள் முதல், மனித உரிமைகள் சாசனங்களை வரை உருவாக்கப்பட்டன.  

 பொதுமக்கள் மீதான இலங்கை இராணுவத்தின் தாக்குதல்கள் பற்றி, அப்போதைய தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியிடம் வினவப்பட்டபோது, அவர் இராணுவத்தினுடைய இந்தப் பதில்தாக்குதல்களை மறுக்கவில்லை; மாறாக, தன்னுடைய பகட்டாரவார நாவன்மையால், “முதலில் தன்னுடைய சகாக்கள் கொல்லப்பட்டதைக் கண்ட சில வீரர்கள், தமது கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்கள்” என்று குறிப்பிட்டார்.   

அப்படியானால், கட்டுப்பாடிழந்த குறித்த வீரர்கள் மீது, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாமே என்று வினவியபோது, தார்மீக ரீதியில் இதை அணுகுவதற்குப் பதிலாக, சட்ட நுட்ப ரீதியில் இதை அணுகிய அத்துலத்முதலி, “தனிப்பட்ட வீரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.  

 மேலும், அரச படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த மக்கள், குறித்த தாக்குதலுக்கான ஆயத்தங்கள் நடத்தப்படும் தகவலை, அரசாங்கத்துக்கோ அரச படைகளுக்கோ அறிவிக்கவில்லை என பொதுமக்கள் மீதும் அர்த்தமற்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.   

ஜெனீவா ஒப்பந்தத்துக்கான முதலாவது குறிப்பு (Protocol I), சிவிலியன்கள் மீது வேண்டுமென்றே நடத்தப்படுகிற தாக்குதல்களைத் தடைசெய்கிறது. அதாவது, யுத்தத்தின் போது, வேண்டுமென்றே பொதுமக்கள் மீதோ, பொதுமக்களுள்ள ஸ்தலங்கள் மீதோ தாக்குதல் நடத்துதல் யுத்தக்குற்றமாகும்.  

 மூலமுதலான ஜெனீவா ஒப்பந்தங்களில், இலங்கை கைச்சாத்திட்டிருந்தாலும், ஜெனீவா ஒப்பந்தத்துக்கான முதலாவது குறிப்பில் இலங்கை கைச்சாத்திடவில்லை. ஆகவே, நுட்ப ரீதியில், முதலாவது குறிப்பின் ஆளுகைக்குள் இலங்கை உட்படாது.  

 இந்தியா, ஈரான், அமெரிக்கா, இஸ்‌ரேல், துருக்கி உள்ளிட்ட நாடுகளும் இதில் கையெழுத்திடவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. நுட்ப ஏதுநிலைகள் எதுவாக இருப்பினும், மனிதப்பேரவலத்தைத் தடுக்கும் மனிதாபிமானச் சட்டங்களின் உயர்தார்மீகம் என்பது அனைவருக்கும், அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதே.

1983இன் பின்னர், இலங்கையில் அரச படைகளால் நடாத்தப்பட்ட பல தாக்குதல்களும் இந்தச் சர்வதேச நியமங்களை மீறியதாகவே அமைந்ததைக் காணக்கூடியதாக உள்ளது.  

 1984இல் செப்டெம்பரில் மன்னார், பருத்தித்துறை, வவுனியா உள்ளிட்ட பிரதேசங்களில் நடைபெற்ற பொதுமக்கள் மீதான படுகொலைத் தாக்குதல்கள் இதையே சுட்டி நிற்கின்றன. பொதுமக்கள் மீது நேரடியாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள், எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதவை.   

ஆனால், பயங்கரவாத எதிர்ப்பு யுத்தம் என்ற போர்வைக்குள், இந்த மனிதப் பேரவலத்தை நியாயப்படுத்த, இலங்கை அரசாங்கம் முயன்றுகொண்டிருந்தது. 

இந்தக் காலப்பகுதியில், யாழின் நிலைவரத்தைப் பதிவு செய்த இந்தியப் பத்திரிகையாளர் ஒருவர், ‘நான், யாழில் சென்ற இடத்திலெல்லாம் மக்கள், அரச படைகள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகள் பற்றிக் கூறியிருந்தார்கள்’ என்றும், ‘குறிப்பாக, 18-35 வயதான தமிழ் இளைஞர்கள், அரச படைகளால் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அரச படைகள், தமிழ் மக்களின் வீடுகள், தமிழர் பிரதேசங்களில் அமைந்துள்ள சந்தைகள், தேவாலயங்கள் என்பன மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.  எந்த இடத்துக்குச் சென்றாலும், அங்கு அரச படைகளால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தையாவது காணக்கூடியதாக இருந்தது’ என்று பதிவுசெய்திருந்தார்.   

ஆண்கள், பெண்கள், குழந்தைகளைக் கொண்ட ஓர் ஆயுதமற்ற மக்கள் கூட்டமானது, ஆயிரக்கணக்கான எண்ணிக்கையைக் கொண்ட அரச படைகளால், குடாநாட்டுக்குள் முற்றுகையிடப்பட்ட நிலையில் இருந்ததைப் போல, யாழ். மக்கள் உணர்ந்திருந்ததாக யாழ்ப்பாணத்தின் அன்றைய நிலைவரத்தின் சாராம்சத்தை அவர் பதிவுசெய்திருந்தார்.  

ஒன்பதாவது மாதத்தில் சர்வகட்சி மாநாடு  

வன்முறைகள் வெடித்துக் கொண்டிருந்த சூழலில், மீண்டும் சர்வகட்சி மாநாடு 1984 செப்டெம்பர் 21ஆம் திகதி கூடியபோது, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன, கடந்த எட்டுமாத காலத்தில், சர்வகட்சி மாநாடு அடைந்திருந்த முன்னேற்றங்கள் பற்றிய எட்டுப் பக்க அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார்.   

அந்த அறிக்கையில், அடித்தட்டு ஜனநாயகக் கட்டமைப்புகளுக்கு அதிகரித்த அதிகாரங்களை வழங்குதல், நாடற்றவர்கள் என்ற நிலையை இல்லாதொழித்தல், அனைத்து விதமான பயங்கரவாதத்தையும் இல்லாதொழித்தல், நாடாளுமன்றத்தில் இரண்டாவது அவையொன்றை ஸ்தாபித்தல் ஆகிய நான்கு விடயங்களில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதென குறிப்பிடப்பட்டிருந்தது.  

 மேலும் ஜே.ஆர், “இந்த இரண்டாவது அவையானது, சட்டவாக்க அதிகாரங்களைக் கொண்டிருக்கும்” என்று குறிப்பிட்டதுடன், “அதிகாரப் பகிர்வானது, மாவட்ட சபைகளின் அடிப்படையில் அமையும். ஒரு மாகாணத்துக்கு உள்ளிட்ட மாவட்ட சபைகள் இணைந்து செயற்படக்கூடியதாக அமையும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.   

ஜே.ஆரின் முன்மொழிவுகள், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்குத் திருப்தி தருவதாக இருக்கவில்லை. தனிநாட்டுக் கோரிக்கையை விட்டு இறங்கிவரத் தயாராக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி கேட்டதெல்லாம், ஜனாதிபதி ஜே.ஆர், இந்தியாவில் பார்த்தசாரதியிடமும், இந்திரா காந்தியிடமும் இணங்கிய ‘அனெக்ஷர் -சி’ முன்மொழிவுகளை நிறைவேற்றுவதை மட்டும்தான்.   

ஆனால், ஜே.ஆரோ இன்று, அதற்கு எந்தவகையிலும் சம்பந்தமில்லாத நாடாளுமன்றத்துக்கான இரண்டாவது அவையொன்றைப் பற்றியும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, திட்டவட்டமாக மறுத்திருந்த மாவட்ட சபைகள் அளவிலான அதிகாரப்பகிர்வு பற்றியும் இணக்கப்பாடு ஏற்பட்டதென அறிவித்துக் கொண்டிருந்தார்.   

இந்த முன்மொழிவுகளில், ஒட்டுமொத்தமாகத் தமிழ் மக்களுக்குச் சாதகமாக இருந்த ஒரே விடயம், நாடற்றவர்கள் என்ற நிலையை இல்லாதொழித்தல் என்ற இணக்கப்பாடு மட்டும்தான். ஆனால், அதற்குள் கூட, பிரித்தாளும் தந்திரம் இருக்கிறது என்று சில விமர்சகர்கள் கருத்துரைப்பர்.   

அதாவது, தமிழ் மக்கள் தொடர்பான கோரிக்கையை, வடக்கு-கிழக்கு மற்றும் மலையகத் தலைமைகளான அமிர்தலிங்கம், குமார் பொன்னம்பலம், சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோர் இணைந்தே முன்வைத்திருந்தனர். 

தொண்டமானைப் பொறுத்தவரையில், நாடற்றவர்களாக இருந்த இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்கு, இலங்கைக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுத்தல் மிக முக்கியமானதொரு விடயமாகும்.   

அதை வழங்குவதன் மூலம், மலையகத் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்துவதன் மூலம், வடக்கு-கிழக்கு தமிழர் அரசியலிலிருந்து மலையக அரசியலை வேறுபடுத்தும், ஜே.ஆரின் பிரித்தாளும் தந்திரம் இது எனச் சிலர் குறிப்பிடுகிறார்கள்.  

 ஆனால், இந்தப் பிரச்சினையை இதே கோணத்தில் மட்டும் நோக்குதல் பொருத்தமானதாக இருக்காது. நாடற்றவர்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதை, இலங்கைத் தமிழரசுக் கட்சி, அதன் முதல் மாநாட்டிலிருந்து முக்கியதொரு கோரிக்கையாக முன்வைத்து வந்திருக்கிறது. அதன்படி, தன்னால் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளை, தன்னால் நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளை ஜே.ஆர் தூயமனத்துடன் தீர்க்கவும், நிறைவேற்றவும் முயன்றார் என்று மறுதரப்பினர் கருத்துப் பதிகிறார்கள்.   

பிராந்திய சபைகளை வழங்குவதைப் பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற எடுகோள்நிலை வாதத்தைதவிர, பிராந்திய சபைகள் அமைப்பதை மறுப்பதற்குப் பலமான நியாயமொன்றை, ஜே.ஆர் அரசாங்கத்தால் முன்வைக்க முடியவில்லை.   

இந்தியப் பத்திரிகை ஒன்றுக்கு சர்வகட்சி மாநாட்டின் பேச்சாளரும், தேசியப் பாதுகாப்பு அமைச்சருமான லலித் அத்துலத்முதலி வழங்கிய செவ்வியொன்றில், “மாவட்ட சபைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வொன்றை மட்டுமே, சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.   அதற்கு மேலதிகமான தீர்வொன்றை வழங்கக்கூடிய நிலையில், அரசாங்கம் இல்லை. அதற்கு மேலதிகமான தீர்வை அரசாங்கம் வழங்குமானால், இந்த அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு, சிங்கள சமூகத்தின் தீவிரப் போக்குடைய சக்திகள் அதிகாரத்துக்கு வருவதுடன், தீர்வொன்றை எட்டுவதற்கான வாய்ப்பு இன்னும் கடினமாகும்” என்று கூறியிருந்தார்.  

ஆயினும் ஜே.ஆரின் இந்த முன்மொழிகளை, அமிர்தலிங்கம் முற்றாக நிராகரிக்கவில்லை. ஒருவேளை, அப்போது தமிழ் அரசியலில் ஏற்பட்டிருந்த சூழ்நிலை, சர்வகட்சி மாநாட்டிலிருந்து எதையேனும் பெற்றுக் கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்தை, அமிர்தலிங்கத்துக்கு ஏற்படுத்தியிருக்கலாம்.   

செப்டெம்பர் 30ஆம் திகதி நடந்த சர்வகட்சி மாநாட்டில், மாவட்ட சபைகள் பற்றிய ஜே.ஆரின் முன்மொழிவிலுள்ள குறையை அமிர்தலிங்கம் சுட்டிக்காட்டினார்.   

ஒரு மாகாணத்துக்கு உட்பட்ட மாவட்ட சபைகள் இணைந்து செயற்பட முடியுமெனினும், குறித்த முன்மொழிவுகளின்படி, தொழில்நுட்ப ரீதியாக அதிகாரப் பகிர்வானது, தனித்தனி மாவட்ட சபைகளுக்கே வழங்கப்பட்டிருக்குமேயன்றி, ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்ட சபைகள் இணைந்த தன்மை அந்த அமைப்புக்கு இருக்காது என்பதைச் சுட்டிக்காட்டிய அமிர்தலிங்கம், தமிழ் மக்களின் நிலைப்பாடானது, அதிகாரப்பகிர்வானது வடக்கு-கிழக்கு என்ற தனித்த ஓர் அலகுக்கு வழங்கப்பட வேண்டும் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.   

செப்டெம்பர் 30ஆம் திகதி அமர்வைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஜே.ஆர், சர்வகட்சி மாநாட்டை நவம்பர் 15ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். சர்வகட்சி மாநாடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X