2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜெனீவாத் தொடர் கதை

Johnsan Bastiampillai   / 2020 டிசெம்பர் 31 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

எதிர் வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா மனித உரிமை பேரவையின்  கூட்டம், நெருங்கி வரும் நிலையில், இலங்கையில் மனித உரிமை விவகாரமும் சூடு பிடித்து வருகிறது. 

சகல தமிழ் அரசியல் கட்சிகளும், ஒருமித்த நிலைப்பாட்டில் இருந்து, மனித உரிமைப் பேரவையை எதிர்கொள்ள வேண்டும் என்ற தொனிப் பொருளிலேயே இந்தக் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. 

மனித உரிமைப் பேரவையின் 45 ஆவது கூட்டத்தில், சகல தமிழ்க் கட்சிகளும் கூட்டாகச் செயற்பட வேண்டும் என்பதை, அக்கட்சிகள் வலியுறுத்திக் கூறுகின்றன. ஆனால், கூட்டாக என்ன செய்ய வேண்டும் என்பதில், அவற்றுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லை என்பதாகவே தெரிகிறது. 

அந்த ஒருமித்த கருத்து என்ன என்பது தொடர்பாக, அக்கட்சிகளிடையே நடைபெற்று வரும் கலந்துரையாடலைப் பார்க்கும் போது, அவ்வாறானதொரு கூட்டுச் செயற்பாட்டுக்கான இணக்கம் ஏற்படுமா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. 

2009ஆம் ஆண்டு மே மாதம், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைமை, படையினரால் அழிக்கப்படும் வரை, தமிழ் மக்களுக்காக யார் குரல் கொடுக்க வேண்டும், எவ்வாறு குரல் கொடுக்க வேண்டும், எந்த விடயத்தைப் பேச வேண்டும், எந்த விடயத்தைப் பேசக் கூடாது ஆகிய சகலவற்றையும், அவ்வமைப்பே தீர்மானித்தது.

 அதன் பின்னர், ஐந்து, ஆறு வருடங்கள் வரை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களின் பிரதான பிரதிநிதியாகச் செயற்பட்டது. ஆனால், அந்த ஏகபோகம் அதன் பின்னர் படிப்படியாகச் சிதைந்து, இப்போது அந்த விடயத்தில் கடும் போட்டி நடைபெற்று வருகிறது. 

இந்தப் பின்னணியிலேயே, சில நாள்களுக்கு முன்னர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைப் பேரவையில், தமிழ்க் கட்சிகள், கூட்டாகச் செயற்படுவது தொடர்பாக, வட பகுதி மக்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் கட்சியைச் சாராத தமிழ் கட்சிகளான தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

ஜெனீவாக் கூட்டத்தின் போது, போர் குற்றங்கள் விடயத்தில், இலங்கை அரசாங்கத்தைப் பொறுப்புக் கூறச் செய்யும் வகையில், மற்றுமொரு பிரேரணையைக் கொண்டு வருவது தொடர்பாகவே, சுமந்திரன் கருத்துத் தெரிவித்து இருந்தார். தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், அந்த யோசனையை நிராகரித்து இருந்தனர். 

கூட்டாகச் செயற்படுவது ஒரு புறமிருக்க, இந்தக் கட்சிகளிடையே இருக்கும் பகையுணர்வின் அளவை, விக்னேஸ்வரன் சுமந்திரனுக்கு அனுப்பியிருந்த பதில் கடிதம் தெளிவாகக் காட்டுகிறது. ‘நாங்கள் இதனை முற்றாக நிராகரிக்கின்றோம்.’ என அவர் எடுத்த எடுப்பிலேயே கூறுகிறார். அத்தோடு, சுமந்திரனின் கடிதத்தில் பிரேரிக்கப்பட்ட விடயத்தை, ஏன் நிராகரிக்கின்றோம் என்பதற்கான காரணத்தையும் கூறுகிறார். ‘உங்களது பிரேரணை, இனப் படுகொலை செய்த அரசாங்கத்துக்கு, ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை, மேலும் நீடிக்குமாறு சர்வதேச சமூகத்தைக் கேட்டுக் கொள்வதென்ற கருத்தை மட்டுமே முன்வைக்கிறது. அதிலும் மோசமானது என்னவென்றால், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பெயரிலேயே அக்கருத்து முன்வைக்கப்படுகிறது’ என்கிறார் விக்னேஸ்வரன். 

‘பொறுப்புக் கூறல்’ என்ற விடயத்தில், அரசாங்கத்துக்கு மேலும் அவகாசம் வழங்கப்பட வேண்டுமா என்ற கேள்வி, 2017 ஆம் ஆண்டிலும் 2019ஆம் ஆண்டிலும் மனித உரிமைப் பேரவையில் பிரேரணைகள் கொண்டு வரப்பட்ட போதும் எழுந்தது. 

2015 ஆண்டு, அப்போதைய ‘நல்லாட்சி’ அரசாங்கம், மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு, சம அனுசரணை வழங்கியது. பின்னர், 2017, 2019 ஆம் ஆண்டுகளில், அந்தப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களையே வலியுறுத்தி, கொண்டு வரப்பட்ட பிரேரணைகளுக்கும் அரசாங்கம் சம அனுசரணை வழங்கியதோடு 2015ஆம் ஆண்டு ஏற்ற பொறுப்புகளை நிறைவேற்ற,  மேலும் கால அவகாசத்தையும் கோரியது. 

போரின் போது அரச படைகளாலும் புலிகளாலும் புரியப்பட்டதாகக் கூறப்படும் போர் குற்றங்களைப் பற்றி விசாரணை செய்வதற்காக, பொறிமுறையொன்றை முன்வைத்துச் செயற்படுத்த வேண்டும் என்பதே, அவற்றில் முக்கிய பொறுப்பாகும். அப்போது தான், அரசாங்கத்துக்கு மேலும் அவகாசம் வழங்க வேண்டுமா என்ற விவாதம் தமிழ்க் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டது.

ஏனெனில், பொறுப்புக் கூறல் என்பது, 2012 ஆம் ஆண்டு முதன் முறையாக இலங்கை தொடர்பாக, மனித உரிமைப் பேரரவையில் முன்வைக்கப்பட்ட பிரேணை மூலம், அரசாங்கத்தின் மீது விதிக்கப்பட்ட பொறுப்பாகும். 2017 ஆம் ஆண்டிலும், அதற்காகக் கால அவகாசம் கேட்பதாக இருந்தால், அதில் நியாயம் இல்லை என்பதே, தமிழ்த் தரப்பின் வாதமாகியது. அதையே விக்னேஸ்வரன் இங்கு கூறுகிறார். 

அரசாங்கம் தொடர்ந்தும், அரச பதவிகளுக்கு இராணுவத்தினரை நியமித்து வருவதாகவும் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து வருவதாகவும் தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் கிழக்கில் காணி பகர்வுக்காகப் பௌத்த சமயத் தலைவர்களை நியமித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்களைக் கண்காணித்தும் மிரட்டியும் வருவதாகவும் இறந்தவர்களை அடக்கம் செய்யும் முஸ்லிம்களின் உரிமையைப் பறிப்பதாகவும் இவற்றுக்குப் புறம்பாக, மனித உரிமை பேரவை உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில், இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாப்பதாக கடந்த ஒக்டோபர் மாதம் ஒன்பதாம் திகதி, மனித உரிமைப் பேரவையில் முக்கிய பதவிகளோடு, அப்பேரவையின் உறுப்பினராக இருக்கும் சீனா உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் சுமந்திரன் தமது கடிதத்தில் குறிப்பட்டுள்ளதையும் விக்னேஸ்வரன் நினைவூட்டுகிறார். அவ்வாறாயின், எதற்காக மேலும் அரசாங்கத்துக்கு அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறுகிறீர்கள் என, விக்னேஸ்வரன் கேட்கிறார். 

இது மிகவும் பலமான வாதம் என்பதில், எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், மனித உரிமைப் பேரவையின் பிரேரணைகளை, அவரும் முற்றாக நிராகரிக்கவில்லை. ‘நாம் மனித உரிமைப் பேரவையின் பிரேரணையை நிராகரிக்க வேண்டும் என்றோ, அப் பேரவையோடு செயற்படக் கூடாது என்றோ நான் கூறவில்லை. மாறாக, மனித உரிமைப் பேரவையின் பிரேரணையைப் பலப்படுத்தவும், அதனை அர்த்தபூர்வமாக்குவதற்காகவும் மேலும் சில நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்’ என அவர் தமது பதிலில் குறிப்பட்டு இருக்கிறார். அவ்வாறாயின், சுமந்திரனின் ஆலோசனையை, முற்றாக நிராகரிப்பதாக, அவர் தமது பதிலின் மற்றோர் இடத்தில் ஏன் குறிப்பிடுகிறார்? இதன் மூலமும், அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படாதா?

அத்தோடு, தமிழ்க் கட்சிகள் மேற்கொள்ள வேண்டிய மேலும் சில விடயங்களை விக்னேஸ்வரன் பிரேரிக்கிறார்.

இலங்கை அரசாங்கத்தை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னோ, ஐ.நாவால் உருவாக்கப்படும் மற்றொரு விசேட நியாயாதிக்க சபையொன்றின் முன்னோ நிறுத்துமாறு, மனித உரிமைப் பேரவையை கேட்டுக் கொள்வது.

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த முயல்வது; 

 மனித உரிமை மற்றும் காணி அபகரிப்பு விடயங்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் ஒருவரை நியமிக்குமாறு, மனித உரிமைப் பேரவையைக் கேட்டுக் கொள்ளல்; 

பொறுப்புக் கூறல் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணை பொறிமுறையொன்றை ஸ்தாபிக்குமாறு மனித உரிமைப் பேரவையைக் கேட்டுக் கொள்ளல் என்பன, அவரது பிரேரணைகளாகும். இதன் படி, விக்னேஸ்வரனும் மனித உரிமைப் பேரவையின் மீதே முற்றிலும் தங்கியிருக்கிறார் என்றே தெரிகிறது.

அத்தோடு, இவை சாத்தியப்படுமோ இல்லையோ, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற முறையில், அவற்றைச் சாதித்துக் கொள்ள நாம் முயல வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் கூறுகிறார். அதாவது, அவை சாத்தியமாகுமா என்பது தொடர்பாக, அவருக்கே சந்தேகம் எழுந்துள்ளது. பொதுவாக, இந்த விடயத்தில் என்ன செய்வது என்பது தொடர்பில், தமிழ்த் தரப்பினருக்குப்பெரும் பிரச்சினையாகி உள்ளது.

உண்மையிலேயே அரசாங்கத்தைப் பொறுப்புக்கூறச் செய்வதில், தமிழ் தரப்பினர் இது வரை பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. மனித உரிமைப் பேரவையின் ஆணையாளராக நவநீதம் பிள்ளை இருந்த காலத்தில், மனித உரிமை மீறல் தொடர்பாகப் பொதுவான விசாரணையொன்று நடைபெற்றமை மட்டுமே, இது வரை நடைபெற்ற ஒரே விடயமாகும். ஆனால், அது குறிப்பிட்ட நபர்களுக்கு எதிரான விசாரணையல்ல. 

மனித உரிமைப் பேரவையும் இந்த விடயத்தில் உறுதியாக நடந்து கொண்டதாகக் கூற முடியாது. பலம் வாய்ந்த மேற்கத்திய நாடுகளின் விருப்பத்துக்கு அமையவே, ஐ.நா அமைப்புகளும் செயற்படுகின்றன. 

எனவே, வட கொரியா, கியூபா, ஈரான், சூடான், லிபியா, ஈராக் ஆகியவற்றுக்கு எதிராகச் செயற்பட்ட வேகத்தில், ஏனைய நாடுகளுக்கு எதிராகச் செயற்படுவதில்லை. இலங்கை அரசாங்கம், மேற்கத்திய நாடுகளின் நண்பனாகவே இருக்கிறது. எனவே தான், இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர் கதையாகி உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .