2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாதீட்டில் வருமா நிவாரணம்?

Editorial   / 2019 மார்ச் 05 , மு.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தொ. இளந்திரையன்  

இலங்கையின் நடப்பு ஆண்டுக்கான பாதீடு (வரவு - செலவுத் திட்டம்), இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இவ்வாண்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரான பாதீடாக இருப்பதால், பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் ஒன்றாக இது காணப்படுகிறது.  

கடந்த இரு ஜனாதிபதித் தேர்தல்களைப் போலல்லாது, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி தனித்தே போட்டியிடுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில், தாம் கொண்டுவந்த வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக மாறிய பின்னர், கட்சிக்கு எதிராக மாறிவிட்டார் என்ற கோபம், ஐ.தே.கவுக்கு உண்டு. எனவே, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில், தமது கட்சியைச் சேர்ந்த ஒருவரைக் களமிறக்கவே ஐ.தே.க எதிர்பார்க்கும்.  

அப்படியான சூழ்நிலையில், எதிரணியில் போட்டியிடும் வேட்பாளரை வெல்ல வேண்டுமாயின், தமது அரசாங்கத்தின் மூலமாகச் சமர்ப்பிக்கப்படும் இப்பாதீட்டை, மக்களுக்கான நிவாரணங்களை வழங்கும் ஒன்றாகச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.  

அதேபோல், மாகாண சபைத் தேர்தல்களும் நடைபெறவிருப்பதால், பின்னடைவைச் சந்தித்துள்ள கட்சியை முன்னிறுத்த, இப்பாதீடு முக்கியமானது.  

இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், அரச பணியாளர்களுக்கு மேலதிகப் படி வழங்கப்படுமெனவும் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்குப் பணம் அனுப்பப்படுவதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவிக்கிறது. அதேபோல், ஏற்றுமதியை அதிகரித்து, நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ள நிலையில், ஏற்றுமதிகளுக்கான தீர்வைச் சலுகைகள் வழங்கப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  

மறுபக்கமாக, மதுபானத்துக்கும் சிகரெட்டுகளுக்குமான வரிகள் அதிகரித்து, விலை அதிகரிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.  

இவ்வாறு மக்களைக் கவரும் திட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும், பாதீட்டை அரசாங்கம் எவ்வாறு நிறைவேற்றுமென்பது தான், இப்போதுள்ள கேள்வியாக உள்ளது.  

நாட்டிலுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எவரும், இப்பாதீட்டுக்குச் சார்பாக வாக்களிக்கப் போவதில்லை. எனவே, ஏனைய எதிர்க்கட்சிகளின் தயவை நாடவேண்டிய தேவை, ஐ.தே.கவுக்கு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றில் அக்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லையென்பது ஞாபகப்படுத்தத்தக்கது.  

எனவே, மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முக்கிய கட்சிகளாக மாறப் போகின்றன. மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாதாரக் கொள்கைகள், ஐ.தே.கவின் கொள்கைகளோடு முற்றிலும் முரணானவை என்பதால், இப்பாதீட்டுக்கான ஆதரவை அக்கட்சி வழங்காதென்றே எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தான், முக்கியமானதாக மாறப் போகிறது. தற்போதைய அரசாங்கம் ஆட்சியமைப்பதற்கு, வெளியில் இருந்துகொண்டு அக்கட்சி வழங்கும் ஆதரவு முக்கியமானது. ஆனால், பாதீட்டுக்கான ஆதரவை த.தே.கூ வழங்குமா? அப்படி வழங்குவதானால், நிபந்தனைகளின் அடிப்படையிலானதாக அது அமையுமா? அந்த நிபந்தனைகளில், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் உள்ளடங்குமா? அவற்றை ஏற்றுக்கொள்ள ஐ.தே.க தயாராக இருக்குமா? இவையெல்லாம், பதில் தேட வேண்டிய கேள்விகளாக உள்ளன.  

மறுபக்கமாக, நிபந்தனைகள் எவையுமின்றி, இப்பாதீட்டுக்கான ஆதரவை த.தே.கூ வழங்கினால், தமிழ் மக்கள் அதை ஏற்பார்களா? அதிலும், பாதுகாப்புச் செலவீனம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள பாதீடொன்றுக்கு த.தே.கூ ஆதரவு வழங்குவது, எந்தளவுக்கு வரவேற்கப்படும்?    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .