2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிராந்திய சபைகளும் ‘அனெக்ஷர் ‘ஸீ’யும்’

என்.கே. அஷோக்பரன்   / 2017 டிசெம்பர் 11 , மு.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 122) 

ஜே.ஆரின் உரை  

ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கும் இந்திரா காந்திக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கையீனமும் கசப்புணர்வும் உருவாகியிருந்தமையை வெளிப்படையாகவே உணரத்தக்கதாக இருந்தது. 

1983 நவம்பர் 24 அன்று, புதுடெல்லியில் இடம்பெற்ற பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாட்டில், ஜே.ஆர். ஜெயவர்தன ஆற்றிய உரையில் இது எதிரொலித்தது. தன்னுடைய உரையில் இந்தியாவின் ‘தேசத்தந்தை’ மகாத்மா காந்தியையும் இந்தியாவின் முதலாவது பிரதமரும் இந்திரா காந்தியின் தந்தையாருமான பண்டிட் ஜவஹர்லால் நேருவையும் மிகவும் புகழ்ந்து பேசினார் ஜே.ஆர்.   

 குறிப்பாக, மகாத்மா காந்தியின் அஹிம்சாவாதத்தையும் ஜவஹர்லால் நேருவின் அணிசேராக் கொள்கையையும் உயர்வாகப் பேசியவர், தன்னைக் காந்தியத்தோடு அடையாளப்படுத்தவும் தவறவில்லை. 

தனது பேச்சின் இறுதியில், “எனக்கு உயிர்வாழும் சக்தி இருக்குமாயின், ஒருபோதும் எனது மக்கள் இன்னொருவருக்கு ஆட்பட்டு வாழ நான் அனுமதிக்க மாட்டேன். இலங்கையில் ஓர் அணுகுண்டு வெடித்தால், 15 மில்லியன் மக்கள் உயிரிழப்பார்கள். இலங்கை மீது அந்நியப்படையெடுப்பு நடக்குமானால், 15 மில்லியன் மக்களும் உயிரிழக்கக்கூடுமேயன்றி, ஒருபோதும் அந்நியப்படையெடுப்புக்கு இடம்கொடுத்து, ஆட்பட்டு விடமாட்டோம்” என்றார்.   

இந்தப் பேச்சின் மூலம் ஜே.ஆர், இரண்டு விடயங்களை உணர்த்தினார். முதலாவதாக காந்தியையும் நேருவையும் பற்றி மட்டுமே பேசியதனூடாக, பதவியிலிருக்கும் இந்தியப் பிரதமர், இந்தியாவின் ‘இரும்புப் பெண்மணி’ என்றறியப்பட்ட இந்திரா காந்தியைப் பற்றிப் பேசுவதை முற்றாகத் தவிர்த்தார்.   

இது பற்றிய சுவாரஷ்யமான சம்பவமொன்றை, ரீ. சபாரட்ணம் பதிவு செய்கிறார். இந்தப் பேச்சுக்கு மறுதினம், இந்திரா காந்தியைச் சந்தித்திருந்த, சௌமியமூர்த்தி தொண்டமான், “நேற்றுத் தனது பேச்சில், ஜனாதிபதி ஜே.ஆர், தங்களின் தந்தையாரை வெகுவாகப் புகழ்ந்திருந்தமை, உங்களை மகிழ்வித்திருக்கும் என்று நம்புகிறேன்” என்று இந்திரா காந்தியிடம் கூறியிருந்தார்.

  கோபப்பட்ட இந்திரா காந்தி, “அந்தக் கிழவர், என் தந்தையைப் புகழவில்லை; மாறா, நான் எனது தந்தையளவுக்கு இல்லை என்பதை உலகுக்குச் சொல்கிறார்” என்று சினந்து கொண்டாராம்.   

ஆகவே, இந்திரா காந்தியை தனது பேச்சில் தவிர்த்தது, ஜே.ஆர்-இந்திராவிடையேயான பனிப்போரின் வெளிப்பாடு என்றால், அந்நியப் படையெடுப்பு பற்றி ஜே.ஆர் பேசியது, இந்தியா, இலங்கை மீது, இராணுவ நடவடிக்கையொன்றை முன்னெடுத்துவிடுமோ என்ற அச்சத்தின் பாலானது. 

அந்த அச்சம் ஜே.ஆரை உறுத்திக் கொண்டே இருந்திருக்கிறது என்பதற்கு அவரது நடவடிக்கைகளும் பேச்சுக்களுமே சான்று.  

கோவாவில் சந்திப்பு  

ஜே.ஆர்-இந்திரா பனிப்போரின் மத்தியில், கோபால்சாமி பார்த்தசாரதியின் தீர்வு முயற்சிகள் சிக்கியிருந்தன. ஜே.ஆர் வடக்கு-கிழக்கு இணைப்பு மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பற்றிய விட்டுக்கொடுப்புக்கே இடமில்லை என்று சொல்லிவிட்ட நிலையில், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் அந்த இரண்டு விடயங்களில், தன்னால் ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்ட நிலையில், இவற்றுக்கிடையில் சமரசமொன்றைத் தேடவேண்டிய சூழல், பார்த்தசாரதிக்கு இருந்தது.   
பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாட்டின் அடுத்த கட்டமாக, டெல்லியிருந்து கோவாவுக்குப் பொதுநலவாய அரசுத் தலைவர்கள் சென்றிருந்த நிலையில், கோவா விரைந்த பார்த்தசாரதி, அங்கு ஜே.ஆரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்ற கட்டமைப்பிலிருந்து மாற, ஜே.ஆர் தயாராக இல்லை. ஆனால், மாவட்ட அபிவிருத்தி சபைகளின் அதிகாரத்தை அதிகரிப்பது தொடர்பில் இணக்கம் தெரிவித்தார்.   

மேலும், தான் முடிவெடுக்க முன்பதாக, சர்வ கட்சி மாநாட்டை நடத்தி, அனைத்துத் தரப்பினரது கருத்துகளையும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் ஜே.ஆர் குறிப்பிட்டார். சில விமர்சகர்கள் இதை, ஜே.ஆரின் காலங்கடத்தும் தந்திரோபாயத்தின் ஒரு பகுதி என்கிறார்கள்.   

எவ்வாறாயினும், மாவட்ட அபிவிருத்திச் சபைகளைத் தாண்டிய தீர்வொன்றுக்கு, ஜே.ஆரைச் சம்மதிக்க வைத்துவிட முடியும் என்ற நம்பிக்கையில், பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு நிறைவடைந்த பின்பு, ஓரிரு நாட்கள், ஜே.ஆரின் இந்திய விஜயத்தை நீட்டிக்குமாறு, பார்த்தசாரதி வேண்டிக் கொண்டார். அதற்கு ஜே.ஆர் சம்மதித்திருந்தார்.   

டெல்லியில் சந்திப்பு  

நவம்பர் 29 ஆம் திகதி பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு நிறைவடைந்த பின்னர், மாலையில் டெல்லியில் தங்கியிருந்த ஜே.ஆரை, பார்த்தசாரதி சந்தித்தார். இம்முறை தன்னுடன், தொண்டமானையும் நீலன் திருச்செல்வத்தையும் அழைத்துச் சென்றிருந்தார்.   

மாவட்ட அபிவிருத்திச் சபைகளைத் தாண்டியதொரு, பிராந்திய ரீதியிலான தீர்வுக் கட்டமைப்பின் அவசியப்பாட்டை மிக விரிவாக பார்த்தசாரதி, ஜே.ஆருக்கு எடுத்துரைத்தார். 

“தமிழர் தரப்பு, தனிநாடு என்ற கோரிக்கையிலிருந்து இறங்கி வருகிறது” என்பதை அழுத்தமாகச் சுட்டிக்காட்டிய பார்த்தசாரதி, “பிராந்திய சபைகள்தான் தமிழ் மக்களின் தனிநாட்டுப் பிரிவினைக்கு, ஏற்றுக்கொள்ளத்தக்க குறைந்தபட்ச மாற்றாக இருக்கும்” என்ற அடிப்படையில் தனது வாதத்தை முன்னெடுத்தார்.  

எதுவிதக் கருத்துமின்றி, தன் முன் வைக்கப்பட்ட கருத்துகளை, ஜே.ஆர் கேட்டுக் கொண்டிருந்தார். பார்த்தசாரதியின் பிராந்திய சபையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுக்கட்டமைப்பு பற்றிய எடுத்துரைப்புகளோடு, அன்றைய சந்திப்பு நிறைவுக்கு வந்தது. 

மறுநாள் நவம்பர் 30 ஆம் திகதி காலையில், மீண்டும் ஜே.ஆரை பார்த்தசாரதி, தொண்டமான், நீலன் ஆகியோர் சந்தித்தனர். 29 ஆம் திகதி மாலை, பார்த்தசாரதி முன்வைத்த கோரிக்கை தொடர்பான, ஜே.ஆரின் முடிவை அறியும் தருணமாக அது இருந்தது.   

பார்த்தசாரதியின் கருத்துகள் தொடர்பில் தான் ஆழமாகப் பரிசீலித்ததாகச் சொன்ன ஜே.ஆர், இதனால் தனக்கு இலங்கையில் பிரச்சினை வரலாம்; ஆனால், பிராந்திய ரீதியிலான கட்டமைப்பைக் கொண்ட தீர்வுக்குத் தான் சம்மதிப்பதாகத் தெரிவித்தார். 

இந்த முடிவு பார்த்தசாரதி உள்ளிட்ட அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது. இதுபற்றி மிகவும் மகிழ்ச்சியடைந்த தொண்டமான், ஜே.ஆரின் துணிகரமான இந்த முடிவுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.   

ஆனால், சர்வ கட்சி மாநாட்டின் பின்னர்தான் எந்த முடிவும் என்பதில் ஜே.ஆர், தெளிவாக இருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் சர்வ கட்சி மாநாட்டுக்கு அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பார்த்தசாரதி, ஜே.ஆரிடம் முன்வைத்தார்.   

அதற்குப் பதிலளித்த ஜே.ஆர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, பிரிவினைவாதத்தை கைவிடும் வரை, அவர்களோடு பேசுவதில்லை என்பது, அமைச்சரவையின் முடிவு என்று சொன்னார். 

இதற்குப் பதிலளித்த பார்த்தசாரதி, “தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் உங்கள் அரசாங்கத்தோடு பேசுவதில்லை என்று முடிவெடுத்திருந்தார்கள். ஆனால், இந்தப் பிரச்சினை உங்கள் அரசாங்கமும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுமே பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினை. ஆகவே, கட்டாயம் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, சர்வ கட்சி மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்” என்று ஜே.ஆரிடம் எடுத்துரைத்தார்.
தான் இந்த விடயத்தை, சர்வ கட்சி மாநாட்டில் முன்வைப்பதாக ஜே.ஆர் உறுதியளித்தார்.  

அனெக்ஷர் ‘ஸீ’  

இந்த அடிப்படை இணக்கப்பாடுகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் உடனடியாக ஈடுபட்ட பார்த்தசாரதி, 30 ஆம் திகதி பகலில், ஜே.ஆரைச் சந்தித்து, அந்த ஆவணத்தின் முன்வரைவைக் கையளித்தார். அந்த ஆவணத்தின்படி பிறந்ததுதான் ‘அனெக்ஷர் ‘ஸீ’’ (Annexure ‘C’) என்று பிரபலமாக அறியப்பட்ட முன்மொழிவுகள் ஆகும்.   

இந்த முன்மொழிவுகள், 1983 டிசெம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமான சர்வ கட்சி மாநாட்டில், ஜே.ஆர் சமர்ப்பித்த அறிக்கையில், பின்னிணைப்பு ‘ஸீ’யாக இணைக்கப்பட்டிருந்தமையே அனெக்ஷர் ‘ஸீ’ என்பதன் பெயர்க்காரணம். அனெக்ஷர் ‘ஸீ’ பின்வரும் முன்மொழிவுகளைக் கொண்டிருந்தது.  

(1) ஒரு மாகாணத்துக்கு உட்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபைகள், அவை இணங்கும் பட்சத்திலும், அம்மாவட்டத்தில் சர்வஜன ஒப்பங்கோடல் மூலம் பெறப்படும் அங்கிகாரத்தின் படியும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிராந்திய சபைகளாக இணைய முடியும்.  

(2) வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் பொறுத்தவரையில், அவற்றின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளமையினால் இயங்காதிருக்கும் காரணத்தினால், ஒரு மாகாணத்துக்குள்ளான  அவற்றின் இணைப்பு, ஏற்றுக் கொள்ளப்படும்.  

(3) மேற்கூறியவாறு, தீர்மானிக்கும் ஒவ்வொரு பிராந்தியமும் ஒரு பிராந்திய சபையைக் கொண்டிருக்கும். பிராந்திய சபையில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட கட்சியின் தலைவர், அப்பிராந்திய முதலமைச்சராக ஜனாதிபதியினால் நியமிக்கப்படுமாறு மரபு உருவாக்கப்படும். அந்த முதலமைச்சர், பிராந்திய அமைச்சரவையை ஸ்தாபிப்பார்.  

(4) பிராந்தியங்களுக்கென்று பிரித்தொதுக்கப்படாத விடயங்கள் மீது ஜனாதிபதியும் நாடாளுமன்றமும் தொடர்ந்தும் அதிகாரம் செலுத்தும் அதேவேளையில், ஒட்டுமொத்த குடியரசின் இறைமையைப் பாதுகாத்தல் ஒற்றுமை, ஆட்புல ஒருமைப்பாடு, பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தி தொடர்பிலும் ஜனாதிபதியும் நாடாளுமன்றமும் தொடர்ந்து அதிகாரத்தைக் கொண்டிருக்கும்.  

(5) பிராந்தியத்தின் சட்டவாக்க அதிகாரமானது, பிராந்திய சபையிடம் இருக்கும். பிராந்திய சபையானது, பிராந்தியத்தின் உள்ளகச் சட்டவொழுங்கு, நீதி மேலாண்மை, சமூகப் பொருளாதார அபிவிருத்தி, கலாசார விடயங்கள், காணிக் கொள்கை என்பவை உள்ளிட்ட பிராந்தியங்களுக்கென்று குறித்தொதுக்கப்பட்ட விடயதானங்கள் தொடர்பில், சட்டமியற்றும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும். பிராந்தியத்துக்கென்று குறித்தொதுக்கப்படும் விடயதானங்கள் விரிவாக எடுத்துரைக்கப்படும்.  

(6) பிராந்திய சபைகள் வரிகளையும் கட்டணங்களையும் அறவிடும் அதிகாரத்தைக் கொண்டிருப்பதோடு, வரவுகளானவை அப்பிராந்தியத்துக்குரிய திரட்டிய நிதியமாகக் கட்டமைக்கப்படும். அந்நிதியத்துக்குக் குடியரசானது நிதியுதவிகள், ஒதுக்கீடுகள், மானியங்கள் என்பவற்றை வழங்க முடியும். காலத்துக்குக் காலம் அமையும் நிதி ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பிராந்தியங்களுக்கான நிதி வளம் பகிர்ந்தளிக்கப்படும்.  

7) ஒவ்வொரு பிராந்தியத்திலும் மேல் நீதிமன்றமொன்றை உருவாக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும். இலங்கை உயர் நீதிமன்றமானது மேன்முறையீட்டு மற்றும் அரசமைப்புத் தொடர்பிலான சட்ட அதிகாரங்களைக் கொண்டிருக்கும்.  

 (8) ஒவ்வொரு பிராந்தியமும் அப்பிராந்தியத்தின் அதிகாரிகள் மற்றும் ஏனைய பொதுச் சேவையாளர்களையும் அப்பிராந்தியத்துக்கென்று நியமனமளிக்கப்பட்ட ஏனைய அதிகாரிகள் மற்றும் பொதுச் சேவையாளர்களையும் கொண்ட பிராந்திய சேவையைக் கொண்டிருக்கும். பிராந்திய சேவை தொடர்பான நியமன மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கவென ஒவ்வொரு பிராந்தியமும் பிராந்திய பொதுச் சேவை ஆணைக்குழுவைக் கொண்டிருக்கும்.  

(9) இலங்கையின் ஆயுதப் படைகள் தேவையான, இலங்கையின் இனங்களின் நிலையை வெளிப்படுத்துவதாகக் கட்டமைக்கப்படும். வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களில், உள்ளக பாதுகாப்புக்கான பொலிஸ்படையானது அவ்வவ் பிராந்தியங்களின் இனத் தொகுப்பைப் பிரதிபலிப்பதாக அமையும்.  

(10) திருகோணமலைத் துறைமுகத்தை நிர்வகிக்க, மத்திய அரசின் கீழான ஒரு துறைமுக அதிகாரசபை ஸ்தாபிக்கப்படும். குறித்த துறைமுக பிரதேசம், அந்த அதிகார சபையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும். அதற்குரிய மேலதிக அதிகாரங்கள் பற்றி, பின்னர் ஆராயப்படும்.  

(11) காணி அபிவிருத்தி மற்றும் அரசாங்கம், காணிக் குடியேற்றத்தை எவ்வாறு முன்னெடுக்கும் என்பது தொடர்பிலான தேசியக் கொள்கை ஒன்று உருவாக்கப்படும். எல்லாக் குடியேற்றங்களும், பிராதான திட்டங்கள் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படும் பட்சத்தில், குடிப்பரம்பல் சமநிலையைப் பாதிக்காதவாறான இனவிகிதாசாரத்தில் அமையவேண்டும்.  

(12) உத்தியோகபூர்வ மொழி சிங்களம் மற்றும் தேசிய மொழி தமிழ் தொடர்பிலான அரசமைப்பு ஏற்பாடுகள் மற்றும் ஏனைய சட்ட ஏற்பாடுகள், தேசியக் கொடி, தேசிய கீதம் பற்றிய அரசமைப்பு மற்றும் சட்ட ஏற்பாடுகள் என்பன ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், நடைமுறைப்படுத்தப்படும்.   

(13) சர்வகட்சி மாநாடானது இந்த முன்மொழிவுகளை சாத்தியமாக்கும் அரசமைப்பு மற்றும் சட்டத் திருத்தங்களைச் செய்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் ஒரு குழுவை நியமிக்கும். அதற்கான செயலகத்தையும் அவசியமான சட்டச் செல்வாக்கையும் அரசாங்கம் அளிக்கும்.   

(14) சர்வகட்சி மாநாட்டின் இணக்கப்பாடானது, சட்டவாக்க நடவடிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட முன்பு, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவினாலும், ஏனைய கட்சிகளின் செயற்குழுக்களினாலும் பரிசீலணைக்கு உட்படுத்தப்படும்.   

இந்திராவுடன் மீண்டும் சந்திப்பு  

பிராந்திய சபைகளுக்கு இணங்கிய ஜே.ஆர், மீண்டும் இலங்கை திரும்ப முன்னர், நவம்பர் 30 ஆம் திகதி மாலை, இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசினார். இதன்போது இந்திரா காந்தி, ஜே.ஆரிடம் இன்னொரு முக்கிய கோரிக்கையை முன்வைத்தார்.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .