2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிழையாக வழிநடத்தும் மதவாதமும் இனவாதமும்

காரை துர்க்கா   / 2019 மே 07 , பி.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகிய இலங்கைத் தீவை, கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாதம் பந்தாடியது. நாட்டின் அனைத்து இன, மத, மொழி மக்களும், இனி என்ன நடக்கும் என நடுங்கியவாறு இருந்தார்கள்; இருக்கின்றார்கள். ஒட்டுமொத்த நாடுமே அதிர்ந்தது ஆட்டம் கண்டது.   

இந்நிலையில், ஏப்ரல் 23ஆம் திகதி அமைச்சர்களின் விசேட சந்திப்பு நடைபெற்றது. அதையடுத்து, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன், ஊடகவியலாளர்களோடு உரையாடினார்.   

அதன் போது, “இந்த நாட்டில் இன்று, இனவாதத்துக்கு அரச ஆசீர்வாதம் இல்லை என்பது, நிம்மதி தரும் உண்மை ஆகும்” என்பதாகக் கருத்துத் தெரிவித்து இருந்தார்.   

“கடந்த காலங்களில், தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனக்கலவரங்களில், தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களது சொத்துகள் சூறையாடப்பட்டன. இவ்வேளைகளில், இனவாதிகளுக்கு அரசாங்கத்தின் ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. ஆனால், இன்று நிலைமை முன்னேறி உள்ளது” என்றவாறாகத் தொடர்கின்றார்.   

இது இவ்வாறு நிற்க, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை, தனியான பல்கலைக்கழகமாகத் தரமுயர்த்த வேண்டும் என்பது, தமிழ் மக்களது நீண்ட காலக் கோரிக்கை ஆகும். மேலும் அதற்கு, ‘வன்னிப் பல்கலைக்கழகம்’ எனப் பெயரிட வேண்டும் என்பது, தமிழ் மக்களது தயவான வேண்டுகோள் ஆகும். தமிழ் மக்களது இந்தக் கோரிக்கையையும் வேண்டுகோளையும் உயர்கல்வி அமைச்சு ஏற்றிருந்தது.   

ஆனால், ‘வன்னிப் பல்கலைக்கழகம்’ எனப் பெயரிடுவதற்கு, இந்த நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் விருப்பம் தெரிவிக்கவில்லை எனத் தெரிய வருகின்றது. ‘வவுனியாப் பல்கலைக்கழகம்’ எனப் பெயரிடலாம் என, அவர்கள் யோசனையை முன் வைத்துள்ளனர் என அறிய முடிகின்றது.   

இதேவேளை, நம்நாட்டில் ராஜரட்டைப் பல்கலைக்கழகம், ஊவா வெல்லசப் பல்கலைக்கழகம், றுகுணு பல்கலைக்கழகம் எனப் பல பல்கலைக்கழகங்கள் உள்ளமை நாம் அறிந்ததே.   

ஆகவே, பெரும்பான்மை இன மக்களது பிராந்தியங்களை அடிப்படையாகக் கொண்டு, நாட்டில் பல பல்கலைக்கழகங்கள் தலை நிமிர்ந்து நிற்கையில், தமிழ் மக்களது வன்னிப் பிராந்தியத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு பல்கலைக்கழகம் எழும்பவே முடியாத நிலையே இன்றும் உள்ளது.   

எனவே, தமிழ் மக்கள் தமக்கான உயர்கல்வி நிறுவனத்துக்கு, தமக்கு விருப்பமான பெயர் சூட்டுவதிலேயே, பல முட்டுக்கட்டைகளும் முரண்பாடுகளும் கொழும்பு அரசாங்கத்தால், தற்போதும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதற்கு உள்ளே இனவாதம் ஒழித்(ந்)து உள்ளது அல்லவா? இது தமிழ் மக்களது உணர்வுகளை, உலுக்கி விடுகின்றது அல்லவா?   

“நாட்டினுடைய தேசியப் பாதுகாப்பு முக்கியம்; தேசியப் பாதுகாப்பு முக்கியம்” எனத் தொடர்ந்து, ஆட்சியாளர்கள் கூறி வருகின்றார்கள். அதற்காக வடக்கு, கிழக்கு தமிழர் பிரதேசங்களிலேயே, அதிகம் கவனமும் செலுத்தி வந்துள்ளனர். தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தில், ஆட்சியாளர்களது பார்வை வடக்கு, கிழக்கை மட்டும் மய்யப்படுத்தியதாகவே இருக்கின்றது.   

தேசிய பாதுகாப்புக்கு என்ற போர்வையில், தமிழ் மக்களது காணிகளைக் கபளீகரம் செய்யப்படுகின்றது; படைப் பிரிவுகளினது அதிகப்படியான படையணிகள், அங்கேயே நிலை நிறுத்தப்பட்டுள்ளன. புலிகள் மீண்டும் எழுச்சி பெறக் கூடிய ஏதுநிலைகள் எதுவுமற்ற நிலையிலும், படைகளை முன்னிறுத்தி, புலிகளை முன்னிறுத்துகின்றார்கள்.   

தமிழ் மக்களை, அதிலும் குறிப்பாக முன்னாள் போராளிகளைத் தொடர்ந்தும் தமது கண்காணிப்பு வலயத்துக்குள் கடுமையாகப் பேணி வந்தார்கள்; வருகின்றார்கள். மட்டக்களப்பில் கடந்த நவம்பர் மாதத்தில், இரு பொலிஸாரைச் சுட்டும் வெட்டியும் கொன்றார்கள் எனக் கூறி, முன்னாள் போராளியைக் கைது செய்தார்கள்; சிறையில் அடைத்தார்கள்.   

இவ்வாறாகக் குற்றம் புரியாத நிரபராதி, குற்றம் புரிந்துள்ளார் எனக் கூறி, ஐந்து மாதங்கள் சிறையில் வாட்டுவது, தமிழ் மக்களின் பார்வையில் இனவாதமாகவே உள்ளது. இதுபோலவே, பல நூற்றுக் கணக்கான தமிழ் இளைஞர்கள், இன்னமும் சிறையில் வாடுகின்றார்கள். போர் ஓய்ந்து பத்து ஆண்டுகளாகியும் இவர்களை விடுதலை செய்ய, ஏது தாமதம்?   

2009ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலங்களில், முல்லைத்தீவு மாவட்டத் தமிழ் மீனவர்களது வாழ்வாதாரம் போர் நடவடிக்கைகள் காரணமாக முற்றிலும் முடங்கிக் காணப்பட்டன. ஆனால், போர் நிறைவடைந்த இ(அ)க்காலப் பகுதியில், முல்லை மாவட்ட தமிழ் மீனவர்கள், சற்றுத் தலை நிமிரலாம் என உள்ளூர எண்ணினர்; நிம்மதி மூச்சு விட்டார்கள்.   

ஆனால், நாட்டின் பிற பாகங்களிலிருந்து, பிற மாவட்ட, பிற இனங்களைச் சேர்ந்த மீனவர்களது வருகை, சடுதியாக அதிகரித்தது. அவர்கள், குறித்த மாவட்டத்திலுள்ள நீரியல் வளத்திணைக்களத்தினதோ, உள்ளூர் மீனவ அமைப்புகளினதோ சிபாரிசுகள் இன்றி, கொழும்பில் இருந்து நேரடியாகக் கிடைக்கப் பெற்ற (அரசின் ஆசீர்வாத்தோடு) அனுமதிப் பத்திரங்களுடனேயே தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.   

அவர்களது கட‌ற்றொழில் சார் நடவடிக்கைகள், சட்ட ரீதியற்ற வகையில் அமைந்து, தமிழ் மீனவர்களது பொருளாதாரத்தைத் தவிடு பொடியாக்கி விட்டது; கடல்வளம் சூறையாடப்பட்டது.   

இவ்வாறு பிற மாவட்டங்களில் இருந்த வந்த மீனவர்கள், கடற்கரை ஓரங்களிலும் வீதி ஓரங்களிலும் வாடிகள் அமைந்து, தொழில் புரிந்து வந்தனர். இது வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும்; ஆனால், முல்லைத்தீவு மாவட்டமே பெரிதும் பாதிக்கப்பட்டது.   

இவ்வாறாக, முல்லைத்தீவில் சாலை என்ற இடத்தில் மட்டும் சுமார் 2,500 முஸ்லிம், சிங்கள மீனவர்கள் தொழில் புரிந்து வந்துள்ளனர். இந்நிலையில், ஏப்ரல் 21ஆம் திகதி அசம்பாவிதங்களை அடுத்து, அவர்கள் முல்லைத்தீவிலிருந்து ஓட்டமெடுத்து வருகின்றனர்.   

கடந்த மற்றும் நடப்பு அரசாங்கத்தின் ஆசீர்வாதம் இருந்தமையால், அசைக்க முடியாது இருந்தவர்களை, ஏப்ரல் 21 அசம்பாவிதமே அசைத்து விட்டது.   

“இன்று, இந்நாட்டில் இனவாதத்துக்கு அரசாங்கத்தின் ஆசீர்வாதம் இல்லை என்பது, நிம்மதி தரும் உண்மை ஆகும்” என அமைச்சர் கூறுகின்றார்.   

இனவாதமின்மை என்பது, தமிழ் மக்களுக்கும், நிம்மதி தரும் விடயமாக இருக்க வேண்டுமாயின், இப்போது அமைதி குழம்பிய நிலையில், தங்கள் சொந்த ஊர்களுக்கு ஓட்டமெடுப்பவர்கள், அமைதி திரும்பிய பின்னர், முல்லைத்தீவுக்கு மீள அடாத்தாக வந்து, அங்கு பூர்வீகமாக வாழும் அனைத்தும் இழந்த அப்பாவித் தமிழ் மீனவர்களது வாழ்வாதார மீட்சிக்குத் தடையாக இருக்கக் கூடாது.   

அண்மையில் ஏற்பட்ட அசம்பாவிதங்களை அடுத்து, மீளவும் கொண்டு வரப்பட்ட அவசரகாலச் சட்டம், தமிழ் மக்கள் மீதும் பாய்ந்து விட்டது. வரலாற்றில் இதுவரை காலமும் கடும் சோதனைக் காலங்களில் கூட, சோதனைக்கு உட்படுத்தப்படாத தமிழ் மக்களின் சொத்தாகிய யாழ். பல்கலைக்கழகம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு விட்டது.   

இவ்வாறான சட்டங்களின் வலியையும் வேதனையையும் கடந்த  40 ஆண்டு காலம், தமிழ்மக்கள் தங்கள் உடலாலும் உள்ளத்தாலும் தாங்கியவர்கள். இன்று அந்தச் சட்டங்கள், மீண்டும் தங்கள் மீது தேவையற்றுப் பாயப் போகின்றன என நிம்மதி இழந்த நிலையில் உள்ளனர்.   

அண்மைக் காலங்களில் தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கொழும்பில் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட உள்ளதாகக் கதைகள் பரவலாக அடிபட்டன.   

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கொழும்பில் போட்டியிடப் போகின்றதாம். அவர்கள் கொழும்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றால் எங்களுக்கு மகிழ்ச்சியும் இல்லை; தோல்வியுற்றால் கவலையும் இல்லை. ஆனால் கூட்டமைப்பு, கொழும்பில் போட்டியிட்டு மனோ கணேசனுக்கு தொந்தரவு கொடுக்கப் போறாங்கள் போல எனக்குத் தோணுது” என, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், கருத்துப் பகிர்ந்து கொண்டார்.  இது அந்த முதியவரின் கருத்து மட்டும் அல்ல, ‘ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல’ ஒட்டு மொத்த வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களும் இப்படியே கருதுகின்றார்கள்.   

இவ்வாறாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அமைச்சர் மனோ கணேசன் மீது அன்பும் மரியாதையும் கொண்டுள்ளனர். கொழும்பில் மனோவின் வெற்றியை, தமக்கான வெற்றியாகப் பார்ப்பார்கள்; அவரது வெற்றியில் வெளிப்படையாக மகிழ்வார்கள்.   

இலங்கை என்ற, அழகிய எங்கள் தாய்த் தேசத்தை, இனவாதமும் மதவாதமும் பிழையான செல்நெறியில் வழி நடத்துகின்றது. இவற்றுக்கு ஆகுதியாக, தமிழ் மக்கள் கொடுத்த விலை மிகப்பெரியது. எழுபது ஆண்டு காலமாக, இந்த இருவாதங்களும் தாண்டவம் ஆடுகின்றன.   

இந்நிலையில், அமைச்சர் மனோ கணேசன் என்ன அடிப்படையில், எதை ஆதாரமாகக் கொண்டு, “இலங்கையில் இனவாதத்துக்கு, அரசாங்கத்தின் ஆசீர்வாதம் இல்லை” என நிறுவ முயல்கின்றார் என்பது, தமிழ் மக்களது கண்ணேட்டத்தில், ஒரு பக்கத்தில் ஆச்சரியமாகவும் மறுபக்கத்தில் வேடிக்கையாகவும் உள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .