2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

போர்க்குற்றங்கள் - மாறாத மனோநிலை

கே. சஞ்சயன்   / 2017 செப்டெம்பர் 04 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேசிலுக்கான இலங்கைத் தூதுவராகப் பணியாற்றிய, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக, பிரேஷிலியா, பொகோடோ உள்ளிட்ட நகரங்களில், தொடரப்பட்ட போர்க்குற்ற வழக்கு, மீண்டும் இலங்கை தொடர்பான பரபரப்பை சர்வதேச ஊடகங்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.  

2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், இலங்கையில் நடந்த போர்க்கால மீறல்கள் பற்றிய விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் போக்கு, சர்வதேச ஊடகங்கள் மத்தியில் குறையத் தொடங்கியிருந்தது. கிட்டத்தட்ட, கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுபற்றிய பெரிதான அக்கறை அவர்களிடம் இருக்கவில்லை என்று கூட சொல்லலாம்.  

ஆனால், ஜெனரல் ஜயசூரியவுக்கு எதிராகத் தொடரப்பட்ட போர்க்குற்ற வழக்கை அடுத்து, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாகவும், அதற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சர்வதேச ஊடகங்களில் செய்திகள், கட்டுரைகளை வெளிவர ஆரம்பித்துள்ளன.  

பிரேஷில் உள்ளிட்ட ஆறு தென் அமெரிக்க நாடுகளில் ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக, போர்க்குற்ற வழக்கைத் தாக்கல் செய்துள்ள, ஸ்பானிஷ் சட்டநிபுணரான, கார்லோஸ் காரே ஸ்சனா பெர்னான்டஸ், இந்த வழக்குகளைத் தாக்கல் செய்தவுடன் கூறிய கருத்து இங்கு கவனிக்கப்பட வேண்டியது.  

“இது மறக்கப்பட்டு விட்ட ஓர் இனப்படுகொலை. ஆனால், இந்த முயற்சி ஜனநாயக நாடுகளை ஏதோ ஒன்றைச் செய்யக் கட்டாயப்படுத்தும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.  

இலங்கையில் நடந்த போர்க்கால மீறல்களை, மறந்து விட்டு, கடந்து செல்லும் ஒரு போக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்டிருந்தது. சர்வதேச சமூகமும், ஜெனிவாவில் தீர்மானங்களை நிறைவேற்றியதுடன் சரி, என்றளவுக்கு மௌனமாகவே இருந்தது.  

இதனால்தான், இது மறக்கப்பட்டு விட்ட ஓர் இனப்படுகொலை என்று ஸ்பானிஷ் சட்டநிபுணரான, கார்லோஸ் காரே ஸ்சனா பெர்னான்டஸ், கூறியிருந்தார்.  

அவரது கணிப்பின்படி, தென் அமெரிக்க நாடுகளில், ஜெனரல் ஜயசூரியவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு, ஜனநாயக நாடுகளை ஏதோ ஒன்றைச் செய்வதற்கு கட்டாயப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன என்பதையே, ஓரிரு நாட்களில், மீண்டும் போர்க்கால மீறல்கள் குறித்த சர்வதேச கவனம் திரும்பியுள்ளதில் இருந்து உணர முடிகிறது.  

ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றும், அவரை, தூக்கு மேடைக்கு இழுத்துச் செல்லக் கூடியது அல்ல. தென் அமெரிக்க நாடுகளில், அனுபவித்து வரும் இராஜதந்திர சிறப்புரிமைகளை இரத்துச் செய்து, அவரை வெளியேற்றுவதையே நோக்கமாகக் கொண்டது என்பதை, ஸ்பானிஷ் சட்டநிபுணரான, கார்லோஸ் காரே ஸ்சனா பெர்னான்டஸ், கூறியிருக்கிறார்.  

ஆனால், குதிரை ஓடிய பின்னர், லாயத்தை மூடிய கதையாகத்தான் இந்த முயற்சி அமைந்திருக்கிறது. ஏனென்றால், பிரேஷிலில் இரண்டு ஆண்டுகள் தூதுவராகப் பணியாற்றிய ஜெனரல் ஜயசூரிய, அங்கிருந்து. கடந்த ஓகஸ்ட் 27ஆம் திகதி புறப்பட்ட மறுநாளே அவருக்கு எதிரான வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.  

எனினும், ஜெனரல் ஜெயசூரிய, டுபாய் வழியாக, கொழும்புக்கு திரும்பிக் கொண்டிருந்த போதே, இந்த வழக்குத் தாக்கல் பற்றிய செய்திகள் பரபரப்பாக வெளியாகின.  

இதனால் அவர் பிரேஷிலில் இருந்து தப்பியோடி விட்டார் என்றும், அவர் எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை; உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.  

ஒரு நாட்டின் தூதுவருக்கு எதிராக இன்னொரு நாட்டில், போர்க்குற்ற வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்படும் போதே, அது சர்வதேச கவனத்தை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. அவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட சூழலில், அந்தத் தூதுவர் தலைமறைவாகி, நாட்டை விட்டு வெளியேறினால், அது இன்னமும் பரபரப்பை ஏற்படுத்தும்.  

அதுதான், ஜெனரல் ஜயசூரிய விடயத்திலும் நடந்தது. அவர் பிரேஷிலை விட்டு வெளியேறும் கட்டத்தில், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதால், அவர் தப்பியோடி விட்டார் என்ற கருத்து சர்வதேச அளவில் பரவியது.  

இதைப் பொய் என்று நிரூபிப்பதற்காக, அவரது பதவிக்காலம், ஓகஸ்ட் 27ஆம் திகதியுடன் முடிந்து விட்டது, அதற்கு முன்னரே, அவருக்கு பிரேஷிலியாவில் பிரியாவிடை அளிக்கப்பட்டிருந்தது என்ற தகவல்களையெல்லாம் வெளியிட்டு, நம்பச் செய்ய வேண்டிய சூழல், வெளிவிவகார அமைச்சுக்கு ஏற்பட்டது.  

‘காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதை’யாக, ஜயசூரியவுக்கு எதிரான வழக்கும், அவரது வெளியேற்றமும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் இடம்பெற்றதால், பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து சமாளிக்க வேண்டிய நெருக்கடி இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்பட்டது.  

பிரேஷிலில் இருந்து கொழும்பு திரும்பி விட்டார் ஜெனரல் ஜயசூரிய. எனவே அவருக்கு எதிரான, நேரடியான நடவடிக்கைகள் எதிலும், இந்த வழக்குகளின் மூலம் எடுக்க முடியாது. பிரேஷில் உள்ளிட்ட நாடுகளில் கூட, அவ்வாறான நேரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு.   

ஏனென்றால், இராஜதந்திர சிறப்புரிமை ஜெனரல் ஜயசூரியவுக்கு இருந்தது. அதை இல்லாமல் செய்துதான், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்திருக்கும்.   

சிலவேளைகளில் நீதிமன்ற நடவடிக்கைகள், அத்தகைய கட்டம் வரை சென்றிருக்கலாம். அது ஒன்றும் நடக்க முடியாத அதிசயம் என்று கூற முடியாது. ஏனென்றால், இந்த வழக்கைத் தொடர்ந்த சட்ட நிபுணர், ஏற்கெனவே, தென்அமெரிக்காவிலுள்ள சர்வாதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் வழக்குகளை நடத்தியவர்.  

ஜெனரல் ஜயசூரியவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு, அவருக்கு இருக்கும் இராஜதந்திர சிறப்புரிமை தடையாக இருக்கும் என்று தெரிந்து கொண்டும், ஒரு பிரபல சட்ட நிபுணர் அந்த முயற்சியில் இறங்கியிருக்கிறார் என்றால், ஏதோ சில வாய்ப்புகள் சாதகமாக இருந்திருக்கின்றன என்றே கருத வேண்டும்.  

எவ்வாறாயினும், ஜெனரல் ஜயசூரிய, பிரேஷிலியாவில் இருந்து வெளியேறி விட்ட நிலையில், இந்தப் போர்க்குற்ற வழக்குகள், அவருக்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தாது, ஆனால், இந்த வழக்குகளின் பாதிப்பில் இருந்து ஜெனரல் ஜயசூரியவினாலோ, போர்க்கால மீறல்களுக்கு பொறுப்பானவர்கள் என்று குற்றம்சாட்டப்படும், ஏனைய இராணுவ அதிகாரிகளாலோ, அவ்வளவு இலகுவாக தப்பித்து விட முடியாது.  

இவர்களுக்கு எதிரான, நீதிமன்ற உத்தரவுகளை, தென்அமெரிக்க நீதிமன்றங்களில், பெறுவதற்கு வழக்குத்தொடுநர் தரப்பான, மனித உரிமை அமைப்புகள், முற்படலாம். அதனால், எதிர்காலத்தில், இலங்கையின் இராணுவத் தளபதிகள் தமது புறநடமாட்டங்களை, மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையும் ஏற்படலாம்.  

அதேவேளை, தென் அமெரிக்க நீதிமன்றங்களில், ஜெனரல் ஜயசூரியவுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று, இராணுவப் பேச்சாளர் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.  

அவரது இந்தக் கருத்து இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் நிலைப்பாட்டுடன் பொருந்திப் போகிறதா என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.  

அண்மையில், இராணுவத் தளபதியாகப் பதவியேற்ற பின்னர், இராணுவம் மீதான போர்க்குற்றச்சாட்டுகளை லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நிராகரித்திருந்தாலும், இராணுவத்துக்குள் தவறு செய்தவர்கள் என்று நிரூபிக்கப்படுவோருக்கு எதிராகச் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.  

இராணுவத்துக்குள், தவறு செய்தவர்கள் இருக்கலாம் என்பதையே அர்த்தப்படுத்தியிருந்தது அவரது கருத்து. அதை அவர் முற்றாக நிராகரிக்கவில்லை. ‘கறுப்பு ஆடுகள்’ என்றும் அவர்களை இராணுவத் தளபதி விளித்திருந்தார்.  

நேற்று முன்தினம், நடந்த அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கூட, குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு எதிராக, தகுந்த சாட்சியங்களின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.  

ஆனால், பிரேஷிலில் தொடரப்பட்ட வழக்கு என்ன, எந்த ஆதாரங்களின் அடிப்படையில் அந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது, அதன் அடிப்படை என்ன என்று எதையுமே தெரிந்து கொள்ளாமல், இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என்று நிராகரித்திருந்தார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன.  

அதாவது, தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில், தவறு செய்தவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால், இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், என்ற இராணுவத் தளபதியின் நிலைப்பாட்டுக்கு இது முரணானதாகும்.  

வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், மஹிஷினி கொலன்னே, பிரேஷிலில் ஜெனரல் ஜயசூரியவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குப் பற்றிய எந்த அதிகாரபூர்வ தகவலும் கிடைக்கவில்லை என்று கூறியிருந்த நிலையில், இராணுவப் பேச்சாளர், அந்தக் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக கூறியிருப்பது, இன்னமும் அரசாங்கம் மற்றும் இராணுவ நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்படவில்லை என்பதையே உறுதிப்படுத்துகிறது.  

எந்தக் குற்றச்சாட்டு தமக்கெதிராக சுமத்தப்பட்டாலும் அதை உடனடியாக மறுப்பது இராணுவத்தின் வழக்கம். அரசாங்கத்தின் வழக்கமும் அதுதான்.   

எந்தக் குற்றச்சாட்டையும் விசாரிக்காமலேயே அதைப் பொய் என்று நிராகரிக்க முனையும் போக்கில் இருந்து மாறாத வரையில், மீறல்களுக்குப் பொறுப்புக்கூறும் மனநிலைக்கு அரசாங்கமோ, இராணுவமோ வரவில்லை என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும்.  

இந்த மனோநிலை தொடரும் வரை, பொறுப்புக்கூறலுக்கான தார்மீக எதிர்பார்ப்புகளை, இந்தத் தரப்புகளிடம் இருந்து ஒருபோதும் எதிர்பார்க்கவும் முடியாது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .