2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மருந்து தேடவேண்டிய இரட்டைத் தலையிடிகள்

Johnsan Bastiampillai   / 2021 ஏப்ரல் 27 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா 

எத்தனை அனுபவங்களைப் பெற்றுக் கொண்ட போதிலும், ஆட்சியாளர்களும் நாட்டு மக்களும் வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே, தொடர்ச்சியாக இடம்பெறும் நிகழ்வுகள் வெளிக்காட்டி நிற்கின்றன.  

குறிப்பாக, சிறுபான்மையினச் சமூகங்களின் மனங்களை வெல்ல வேண்டும் என்பதில், பெரும்பான்மையின அரசியல் தலைமைகள், அக்கறையாக இருப்பதாகத் தெரியவில்லை. பேரினவாதிகளைத் திருப்திப்படுத்திக் கொண்டு, காலத்தைக் கடத்தவே அவர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.   

உரிமைக் கோரிக்கை, ஜனநாயகம், சமத்துவம், இனப்பாகுபாடின்மை, இனநல்லிணக்கம், பாரபட்சமற்ற நீதி நிலைநாட்டல் பற்றிய கேள்விகளும் விமர்சனங்களுமே இலங்கையின் அரசியல், சமூகப் பெருவெளி எங்கும் உரக்கக் கேட்கின்றன.   

விடுதலைப் புலிகளின் பெயரைச் சொல்லி, தமிழர்களை நசுக்கியாயிற்று; இப்போது, பயங்கரவாதிகளின் பெயரைச் சொல்லி, அதே இரும்புக் கரங்கள் முஸ்லிம் சமூகத்தை நோக்கி நீள்கின்றன. யுத்தத்துக்குப் பிறகு, முஸ்லிம் சமூகத்தை நோக்கி ஏவி விடப்பட்டுள்ள இனவாதம், இதற்குத் துணை நிற்கின்றது.   

தமிழர்கள் நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஜெனீவா வரை சென்று விட்டனர். இப்போது, கத்தோலிக்க சமூகமும் நீதியை நியாயமான முறையில் நிலைநாட்டுமாறு உரத்த குரலில் பேசத் தொடங்கியுள்ளது. முஸ்லிம்களும் தமக்கு அநியாயங்கள் இழைக்கப்படுகின்ற போது, நீதிசார் கோரிக்கைகளையே முன்வைத்து வருகின்றனர்.   

ஆனால், மேல்மட்ட அரசியல் செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தமது அதிகாரக் கதிரையிலேயே குறியாக இருக்கின்றனர். அதற்காக, பிச்சைக்காரனுக்குப் புண்போல, அவர்களுக்கு ஏதாவது ஒன்று தேவைப்படுகின்றது.   
சிங்கள தேசியவாதிகளைத் திருப்திப்படுத்துவதற்கும் கிராமப் புறங்களில் வாழ்கின்ற மக்களைப் போக்குக் காட்டுவதற்கும், அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு ஏதாவது கிடைத்து விடுகின்றது. முன்னர் புலிகள்; இப்போது பயங்கரவாதிகள்.   

ஆனால், பயங்கரவாதமும் ஆயுதப் போராட்டமும் இந்த நாட்டுக்கு உகந்ததல்ல என்று கூறி, அதை முடிவுக்கு கொண்டு வந்தனர். நாடு என்ற அடிப்படையில் அது நியாயமானதும்தான். ஆனால், அதற்குப் பிறகு, சிறுபான்மையினர் மீதான குறிப்பாக, முஸ்லிம்களை மையப்படுத்திய ஒரு நெருக்கடிச் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.   

ஆக மொத்தத்தில், இலங்கை அரசியல் சூழலில், தற்போது ஏற்பட்டுள்ள எல்லாக் குழப்பங்களும் நீதி, இறைமை, ஜனநாயகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை என்றே வகைப்படுத்த முடியும்.   

இன்று அரசாங்கம் ஒரு சுழிக்குள் மாட்டிக் கொண்டுள்ளது. தமிழர்கள் ஏற்கெனவே அரசாங்கத்துடன் நல்லுறவில் இல்லை. இந்நிலையில் தற்போது கத்தோலிக்க சமூகமும் தேசியவாத, பௌத்த சக்திகளும் ஆட்சியாளர்களை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். ஆக, இது ஒற்றைத் தலைவலியல்ல; இரட்டைத் தலையிடியாகும்.    

இந்த ஆட்சி மலர்வதற்கு, மறைமுகமாகத் துணைநின்ற நாரஹேன்பிட்டி விகாராதிபதி முறுத்தொட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட பல தேசியவாத சக்திகள், கொழும்புத் துறைமுக நகர் விவகாரத்தில், நேரடியாகவே அரசாங்கத்தை எதிர்க்கின்றன.   

இதேபோன்றதொரு முறுகல் நிலையே களனி விகாரைக்கும் பண்டாரநாயக்க அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்பட்டது என்பதை, அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். ஆகையால், இதுவொரு நல்ல சகுணம் அல்ல என்பதை, அரசியல் அரிச்சுவடி கற்றவர்களும் அறிவார்கள்.   

இருப்பினும், துறைமுக நகரை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தை அரசாங்கம் கைவிடவில்லை. தேரர்களுக்கு விளக்கமளிக்கும் ஓரிரு நிகழ்வுகளைத் தவிர, இவ்விவகாரத்தைக் குளிர்விப்பதற்கான எந்தவித ஆக்கபூர்மான நடவடிக்கைகளும் ஆளும்தரப்பில் எடுக்கப்படவில்லை.   

இதற்கு முன்னதாகவே பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கத்தோலிக்க சமூகம், அரசாங்கத்தின் நீதி நிலைநாட்டல் பொறிமுறை தொடர்பாக, சாரமாரியான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றது.   

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நீண்டநாளாயிற்று. அதனடிப்படையில் முஸ்லிம்களை நோக்கியதான நீதி நிலைநாட்டல்கள், அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றன. இரண்டு முஸ்லிம் அரசியல் தலைமைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   

நீதி விசாரணைக்காக யாரை, எத்தனை பேரை வேண்டுமென்றாலும் கைது செய்யலாம். இலங்கையர் என்ற வகையில் அனைவரும் சட்டத்துக்குக் கட்டுப்பாட்டாக வேண்டும். ஆயினும், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான அறிக்கையில், முன்னாள் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், பௌத்த கடும்போக்கு அமைப்புகள் பற்றி முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள், ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற கேள்வி, பரவலாகச் சமூக, அரசியல் அரங்கில் முன்வைக்கப்படுகின்றது.   

ஏப்ரல் 21 தாக்குதல் நடைபெற்று இரண்டு வருடங்கள் சென்று விட்டன. ஆனால், உண்மைக் குற்றவாளிகள், சதித்திட்டம் தீட்டியவர்களை விசாரணை ஆணைக்குழு கண்டுபிடிக்கவில்லை. இதுவும், நீதி நிலைநாட்டப் படாமையும் கத்தோலிக்கர்களைக் கடுமையாக அதிருப்தியடையச் செய்துள்ளது.   

இதற்குப் பின்னால் வேறு சக்திகள் இருந்துள்ளன என்றும் அரசியல் நோக்கம் இருந்திருக்கின்றது என்றும், பேராயர் சற்றும் தயக்கமின்றி, திரும்பத்திரும்ப பகிரங்கமாகவே கூறி வருகின்றார். எனவே, சரியான நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதே, கத்தோலிக்க சமூகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.   

இது அரசாங்கத்திற்குப் பெரும் தலையிடியாக மாறியிருக்கின்றது. இவையெல்லாம் அரசாங்கத்தைச் செய்வதறியாது திணறும் நிலைக்கு ஆளாக்கியிருக்கின்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள இந்தக் குழப்பகரமான நிலையை மூடிமறைப்பதற்காகவோ மக்களை வேறுபக்கம் திசை திருப்புவதற்காக, பூனை கண்ணைமூடிக் கொண்டு பால் குடிப்பது போல, சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அரசியலரங்கில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.   

2005 முதல் 2015 வரை மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சி செய்தது போல, எந்தச் சலசலப்பும் இல்லாமல் இன்னுமொரு தசாப்தத்துக்கு ஆளலாம் என்று நினைத்திருந்த ஆட்சியாளர்கள், தேசியவாத சக்திகளும் கத்தோலிக்கர்களும் இவ்வளவு குறுகிய காலத்துக்குள் அதிருப்தி கொள்வார்கள் என்பதை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.   
எது எவ்வாறிருப்பினும், இவ்வாறான சூழலிலும் அரசாங்கத்தை, முஸ்லிம் சமூகம் எதிர்க்கவில்லை. ஆனால், அதன் பெறுமதியை ஆட்சியாளர்கள் விளங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. இரு தலைக் கொள்ளி எறும்பாக சிக்கிக் கொண்டுள்ள அரசாங்கம், அதன் ‘கனலை’ முஸ்லிம் சமூகத்தின் பக்கமே வெளித்தள்ளுகின்றது.    

பயங்கரவாதம், தீவிரவாதம், அடிப்படைவாதம், இனவாதம் போன்ற எல்லா விதமான வாதங்களும் இலங்கையில் வாழும் எல்லா சமூகங்களுக்கும் எதிரானவையே; இவற்றை இன, மத பேதமற்று அனைத்து மக்களும் எதிர்க்கின்றனர்.   

ஆனால். இவற்றுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் அல்லது, இதை வைத்து அரசியல் செய்பவர்கள் அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும்தான். உயர்ந்தபட்ச எழுத்தறிவைக் கொண்ட இலங்கை மக்களுக்கு, இந்த உண்மை தெரியாது என்று யாரும் நினைத்து விடக் கூடாது.   

எனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள தற்கால நெருக்கடிகள், கடைசியில் ஒட்டுமொத்த மக்களையே பாதிக்கும் என்ற அடிப்படையில், இவற்றுக்கு சுமூகமான தீர்வு காணப்பட வேண்டும். வெறுமனே தேசப்பற்று, ஒற்றையாட்சி என்ற கோஷத்தை மட்டும் தூக்கிப் பிடித்தால் மட்டும் போதாது. நவீன கொலனித்துவத்துக்கு இடமளிக்காதிருப்பதன் ஊடாக, அதை வெளிப்படுத்த வேண்டும்.   

அதேபோன்று, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் உண்மைச் சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளனரா? இதன் பின்னணியில் வெளிநாடுகள் உள்ளனவா? இன முரண்பாடு ஒன்றைத் தோற்றுவித்து, அதில் குளிர்காய்வதா அதன் நோக்கம் என்பதையெல்லாம் அரசாங்கம் கண்டறிய வேண்டும்.   

நீதி நிலைநாட்டல் நடவடிக்கையானது உண்மைக்குண்மையாகவும் பக்கச் சார்பின்றியும் நியாயபூர்வமாகவும் இடம்பெற வேண்டும். இவற்றையெல்லாம் வெற்றிகரமாகச் செய்து முடிப்பதென்றால், அதற்கு முன்னதாகவே பெரும்பான்மை, சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த சாதாரண மக்களின் மனங்களை வெல்வது அவசியம்.    

பிரச்சினை எங்கே இருக்கின்றதோ அதைச் சரியாக இனம் கண்டு தீர்க்க வேண்டும். அதில் இன்னுமின்னும் அரசியல் செய்ய நினைக்கக் கூடாது. ஒரு நோயால் பீடிக்கப்பட்டால் அதற்கு உரிய மருந்தைத் தேட வேண்டும். எனவே, பல்வலிக்கு மருந்து போடுவதால், தலையிடிகள் குறையப் போவதில்லை.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .