2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மியான்மாரில் தொடரும் அவலம்

Editorial   / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜனகன் முத்துக்குமார்

மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில், அண்மையில் ஏற்பட்ட வன்முறை, பல்லாயிரக்கணக்கான றோகிஞ்சா பொதுமக்கள், பங்களாதேஷுக்குள் அடைக்கலம் தேடுவதற்கு வழிவகுத்துள்ளது. குறித்த வன்முறையானது, கடந்த மாத இறுதிப்பகுதியில் றோகிஞ்சா போராளிகள், மியான்மாரின் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தி, அதில் 12 படையினர் கொல்லப்பட்டமையை அடுத்து ஆரம்பித்ததோடு, அதனைத் தொடர்ந்து ரோஹிங்யா போராளிகள், பாதுகாப்புப் படையினரின் தாக்குதல் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டமையை அடுத்து, மேலும் வலுப்பெற்றுள்ளது.

அரசாங்கத்துக்கும் றோகிஞ்சா மக்களுக்குமிடையிலான முரண்பாடு, அரசாங்கமானது, காலாகாலமாக றோகிஞ்சா இன முஸ்லிம் மக்கள், பங்களாதேஷில் இருந்து ராக்கைன் மாநிலத்தில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என அறிவித்தமை, அவர்களின்  குடியுரிமைகள் நிராகரிக்கப்பட்டமையைத் தொடர்ந்து ஆரம்பித்திருந்தது. 2012இல்  ராக்கைன் மாநிலத்துள் மியான்மார் அரசாங்கமானது ஊடுருவித் தாக்குதல் நடாத்தியமையைத் தொடர்ந்து, பல இனவாத வன்முறை அலைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர்கள், தற்காலிக முகாம்களில் தங்கியிருந்தனர். மேலும் மியான்மார் அரசாங்கமானது, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார உதவிகள் வழங்குதல் தொடர்பில் குறித்த மாநிலத்தை புறம்தள்ளியதிலிருந்தே, மியான்மாரின் மிகவும் பின்தங்கிய மாநிலமான ராக்கைனில் வாழும் அவர்கள், அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களைத் தொடங்கியிருந்தனர்.

Arakan Rohingya Salvation Army (ARSA) என்றழைக்கப்படும் இக்குழுவே, றோகிஞ்சா முஸ்லிம் சிறுபான்மையினரை, அரச அடக்குமுறையிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு, பாதுகாப்புப் படையினருக்கு எதிரான இத்தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது என அறியப்படுகின்றது.

குறித்த ARSA குழுவின் தலைவர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி வழங்கப்படுவதாகக் குற்றஞ்சுமத்தும் மியான்மார் அரசாங்கம், சர்வதேச நெருக்கடிக் குழுவின் (International Crisis Group) தகவல்களின் படி, குறித்த குழுவின் தலைவரான அடா உல்லா, பாகிஸ்தானில் பிறந்த றோகிஞ்சா இனத்தவர் என்றும் அவர் சவூதி அரேபியாவில் பயிற்சி பெற்றிருந்தார் எனவும் அறிவித்துள்ளது. எனினும், குழுவின் செய்தித்தொடர்பாளர், ஆசியா டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில், ஜிஹாதி குழுக்களுக்கும் தமக்கும் எவ்விதத் தொடர்பும்  இல்லை என்றும் றோகிஞ்சா உறுப்பினர்கள், 2012இல் தமது இனத்துக்கு எதிரான வன்முறைகளுக்கு பின்னரே, குறித்த பேரினவாத அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதத் தாக்குதல்கள், மற்றும் கிளர்ச்சி செய்வதற்காக இணைந்தவர்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

குறித்த ஓகஸ்ட் 25ஆம் நாள் தாக்குதலை தொடர்ந்து, பாதுகாப்புக்காக நாட்டை விட்டு வெளியேறும் றோகிஞ்சா முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. றோகிஞ்சா மக்கள் பலர், எல்லை நாடான பங்களாதேஷுக்கு அகதிகளாகச் சென்றுகொண்டுள்ளனர். பங்களாதேஷில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் தகவல்கள் அடிப்படையில்,

58,000க்கும் அதிகமானோர், இதுவரை எல்லையைக் கடந்து விட்டதாக அறியமுடிவதுடன், அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அகதிகளில் காயமடைந்தவர்கள் மற்றும் மருத்துவ உதவிகள் தேவையானவர்கள் அதிகளவில் இருப்பதாகவும், அவர்களையும் தாண்டி அதிகமான எண்ணிக்கையான அகதிகள் மியான்மார் மற்றும் பங்களாதேஷ் இடையேயான பொதுவான எல்லைப்பரப்பில் (unoccupied zone) சிக்கியுள்ளதாகவும் அறியப்படுகின்றது. சர்வதேச அறிக்கைகள் மியான்மார் அரசாங்கமானது றோகிஞ்சா மக்கள் எல்லைத் தாண்டுவதை, சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு முரணாகத் தடுக்கின்றது எனவும் உள்நாட்டில் றோகிஞ்சா மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியுள்ளது எனவும் தெரிவிக்கின்றது.

குறைந்தபட்சம், ராக்கைன் மாநிலத்தின் 10 இடங்களில் பரவலான எரியூட்டல்கள் மேற்கொள்ளப்பட்டமையை, செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் வாயிலாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டுகின்றது. எவ்வாறிருந்த போதிலும், போராளிகளின் தாக்குதல்களுக்கான எதிர்த்தாக்குதல்கள் மட்டுமே மேற்கொள்வதாக, மியான்மார் அரசாங்கம் தெரிவிக்கின்ற போதிலும், குறிப்பாக ராக்கைன் மாநிலத்தில் பௌத்த காடையர்கள் மேற்கொள்ளும் தாக்குதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பன, பாரிய அளவில் அமைந்துள்ளனவென, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. மேலதிகமாக குறித்த மாநிலத்தில் ஊடகவியலாளர்கள் தகவல் சேகரிக்கச் செல்லுதல் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளமை, உண்மையான நிலைமைகளை அறியவும் தகவல்களை உறுதிப்படுத்தவும் முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்தாண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற இதையொத்த தாக்குதல்களைத் தொடர்ந்து ராக்கைனின் பல பாகங்களில் அரச படை மற்றும் பௌத்த காடையர்களினால், பெருமளவில் வன்புணர்வு, கொலை, எரியூட்டல், சித்திரவதை என்பன மேற்கொள்ளப்பட்டிருந்தன. இவ்வாறான பாரியளவான மனித உரிமை மீறல்கள், இக்குறித்த தாக்குதலுக்குப் பின்னராக இடம்பெறக்கூடாது என்ற எதிர்பார்ப்பிலும், மக்கள் எல்லை நாடுகளுக்கு தஞ்சம் கோருவதற்கு ஏதுவாக மியான்மார் அரசாங்கம் செயற்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும், ஐக்கிய நாடுகள், “மியான்மார் அரசாங்கம், பாகுபாடில்லாமல் அனைத்து மக்களையும் அவர்கள் உரிமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என வலியுறுத்தியிருந்தது.

ஆயினும், குறித்த தாக்குதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து அவதானித்து வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு, குறித்த இனக்கலவரமானது ஒரு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய கொடூரமான நடவடிக்கை ஆகும் என அறிவித்திருக்கின்றதுடன், சர்வதேச நீதி முறைமைகளை ஏற்ற முறையான விசாரணையை ஐக்கிய நாடுகளின் தலைமைத்துவத்தின் கீழ் மியான்மார் அரசாங்கத்தின் வெளிப்படையான எதிர்ப்புக்கு அப்பால் நடத்தி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுசைன், சமீபத்திய வன்முறை தடுக்கப்படக்கூடிய ஒன்றாகவே அமைந்திருந்ததென்றும் மியான்மார் அரசாங்கம் அதனை முறையாக தடுக்கத்தவறியமை பொறுப்புக் கூறவேண்டிய ஒன்றாகும் எனவும் தெரிவித்திருந்தமை, ஐக்கிய நாடுகள், குறித்த இவ்விடயம் தொடர்பில் மிகவும் நேரடியான தலையீட்டை கொண்டுள்ளமையையும் பொறுப்புக் கூறுதல் தொடர்பில் மியான்மாருடன் கடினமாக போக்கையே பேணப்போகின்றது என்பதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .