2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முடிவெடுக்க வேண்டிய கட்டத்தில் மைத்திரி

கே. சஞ்சயன்   / 2018 ஜனவரி 19 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்தான் என்று உயர்நீதிமன்றம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இதன்படி, 2020 ஜனவரி 8ஆம் திகதியுடன் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.   

1978ஆம் ஆண்டு அரசமைப்புக்கு இணங்க, ஜனாதிபதியாகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன, 19 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம் நடைமுறையில் உள்ள தற்போதைய சூழ்நிலையில், தனது பதவிக்காலம் எதுவரை என்று உயர்நீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார்.  

19ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு அமைய, 2020 வரை மாத்திரமா அல்லது, 2021 வரை பதவியில் இருக்க முடியுமா என்பதே ஜனாதிபதியின் கேள்வியாக இருந்தது.  உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி எழுப்பிய இந்த வினா, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், மைத்திரிபால சிறிசேன எதிர்கொண்ட, கடுமையான விமர்சனங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பதவிக்குக் கொண்டு வருவதற்குக் காரணமாக இருந்த தரப்புகள் அனைத்துமே, இத்தகையதொரு வினா, உயர்நீதிமன்றத்திடம் தொடுக்கப்பட்டதை விரும்பவில்லை.  
உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோர முன்னர், அரசாங்கத்தின் பங்காளிகளிடம், ஜனாதிபதி கலந்துரையாடியிருக்க வேண்டும் என்று ஐ.தே.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறியிருந்தார்.  

அதேவேளை, மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்திருந்த சிவில் சமூக அமைப்புகளுக்கும் ஜனாதிபதியின் இந்தச் சந்தேகம், கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. 

 நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பேன் என்ற வாக்குறுதியைக் கொடுத்துப் பதவிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக்காலம் 5 ஆண்டுகளா, 6 ஆண்டுகளா என்று கேள்வி எழுப்பியதை சிவில் சமூக அமைப்புகளாலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக விவாதிக்க உயர்நீதிமன்றம் நடத்திய பகிரங்க விவாதத்தில், சட்டமா அதிபர் தவிர்ந்த மற்றைய தரப்புகள் எல்லாமே, ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் தான் என்று வாதிட்டிருந்தன. அவ்வாறு வாதிட்ட முக்கிய தரப்புகளின் பின்னால், சிவில் சமூக அமைப்புகளே இருந்தன.  

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நான்கு ஆண்டுகளாகக் குறைப்பதாக வாக்குறுதி அளித்த மைத்திரிபால சிறிசேனவுக்குத் தனது பதவிக்காலம் 5 ஆண்டுகளா, 6 ஆண்டுகளா என்று கேள்வி எழுப்பும் தார்மீக உரிமை கிடையாது என்று பசில் ராஜபக்ஷ கூறியிருந்தார்.

இவ்வாறாக, அரசாங்கத்துடன் இணைந்துள்ள, அரசாங்கத்தை எதிர்க்கின்ற எல்லாத் தரப்புகளினதும் விமர்சனங்களுக்குள் ஜனாதிபதியைச் சிக்க வைத்திருந்தது மைத்திரிபால சிறிசேனவின் இந்த முடிவாகும்.  
உயர்நீதிமன்றத்திடம் தாம் விளக்கம் கோரிய விவகாரம் இந்தளவுக்கு சர்ச்சையாக வெடிக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சற்றேனும் நினைத்திருக்கமாட்டார் என்றே தோன்றுகிறது.

சர்ச்சைகள் வெடித்ததுமே, ஜனாதிபதியின் முடிவை நியாயப்படுத்தி, அறிக்கைகள் வெளியாகின. அதுபோலவே, கடந்த வாரம் ஜனாதிபதி பங்கேற்ற கூட்டங்களிலும், தனது முடிவின் பின்னால் உள்ள நியாயத்தை எடுத்துக் கூறுவதிலேயே கவனமாக இருந்தார்.  

இப்போதும் பதவியை விட்டு விலகத் தயார் என்று கூறினார்; தனது பதவிக்காலம் தொடர்பாகப் பல்வேறு மட்டங்களிலும் குழப்பங்கள் இருப்பதாகவும், அதைத் தீர்த்துக்கொள்ளவே உயர்நீதிமன்றத்தை நாடியதாகவும் அவர் நியாயப்படுத்தினார்.  

ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளா, 6 ஆண்டுகளா என்ற குழப்பமான கருத்துகள் இருந்தமை உண்மையே. எனினும், இந்த விடயத்தை ஜனாதிபதி சிறிசேன, உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளாமலும், தனது மதிப்பைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும் தீர்த்திருக்கலாம்.  

அவர், ஐந்து ஆண்டுகள் முடியும் தருணத்தில், அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பை விடுத்திருக்க முடியும். ஆறு ஆண்டுகள் வரை பதவியில் இருக்க முடியுமா என்ற சந்தேகங்களுக்குள் செல்லாமல், தனது வாக்குறுதியைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் ஜனாதிபதி அந்த முடிவை எடுத்திருக்கலாம். 

நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடும் அதிகாரம், ஜனாதிபதிக்கு இருப்பதால், ஆறு ஆண்டுகள் பற்றிய பேச்சையே எடுத்துக் கொள்ளாமல் இந்த விவகாரத்தை முடித்திருக்கலாம். ஆனால், ஆறு ஆண்டுகள் பதவியில் இருக்க முடியுமா என்று உயர்நீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பி விட்டு, குழப்பத்தை தீர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நியாயப்படுத்தப்பட்டது அபத்தமானது.  

எவ்வாறாயினும், ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்தான் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்ட பின்னர், அடுத்த ஆண்டு, ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டியது தவிர்க்க முடியாத விடயமாக மாறியுள்ளது.  

1981ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின்படி, ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு ஒரு மாதத்துக்குக் குறையாத, இரண்டு மாதங்களுக்கு மேற்படாத காலக்கெடு ஒன்றினுள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  

அதாவது, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம், 2020 ஜனவரி 08ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில், அதற்கு ஒரு மாதம் முன்னதாக, 2019 டிசெம்பர் 08ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக, ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.  

ஆக, ஜனாதிபதியின் பதவிக்காலம் இப்போது தேய்ந்து போகத் தொடங்கியுள்ளது. அவர் பதவியில் இருந்த காலத்தில் எதிர்கொண்ட சவால்களை விட, பதவியில் இருக்கப்போகும் காலத்தில் எதிர்கொள்ளப்போகும் சவால்களே அதிகம். இந்தக் கட்டத்தில் அவர் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.  

முதலாவது, மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா? என்ற முடிவு.  
இரண்டாவது, ஏற்கெனவே கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை, எஞ்சிய பதவிக்காலத்தில் நிறைவேற்றுவது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முடிவு. இந்த இரண்டு முடிவுகளும், மிகவும் முக்கியமானவை.   

“நான் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடமாட்டேன், ஒரு பதவிக்காலம் முடிந்த பின்னர் வீட்டுக்குச் சென்று விடுவேன்” என்று மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும், ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரும் வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்.  

அந்த வாக்குறுதியை, மைத்திரிபால சிறிசேன காப்பாற்ற முனைந்தால், இலங்கை அரசியலில் மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தின் கைகள் ஓங்குவது தவிர்க்க முடியாததாகி விடும்.  

மீண்டும் ஐ.தே.கவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டாக, மைத்திரிபால சிறிசேனவை போட்டியில் நிறுத்தாவிடின், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்று விடக் கூடிய சாத்தியங்கள் உள்ளன.  

கோட்டாபாய ராஜபக்ஷவை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கும் ஆர்வம் கூட்டு எதிரணியிடம் உள்ளது. அவரை எதிர்கொள்ளக் கூடிய, ஒரே நபராக மைத்திரிபால சிறிசேனவே இருக்கிறார்.  

அதேவேளை, கடந்தமுறை தமிழ் மக்களின் வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தன. அடுத்தமுறை தமிழ் மக்களின் ஏகோபித்த வாக்குகளை மைத்திரிபால சிறிசேனவினால் எதிர்பார்க்க முடியாது.  

கோட்டாபய ராஜபக்ஷவுடன் இரண்டாவது பதவிக்காலத்துக்காக களமிறங்கித் தோல்வி கண்டால், அது தனது புகழுக்குப் பாதிப்பாக அமையும் என்ற கவலை மைத்திரிபால சிறிசேனவுக்கு ஏற்படலாம்.அவ்வாறான நிலையில் கட்சியைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ கவலைப்படாமல் அரசியலில் இருந்து ஒதுங்கிச் செல்ல முடிவெடுக்கலாம்.  

ஜனாதிபதியின் முடிவு எத்தகையதாக இருந்தாலும், அவர் தனது பதவிக்காலத்தின் எஞ்சிய காலத்தை, எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதே முக்கியமானது.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதற்கு அதிகபட்ச முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது. 

ஊழல், மோசடிகளைத் தடுத்தல், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துதல், அரசமைப்புச் சீர்திருத்தம், இனப்பிரச்சினைத் தீர்வு, தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுதல் என்று ஏராளமான கடப்பாடுகள் ஜனாதிபதிக்கு இருக்கின்றன.   

இவற்றைப் பொறுப்புடன் நிறைவேற்றினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்களின் ஆதரவு அதிகரிப்பதுடன், இன்னொரு பதவிக்காலத்துக்கு அவர் போட்டியிட வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் உருவாகும்.  

அவர் போட்டியிடாது போனாலும், அவரைப் போன்ற ஒரு தலைவரே கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கமும் ஏற்படும். 

மாறாக, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது பற்றிய கரிசனைகளின்றி எஞ்சிய காலத்தை கழித்து விட்டுப் போக ஜனாதிபதி முற்படுவாரேயானால், அவரும், முன்னைய ஜனாதிபதிகளைப் போலவே வரலாற்றில் இடம்பிடிப்பார்.   

தனக்கெனத் தனியானதொரு பக்கத்தை உருவாக்கப் போகிறாரா அல்லது முன்னையவர்களின் பட்டியலில் இடம்பிடிக்கப் போகிறாரா என்பதை தீர்மானிக்க வேண்டிய கட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இப்போது இருக்கிறார்.   

அவர், இப்போது எடுக்கப்போகும் முடிவுதான், வரலாறு அவரை எங்கே வைக்கப் போகிறது என்பதைத் தீர்மானிப்பதாக இருக்கும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .