2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

முஸ்லிம்கள் மீதான பல்கோண ‘நெருக்குதல்கள்’

மொஹமட் பாதுஷா   / 2019 ஜூன் 02 , பி.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பிறகு, முஸ்லிம்கள் மீதான நெருக்குவாரங்கள், பல வழிகளிலும் அதிகரித்திருக்கின்றன. முஸ்லிம் பெயர்தாங்கிகள்தான், இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர் என்றாலும்கூட, நிஜத்தில், இத்தாக்குதல் முஸ்லிம் சமூகத்துக்கே பெரும் சிக்கல்கள் நிறைந்த நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது. இலங்கை முஸ்லிம்கள் மீது, இன்னுமொரு கட்ட ஒடுக்குமுறையைப் பிரயோகிப்பதற்கும், அதற்கு நியாயம் கற்பிப்பதற்குமான ஒரு களச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. 

ஒரு குழுவினர் செய்த, வரலாற்றுத் தவறான பயங்கரவாத நடவடிக்கையைக் காரணமாகக் கூறி, 21 இலட்சம் முஸ்லிம்கள் மீது, ஒருவித உளவியல் யுத்தமும் பௌதீக ரீதியிலான நெருக்குதல்களும் பிரயோகிக்கப்படுவதாகவே, இலங்கை முஸ்லிம்கள் உணரத் தலைப்பட்டுள்ளனர்.

1983இன் பின்னர், தமிழர்களுக்கு நடந்தது போல, ஏப்ரல் 21ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட, காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைத் தொடர்ந்து, எல்லா விதத்திலும் முஸ்லிம்களை இறுக்குவதற்கான கைங்கரியங்கள் முன்னெடுக்கப்படுவது, ‘சோற்றுக்குள் முழுப் பூசணிக்காய் போல்’ நன்றாகவே துருத்திக் கொண்டு வெளியில் தெரிவதைக் காண முடிகின்றது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் உயிரிழந்தது சகோதர மக்கள் என்றாலும்கூட, மனதளவில் மரித்து, கிட்டத்தட்ட நடைப் பிணங்களாகியது முஸ்லிம்கள் என்று சொன்னால், அது மிகையில்லை. 

‘சாந்தியையும் சமாதானத்தையும் போதிக்கின்ற இஸ்லாமிய மார்க்கத்தின் பெயரைச் சொல்லி, அப்பாவி உயிர்கள் பலியெடுக்கப்பட்டுள்ளனவே’ என்ற மனவருத்தமும், முஸ்லிம்கள் மீது ஏனைய இனங்களுக்கு 1,000  வருடங்களுக்கும் மேலாக இருந்த நம்பிக்கை, இந்தப் பயங்கரவாதிகளால் சுக்குநூறாகியுள்ளதே என்ற கவலையும், கடந்த ஒரு மாதகாலமாக, இலங்கை முஸ்லிம்களைக் கொல்லாமற் கொன்று கொண்டிருக்கின்றன. 

முஸ்லிம்களுக்குள் பயங்கரவாதிகள் இருக்கின்றார்கள் என்று, இனவாத சக்திகள் கடந்த பல வருடங்களாகக் கூறிவந்த கதைகள், இன்று உண்மையாகி விட்டதான தோற்றப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசாங்கமும் பொறுப்பு வாய்ந்தவர்களும், முஸ்லிம்கள் எல்லோருமே பயங்கரவாதிகள் அல்லர் என்றும் அவர்களைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டாம் என்றும் அப்படிச் செய்வது, அவர்களை எதிர்மறையான நிலைப்பாடுகளை எடுக்கத் தூண்டும் என்று கூறி வந்தாலும், யதார்த்தத்தில் முஸ்லிம்களின் அனுபவம், அவர்களின் கூற்றுக்கு மாற்றானதாகவே இருக்கக் காண்கின்றோம். 

முதலாவதாக, முஸ்லிம்கள், இப்போது உளவியல் ரீதியாக, நலிவுறச் செய்யப்பட்டிருக்கின்றனர். 
அடுத்ததாக, அவசரகாலச் சட்ட ஒழுங்கு விதிகள், ஏனைய சட்ட நடைமுறைகள், முஸ்லிம்கள் மீது, பரவலாக முழு வீச்சோடு பிரயோகிக்கப்படுகின்றன. அத்துடன், ஈவிரக்கமற்ற தாக்குதலை மேற்கொண்டவர்கள், முஸ்லிம்களுக்குள் ஒழிந்து கொண்டிருந்தார்கள் என்ற அடிப்படையில், முஸ்லிம் சமூகத்தின் மீதான அனுதாபப் பார்வை, சற்றேனும் குறைவடைந்துதான் இருக்கின்றது. கிட்டத்தட்ட எல்லா விதத்திலும், முஸ்லிம் சமூகம், மாற்றாந்தாய் மனப்பாங்கோடும் பாரபட்சமாகவும் கையாளப்படுகின்ற நிலைமைகளும் அதிகரித்திருக்கின்றன. 

ஆக மொத்தத்தில், தமிழர்களைப் போலவே, முஸ்லிம்கள் மீதும் ஓர் இனச் சம்ஹாரத்தை மேற்கொண்டு, அடக்கி ஒடுக்கி வைப்பதற்கான முன்னெடுப்புகள் எல்லாம், பரவலாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தூபமிடும் வங்குரோத்து அரசியல் செயற்பாடுகளும் கனகச்சிதமாக நடந்தேறுகின்றன. 

உயிர்த்த ஞாயிறு தினத்திலும் அதன் பின்னரும் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள், எந்த அடிப்படையிலும் நியாயப்படுத்த முடியாதவை. ஆனால், அதற்குப் பிறகு முஸ்லிம்கள் மீது, பல கோணங்களிலும் இருந்து தொடுக்கப்படுகின்ற நெருக்குதல்கள், நியாயமானவைதானா என்பதை, அரசாங்கமும் பொறுப்புவாய்ந்தவர்களும் சிந்திக்க வேண்டியது தார்மீகப் பொறுப்பாகும். 

குறிப்பாக, புர்கா, நிகாப் தடை குறித்து, விலாவாரியாக அரசாங்கம் தெளிவுபடுத்தி, வர்த்தமானியை வெளியிட்டிருக்கின்றது. அதன்படி முகத்தை மூடாமல், ஹபாயாவுடன் ஹிஜாப் அல்லது ஸ்காப், பர்தா அணிவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், நிஜத்தில் என்ன நடக்கின்றது?

பரவலாகப் பொது இடங்களில், ஹிஜாப் அணிந்து சென்ற முஸ்லிம் பெண்கள், சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படுவதுடன் பாடசாலைகளில், அரச அலுவலகங்களில் தலையை மட்டும் மூடும் ஆடைகளை அணிந்து வந்த முஸ்லிம் பெண்கள், அவற்றை அகற்றுமாறு அல்லது அங்கிருந்து வெளியேறுமாறு கோரப்பட்ட சம்பவங்கள், நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்றுள்ளன. ஹிஜாப் அணிந்த பெண்களுக்கு, அரச கட்டுப்பாட்டின் கீழேயிருக்கின்ற இடங்களில் கூட, இவ்வுரிமை மறுக்கப்பட்டுள்ளது. 

முகத்தை மூடுவது, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதன்படி, புதிய சட்ட விதிமுறையை மீறி புர்கா, நிகாப் அணிந்து கொண்டோ, அன்றேல் துணிகளைக் கொண்டு முகத்தை மூடிக் கொண்டோ, யாராவது முஸ்லிம் பெண்கள் வீதிக்கு வருவார்களாயின், அவர்களைக் கைது செய்வதும் சட்டத்தின் முன் நிறுத்துவதும் அவசியம்தான். ஆனால், அரசாங்கம் அங்கிகரித்த பிற ஆடைகளை அணிவதற்கு, முஸ்லிம் பெண்களுக்கு உரிமை மறுக்கப்படுவது, ஏற்றுக் கொள்ள முடியாததாகும். 

உலகின் பல பாகங்களிலும், ஏன் இலங்கையிலும் கூட, இதற்கு முன்னர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் மற்றும் நாசகார வேலைகளில் ஈடுபட்டவர்கள், என்னென்ன ஆடைகளை அணிந்திருந்தார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதற்காக அந்த வகையான ஆடைகளை அணிவதை இலங்கையர் யாருமே அச்சுறுத்தலாகக் கருதியது கிடையாது. ஆயினும் முஸ்லிம் பெண்கள் முகத்தைத் திறந்து, தலையை மறைப்பது கூட, ஆபத்தானதாக நோக்கப்படுவது, பெரும்பாலும் இனத்துவேசம் சார்ந்தது என்றே கருத முடிகின்றது. 

இதேவேளை, ஏப்ரல் 21, 26 தாக்குதல்களை அடுத்து, பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு பொலிஸாரும் முப்படையினரும் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியவை. இந்த நடவடிக்கைகளின் போது, பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட பலர், கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் மீது முறையான விசாரணை நடத்தி, தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே, முஸ்லிம் சமூகமும் இருக்கின்றது. 

இருப்பினும், இந்தத் தேடுதல்கள், சுற்றிவளைப்பின் போது, பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புபடாதவர்கள், அப்பாவிகளும் ஆங்காங்கே கைது செய்யப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது. 
இலங்கையில் தற்கொலைத் தாக்குதலை நடத்தியவர்கள், நன்கு படித்த, வசதியான, ‘யோக்கியன்’ போன்ற தோற்றமுள்ளவர்களாக இருந்தமையால், பாதுகாப்புத்  தரப்புக்கு யாரையும் நம்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றமை உண்மையே. 

நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தலும், யாரையும் நம்ப முடியாத நிலையும் ஏற்பட்ட பிறகு, யார் மீதும் சந்தேகம் ஏற்படலாம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆயினும், சந்தேக நபர்கள் எல்லோரையும் குற்றவாளிகள் போலவும்  தீவிரவாதிகள் போலவும் ஒருசில ஊடகங்களில் காட்டப்படுவதை நிறுத்த வேண்டும். சந்தேகத்தில் கைது செய்யப்படுபவர்கள், குறிப்பிட்ட மணித்தியாலங்களுக்குள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்; அன்றேல் விசாரணையின் பின் விடுவிக்கப்பட வேண்டும். 

அந்த அடிப்படையில், வெறும் சந்தேகத்தின் பெயரில் மட்டுமே, அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அடிப்படையற்ற காரணங்களுக்காக முஸ்லிம்கள் பலர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பேச்சடிபடுகின்றது. 

குறிப்பாக, கப்பலின் திசைதிருப்பும் கருவியான ‘சுக்கான்’ படம் பொறித்த ஆடை அணிந்திருந்த அப்பாவி முஸ்லிம் பெண்ணொருவர், தர்மச் சக்கரத்தை அணிந்து பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக, இன்னும் விளக்கமறியலில் இருக்கின்றமை போன்ற பல கைதுகள், முஸ்லிம்கள் மத்தியில் ஒருவித மனக்கிலேசத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. 

முஸ்லிம்களின் பள்ளிவாசல்களைப் புனிதம் கெடச் செய்தவர்கள், குர்ஆன் பிரதிகளை எரித்துப் பள்ளியைச் சேதப்படுத்தியவர்கள் விடயத்தில் இந்தளவுக்குச் சட்டம் கடுமையாகப் பிரயோகிக்கப்படவில்லை. 

இப்படியிருக்க, அண்மையில் வடமேல் மாகாணத்தில், பெரும் இனக்கலவரத்தை ஏற்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தில் கைதான குண்டர்கள் பலர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நாட்டில்தான், மேற்படி பெண் தொடர்ந்தும், விளக்கமறியலில் இருக்கின்றார் என்பதை, உரிமைச் செயற்பாட்டாளர்களால் ஜீரணிக்க முடியவில்லை. 

இது இவ்வாறிருக்க, ஏ‌ற்கெனவே அளுத்கம, திகண, அம்பாறை ஆகிய இடங்களில், இனக்கலவரங்களை மேற்கொண்ட காயங்கள் ஆறுவதற்கு இடையில், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலையடுத்து, முஸ்லிம்கள் அச்சமடைந்திருந்த ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, வடமேல் மாகாணத்தில் இனவாதக் கும்பல்கள், முஸ்லிம்கள் மீது காட்டுமிராண்டித் தனத்தை கட்டவிழ்த்து விட்டன. முஸ்லிம்களின் மத அடையாளங்கள், சொத்துகள் எரித்து நாசமாக்கப்பட்டன. 

கடும்போக்கு சக்திகள், முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்து வந்தன. இந்நிலையில், 83 ஜூலைக் கலரவத்தில் தமிழர்களின் பொருளாதாரத்தை அழித்தது போல, திகணப் பாணியில், வடமேல் மாகாணத்திலும் முஸ்லிம்கள் மீதான பொருளாதார ரீதியான ஒடுக்குமுறை என்றே சொல்ல வேண்டும்.

இதில் இன்னுமொருபடி மேலே போய், குருணாகலில் முஸ்லிம் வைத்தியர் ஒருவர் கைதாகியுள்ளார். ஆரம்பத்தில் முறையற்ற விதத்தில் பணம் உழைத்தார் என்ற குற்றச்சாட்டில் கைதாகிய அவர் மீது, பல்லாயிரம் சிங்களப் பெண்களுக்கு கருத்தடை செய்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவரைக் கைது செய்து வைத்துக் கொண்டு, அவர் மீது ஏதேனும் முறைப்பாடு இருந்தால் முறையிடுங்கள் என்று பொலிஸார் கேட்க, பல முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. 

மகப்பேற்று வைத்தியரல்லாத, எம்.பி.பி.எஸ் வைத்தியரால், எல்லோருடைய கண்களையும் கட்டிவிட்டு, இத்தனை ஆயிரம் பெண்களுக்குக் கருத்தடை செய்வதற்கான சாத்தியம் இருக்கின்றதா என்பது உள்ளிட்ட பல கேள்விகள் உள்ளன. அவர் மீதான குற்றச்சாட்டு, நிரூபிக்கப்படவில்லையாயினும் இவ்விவகாரமும் கூட, அவரது இனத்துவ அடையாளத்துக்கு எதிரான துவேசமாகவே கருதப்படும். 

இதேபோன்றுதான், முஸ்லிம்களுக்காகப் பேசுகின்ற, முஸ்லிம் அரசியலில் சற்றுப் பிரகாசிக்கின்ற அரசியல்வாதிகளை, மட்டம் தட்டுகின்ற, அவர்களை அடக்கிவைக்கின்ற நோக்கிலான நெருக்குதல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. 

ரிஷாட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையும் ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி, முஜிபுர் ரஹ்மான் போன்றோருக்கு எதிரான விமர்சனங்களையும் அவர்களை விசாரிக்க வேண்டும், பதவி விலக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன்வைப்பது ஜனநாயக விரோதமானது அல்ல என்பதுடன், தேவையேற்படின் அவை குறித்து விசாரித்துத் தெளிவு பெறப்படவும் வேண்டும். 

ஆனால், இந்த நகர்வுகள் பெரும்பாலும், எதிர்கால அரசியல் இலாபம் கருதியவையாகவும், முஸ்லிம் அரசியல் மீதான பொறாமையை உமிழும் முயற்சிகளாகவும் நோக்கப்படுகின்றது. இந்தப் பின்னணியில், முஸ்லிம்களின் ஒன்றுதிரண்ட பலமும் அரசியல் சார்ந்த குரலும் இன்று ஒடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எனப்படுவோர், இன்று ஓர் அப்பாவிக்காகக் கூடப் பரிந்து பேசத் தயங்குகின்ற, முஸ்லிம்கள் மீதான உரிமை மீறல்கள், அத்துமீறல்களுக்கு எதிராகக் குரல்கொடுக்க முன்வராமல் ஓடிஒழிகின்ற ஒரு நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுதான், மிக நுட்பமாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள காய்நகர்த்தல் எனலாம். 

இவ்வாறு இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக, நிகழ்காலத்தில பல கோணங்களில் இருந்தும் நகர்த்தப்படுகின்ற மதம், இனத்துவம், பொருளாதாரம், பாதுகாப்பு,  அரசியல் அடிப்படைகளிலான நெருக்குதல்கள், கெடுபிடிகள், இனவாத அத்துமீறல்களை முடிவுக்குக் கொண்டு வராமல், இலங்கையில் இனநல்லிணக்கம் பற்றிக் கனவு மட்டும்தான் காண முடியும். 

ரிஷாட்டுக்கு எதிரான அவநம்பிக்கைப் பிரேரணை

விதிப்படியும் சதிப்படியும், முஸ்லிம்களுக்கு சாதகமில்லாத நெருக்கடிச் சூழல் இலங்கையில் தோற்றுவிக்கப்படிருக்கின்ற காலகட்டத்தில், ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. 

ஒன்றிணைந்த எதிரணியால் கொண்டு வரப்பட்ட, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஆராய, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பாகச் சபையில் விவாதிக்க இரு நாள்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

மஹிந்த ராஜபக்‌ஷவின் கடந்த ஆட்சிக் காலத்தில், அவரது செல்லப் பிள்ளையாக இருந்த பல முஸ்லிம் அரசியல்வாதிகளுள் ரிஷாட் பதியுதீனும் ஒருவர். மஹிந்தவுடனும் பஷில் ராஜபக்‌ஷ போன்றோருடனும் மிக நெருக்கமாக இருந்து, ரவூப் ஹக்கீம், அதாவுல்லா போன்றோருடன் சேர்ந்து அவ்வாட்சிக்கு முட்டுக் கொடுத்தவர் ரிஷாட். 

இருப்பினும், 2015 தேர்தலில் முஸ்லிம் மக்கள் மஹிந்தவின் பக்கம் இல்லை என்பதை முன்னுணர்ந்து கொண்டு, மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் வந்த முதலாவது முஸ்லிம் கட்சித் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆவார். அண்மையில், மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், ஆட்சியை மாற்றியமைக்க ஆதரவளிக்குமாறு ஒன்றிணைந்த எதிரணி, ரிஷாட்டிடம் கோரியது. மக்கள் காங்கிரஸ் தம்பக்கம் வரும் என்று, மஹிந்த தரப்பு நம்பியதால், ரிஷாட்டின் கட்சியில் இருந்து ஓடோடிச் சென்ற எம்.பி ஒருவரையும் திருப்பி அனுப்பியது. ஆனால் கடைசி வரையும், ரிஷாட் ஒன்றிணைந்த எதிரணிக்கு ஆதரவளிக்கவே இல்லை. 

இந்தப் பின்புலத்திலேயே, இப்போது அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்தரப்பு கொண்டு வந்திருக்கின்றது. அதாவது, 2015ஆம் ஆண்டில் இருந்து, ஆட்சியையும் கைப்பற்றாமல், அவர்களை ஆளவும் விடாமல் அரசியலைப் போட்டு குழப்படியடித்துக் கொண்டிருக்கும் ஒன்றிணைந்த எதிரணியே, தேர்தல் ஒன்றை எதிர்பார்த்துள்ள காலப் பகுதியில், ஆட்சியைத் தீர்மானிக்கும் மக்கள் பிரிவான முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சித் தலைவருக்கு எதிராக, இப்படியான ஒரு நகர்வைச் செய்திருக்கின்றது. 

நம்பிக்கையில்லாப் பிரேரணையின் ஊடாக, தன்மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அமைச்சர் ரிஷாட் மறுத்துரைத்துள்ளதுடன், தனக்கும் பயங்கரவாதத்துக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என்று திரும்பத்திரும்பக் கூறி வருகின்றார். 

உண்மையில் அவருக்கு, பயங்கரவாதத்துடன் தொடர்பிருந்தால், பாதுகாப்புத் தரப்பிடம் முறைப்பாடு செய்து, அவரைச் சிறையில் அடைத்திருக்க முடியும். ஆனால், அதற்கு ஆதாரங்கள் தேவை. ஆயினும், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நீதிமன்றத்தின் அளவுக்கு, சட்ட ஆதாரங்கள் தேவையில்லை என்பதாலேயே, இத்தெரிவை ஒன்றிணைந்த எதிரணி மேற்கொண்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எது எவ்வாறாயினும், பயங்கரவாதியுடன் அவருக்குத் தொடர்பிருந்தால், அது சட்டப்படி நிரூபிக்கப்பட வேண்டும். அதைவிடுத்து, போலிக் குற்றச்சாட்டுகளை முடிச்சுப்போட்டு, முஸ்லிம் அரசியல்வாதிகளையும் அதனூடாக முஸ்லிம்களின் அரசியலையும் பலவீனப்படுத்தி, தம்வசப்படுத்தும் ‘பம்மாத்து’ முயற்சிகளாக, அவை இருக்கக் கூடாது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .