2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு

மொஹமட் பாதுஷா   / 2018 ஜூன் 03 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்கள், நீண்டகால இனமுரண்பாடுகள் மற்றும் அண்மைக் காலத்தில் மேலெழுந்து வருகின்ற இனத்துவ, மதவாத ஒடுக்குமுறைகளுக்கு நிரந்தரமானதும், எல்லாத் தரப்பாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான ஒரு தீர்வை எதிர்பார்த்து நிற்கின்றனர்.   

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, பரஸ்பரம் இனங்களுக்கு இடையிலான உண்மைக்குண்மையான புரிதல் என்பது, சிதைவடைந்து விட்ட ஒரு சூழ்நிலையில், நல்லிணக்கம் மற்றும் பகைமறத்தலின் ஊடாக, அதைக் கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் காண்கின்றோம்.   

இப்படியிருக்க, திடுதிடுப்பென நாட்டின் பேரினவாத சிற்றினவாத சக்திகள், மற்றைய இனங்களை வம்புக்கிழுக்கின்ற பிற்போக்குத்தனமான நிகழ்வுகள், அண்மைக்காலமாக இடம்பெற்றுக் கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது.   

இனவாத நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைக்கால மதவாத பிரசாரங்கள், தமிழ் - முஸ்லிம் இனஉறவை கூரிய நகங்களால் கீறத் தொடங்கியுள்ளன.   

மேற்கத்தேயமும் அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும், உலகளவில் முஸ்லிம்களுக்கு எதிரானதொரு நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்க, ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான கடல்சார் அதிகாரப் போட்டி வெளிப்படையாகவே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.   

ஆனால், இவற்றையெல்லாம் கடந்தும் யுத்தத்துக்குப் பின்னர், இனங்களுக்கு இடையிலான நல்லுறவு கொஞ்சம் முன்னேற்றம் கண்டுள்ளதைக் காண முடிகின்றது.   

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து, நெடுங்காலமாகப் பேசி வரும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், பெருந்தேசியத்தின் ஒப்புதல் இருந்தால் மாத்திரம், இனப்பிரச்சினைத் தீர்வைப் பெற்றுவிட முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள்.   

அரசாங்கத்தை வழிக்கு கொண்டு வந்தாலோ அல்லது வெளிநாடுகளின் ஆசீர்வாதத்துடனோ வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாது போயுள்ளதையும், முஸ்லிம்களின் சம்மதம் இல்லாமல் நிரந்தரமான தீர்வுப்பொதியை பெறுவது உசிதமில்லை என்பதையும் அவர்கள் விளங்கிக் கொண்டுள்ளார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகள், அண்மைக்காலமாக வெளியிடும் கருத்துகள் இவற்றைப் புலப்படுத்தி நிற்கின்றன.   

வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது, இனப் பிரச்சினைத் தீர்வின் முக்கிய கூறாக இருக்கின்றது. இவ்விணைப்பைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த இந்தியாவின் இராஜதந்திரி ஒருவர், முன்னொரு தடவை “இனி இந்தியா, வடக்கு-கிழக்கு இணைப்பை வலியுறுத்தாது” என்று சொல்லிச் சென்றிருந்தார்.   

இந்நிலையில், முஸ்லிம்களின் சம்மதமின்றி வடக்கு- கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்றும் முஸ்லிம்கள் இதற்குச் சாதகமான சமிக்ஞையைக் காட்ட வேண்டும் என்றும் தமிழ்த் தரப்பிலிருந்து கருத்துகள் முன்வைக்கப்படுவதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.   

அதாவது, இரு மாகாணங்களின் இணைப்பு என்பது, வெறுமனே நிலங்களைப் பௌதீக ரீதியாக இணைப்பது மட்டுமல்ல; மாறாக, வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற இரு சிறுபான்மை இனங்களும் இணங்கிப் போவதாகும் என்ற நிலை உருவாகியிருக்கின்றது.   

முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில், இவ்விரு மாகாணங்களையும் இணைப்பதற்கான எந்த முகாந்திரங்களும் இல்லை. இணைந்த வடகிழக்கு மாகாணத்தில், இணைந்திருந்த போது, வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதுடன், கிழக்கில் பரவலாகப் படுகொலைகளும் நிகழ்த்தப்பட்டன. ஆயுதங்கள் அராஜகம் புரிந்த அந்த ஆட்சியையும் காலத்தையும் முஸ்லிம்கள் ஒருபோதும் மறந்து விட மாட்டார்கள்.  

 அத்துடன், தனியான கிழக்கு மாகாணம் என்பது, ஒப்பீட்டளவில் தமக்குச் சாதகமானதும் பாதுகாப்பானதும் என்பதை, அனுபவ ரீதியாக முஸ்லிம்கள் இன்று கண்டுகொண்டிருக்கின்றனர்.   

எனவே, வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு, வடக்கு முஸ்லிம்களோ கிழக்கு முஸ்லிம்களோ ஒருபோதும் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள். வடக்கும் கிழக்கும் இணைவதால் தமக்குப் பெரிய இலாபங்கள் இல்லை என்பதையும், அது ‘யாருக்கு’ இலாபமளிக்கும் என்பதையும் இலங்கை முஸ்லிம்கள் அறியாதவர்கள் என்று யாரும் நினைத்து விடக்கூடாது.   

எது எவ்வாறாயினும், தமிழர்களுக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் முஸ்லிம்கள் உறுதியான எண்ணம் கொண்டுள்ளனர். விடுதலைப் போராட்டத்துக்குப் பல வழிகளிலும் பங்களிப்புச் செய்தவர்கள் என்ற அடிப்படையில், விடுதலை உணர்வையும் தீர்வுக்கான வேட்கையையும் முஸ்லிம்கள் உயர்வாக மதிக்கின்றனர் - மதிக்கவும் வேண்டும்.   

வடக்கு, கிழக்கு இணைக்கப்படுகின்றதோ இல்லையோ, கடந்த சில மாதங்கள் வரைக்கும் தமிழ் - முஸ்லிம் உறவில் நல்லதோர் ஏறுமுகம் இருந்ததை உன்னிப்பாக நோக்குவோரால் அறிந்து கொள்ள முடிந்தது.   

ஆனால், கடந்த சில மாதங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற முன்னெடுப்புகளும் அதற்காக வெளிப்படுத்தப்படுகின்ற பின்னூட்டங்களும் அவ்வளவு நல்ல சகுனங்களாகத் தெரியவில்லை.   

சாதாரண தமிழ் - முஸ்லிம் மக்களும் புத்திஜீவிகளும் அரசியல்வாதிகளும் கூட, இன நல்லுறவு சிதைந்து விடாமல் ஓரளவுக்கு கவனமாகச் செயற்படுகின்ற வேளையில், சில காளான் இயக்கங்களும் புதிதாக சமூக அக்கறைக்கு ஆட்பட்டவர்களும் மேற்கொள்கின்ற இனவெறுப்புப் பிரசாரங்கள், முகம் சுழிக்கச் செய்வதாக அமைந்துள்ளன.   

மிக முக்கியமாக, இது உள்ளார்ந்த ஒரு நிகழ்ச்சி நிரல் இல்லை என்பதையும், பிராந்தியத்தில் உள்ள இரண்டு இனவாத அமைப்புகளின் தாளத்துக்கு உள்ளூரில் இயங்கும் சில அமைப்புகள் ஆடத் தொடங்கியுள்ளன என்பதையும், முஸ்லிம்கள் மட்டுமன்றி, தமிழ் முற்போக்குச் சிந்தனையாளர்களும் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.   

கடந்த சில நாட்களுக்கு முன்னர், திருகோணமலையில் ‘அபாயா’ ஆடை விவகாரம் ஒரு சர்வதேசப் பிரச்சினை போல பூதாகாரமாக்கப்பட்டது. தனிமனித, மத, கலாசார சுதந்திரம் கடுமையாகக் கேள்விக்குட்படுத்தப்பட்டது.   

முஸ்லிம்களின் அடிப்படை ஆடைக்கலாசாரத்தை, துகிலுரியும் துச்சாதனன் வேலையாகவே இதனை முஸ்லிம்கள் கருதுகின்றனர். எனவே, சாதாரண தமிழ் மக்கள் இதனை  செய்திருக்க வாய்ப்பேயில்லை. மறுபுறத்தில், இதற்கான எதிர்வினைகளும் மிக மோசமாக அமைந்ததை மறுக்க முடியாது.   

இப்போது, இறைச்சி விவகாரம் தூக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிவசேனை அமைப்பின் பெயரால், மறவன்புலவு சச்சிதானந்தம் என்பரால் வெளியிடப்பட்ட கருத்துகள், முஸ்லிம்களின் மனதை மிக மோசமாகப் பாதித்துள்ளதைக் குறிப்பிட்டாக வேண்டும்.  

 மாடுகள் அறுப்பதற்கும், ‘பசு-வதை’ என்பதற்கும் இடையில் சிறியதொரு பிரிகோடு இருக்கின்றது. இலங்கையில் மாடுகள் அறுப்பது முஸ்லிம்கள் என்றாலும், அதை முஸ்லிம்கள் மட்டுமே உண்பதில்லை. அத்துடன் 75 சதவீதத்துக்கும் அதிகமான மாடுகள் வளர்ப்பும் வியாபாரமும், சிங்கள, தமிழ் மக்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன.   

முஸ்லிம்கள், மாட்டிறைச்சி உண்ணாமல் விடுவது பிரச்சினையில்லை. ஆனால், அதை வேறு யாரும் சொல்லிச் செய்ய முடியாது. சைவர்களின் சாப்பாட்டுப் பீங்கானுக்குள், எவ்வாறு முஸ்லிம் ஒருவரால், ஒரு மாட்டிறைச்சித் துண்டை பலாத்காரமாகத் திணிக்க முடியாதோ, அதுபோலவே, முஸ்லிம் ஒருவர் சாப்பிட முனையும் இறைச்சித் துண்டை, வேறு இனத்தைச் சேர்ந்த ஒருவராலும் தட்டிவிட முடியாது.   

இதையெல்லாம் சகோதரத் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால், அவர்களுக்குள் இதற்கு மாற்றமான கருத்து நிலையை ‘யாரோ’ திணிக்க முனைகின்றனர் என்பது தெளிவாகவே தெரிகின்றது.   

குறிப்பாக, தமிழர்களையும் முஸ்லிம்களையும் மோதவிட்டு, எரிகின்ற நெருப்பில் யாரோ குளிர்காய நினைக்கின்றார்கள். இன்னும் வெளிப்படையாகச் சொன்னால், முஸ்லிம்களை ஒடுக்குகின்ற முயற்சியில் பிராந்தியத்தில் ஒன்று சேர்ந்துள்ள பௌத்த, இந்துத்துவ அமைப்புகளின் முகவர்கள், அதே இலக்குடன் இலங்கையில் கூட்டுச் சேர்ந்துள்ளதாக, முஸ்லிம்களிடையே பரவலாகப் பேசப்படுகின்றது.   

மாடுகள், தமிழர்களால் மதிக்கப்படும் உயிரினம் என்பது மறுப்பதற்கில்லை. மிருக வதைக்கு எதிராகக் குரல்கொடுப்பதும் வரவேற்கத்தக்கதே. ஆனால், மாடுகள் மட்டும் உயிரினம் இல்லை. மாறாக, மீன்கள், இறால், கோழி தொடக்கம் மரக்கறிகள் வரை எல்லாமே உயிரினம்தான் என்பது கவனிப்புக்குரியது. அத்துடன், முஸ்லிம்கள் இறைச்சிக்கடை திறப்பதும் மாட்டிறைச்சி உண்பதும் இன்று நேற்று ஆரம்பமானதும் அல்ல.   

எனவே, இன, மத ரீதியான இலாபங்களை அடிப்படையாகக் கொண்டதாகவோ, வெளிநாட்டு சக்திகளின் நிகழ்ச்சி நிரலைக் கொண்டதாக இந்த ஆர்ப்பாட்டங்கள் இருக்க வாய்ப்புள்ளது.   

சிலவேளை, முன்பொரு காலத்தில் பெருந்தேசியச் சக்திகளோடு கூட்டுச் சேர்ந்து வேலை செய்து, அதன்மூலம் தமிழ் மக்களுக்கு ஏதாவது அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று எண்ணி ஏமாந்தது போல, இப்போது யாராவது  பகற்கனவு காண்கின்றார்களா என்ற சந்தேகமும் ஒரு சிலருக்கு ஏற்பட்டுள்ளது.   
இதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விடயம், மாட்டிறைச்சிக்கான போராட்டம் என்பதை விட, அதை முன்னெடுத்த விதமும் அதற்காகப் பாவிக்கப்பட்ட வாசகங்களும் என்பதை அடிக்கோடிட்ட வார்த்தைகளால் குறிப்பிட வேண்டும்.   

அதாவது, ‘பௌத்தர்களும் சைவர்களும் வாழும் நாட்டில் மாட்டிறைச்சிக்கடை எதற்கு?’ என்று அந்த வாசகம் கேள்வி எழுப்பியிருந்தது.  இது தமிழர்களினதோ அல்லது சைவர்களினதோ மனங்களில் இருந்து வந்த வார்த்தைகளல்ல என்பதை முஸ்லிம்கள் அறிவார்கள்.   

ஏனெனில், இந்த நாட்டில் பௌத்தர்களையும் சைவர்களையும் அன்றி வேறு எந்த மதத்தவர்களும் வாழவில்லை என்ற அர்த்தத்தை தருவதாக இந்த வாக்கியம் அமைந்துள்ளது.   

அதாவது, இந்த நாட்டில் வாழ்கின்ற ஏனைய இனங்களின் வரலாற்றையும் இருப்பையும் அடையாளம் இழக்கச் செய்கின்ற, மிக மோசமான பிற்போக்குத்தனமாகவே இது தெரிகின்றது. இதைத் தமிழ் முற்போக்குச் சிந்தனையாளர்களே கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.   

சரி, பௌத்தர்களும் சைவர்களும் வாழ்கின்றார்கள் என்றால், ஏன் இவ்விரு தரப்பினர்களும் முரண்பட்டுக் கொண்டார்கள்? ஜூலைக் கலவரமும் ஏனைய கலவரங்களும், தமிழர்களுக்கு எதிராக ஏன் கட்டவிழ்த்து விடப்பட்டன?  

 சிங்களப் பொதுமக்கள் ஏன் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார்கள்? இவ்வாறு பல கேள்விகள் எழுகின்றன. 

அத்துடன், வடக்கில் விகாரை அமைப்பதற்கு சைவர்களோ, இந்துக்களோ ஏன் எதிர்க்க வேண்டும் என்ற கேள்விக்கும் விடை காண வேண்டியிருக்கின்றது.   

எனவே, யதார்த்தங்களுக்கு அப்பால் நின்று பேசுகின்ற இந்தத் தரப்பினர், தமக்கு விரும்பிய எதையோ சாதித்துக் கொள்ளத் துடிக்கின்றனர். இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுவது போன்ற மதவாதம் என்ற மிக ஆபத்தான ஆயுதம், கையிலெடுக்கப்பட்டுள்ளது.   

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டாவது, தமது திட்டத்தை அமுலாக்க இனநல்லிணக்கத்துக்கு விரோதமான சக்திகள் இந்த நகர்வுகளை மேற்கொள்கின்றன.   

வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்றும் நிரந்தரத் தீர்வைப்பெற முஸ்லிம்களின் ஆதரவைத் தருமாறு கோரியும் வருகின்ற தமிழ்த் தேசியம், இந்தப் போக்குகளைப் பொறுப்புணர்வுடன் நோக்க வேண்டும்.   

பௌத்தர்களும் சைவர்களும்தான் வாழ்கின்றீர்கள் என்றால், முஸ்லிம்களின் ஆதரவை ஏன் கோர வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு உள்ளது.   

மறுபுறத்தில், முஸ்லிம்கள் மிகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. சச்சிதானந்தம்களின் கருத்து என்பது, ஒட்டுமொத்தத் தமிழினத்தின் நிலைப்பாடும் அல்ல என்பதையும், அது தமிழர்களின் ஒட்டுமொத்தக் கருத்தும் அல்ல என்பதையும் முஸ்லிம் செயற்பாட்டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.   

இறைச்சியையோ, அபாயாவையோ முஸ்லிம்கள் பயன்படுத்துவதை தமிழர்களாலோ சிங்களவர்களாலோ தடுக்க முடியாது என்பதையும், சைவ உணவு சாப்பிட விரும்பும் தமிழர்களுக்கு இறைச்சிப் பொரியலை வலுக்கட்டாயமாக முஸ்லிம்கள் ஊட்ட முடியாது என்பதையும் விளங்கிக் கொள்வதற்கு பெரிய அறிவாளியாக இருக்க வேண்டும் என்பதில்லை.   

ஆக, பகுத்தறிவைக் கொஞ்சம் பயன்படுத்தினால் போதுமானது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X