2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யேமனில் தொடரும் மனிதாபிமான அவலம்

Editorial   / 2018 ஜனவரி 15 , மு.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜனகன் முத்துக்குமார்

உலகிலேயே மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடியில், யேமன் இப்போது சிக்கியுள்ளது. 2.9 மில்லியனுக்கும் மேலான பொதுமக்கள், வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ள இந்நிலையில், 21 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் -- அதாவது சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேலானவர்களுக்கு -- அவசர மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது என, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கச் செயற்குழு அறிவித்துள்ளது. கடந்தாண்டு மே மாதம், வாந்திபேதி பரவியதிலிருந்து, 911,000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர் எனப் பதிவாகியுள்ள நிலையில், அதில் குறைந்தது 2,195 பேர் வரை இறந்திருந்தமை பதியப்பட்டுள்ளது. இவ்வெண்ணிக்கை, உண்மையான நிலைவரத்தைப் பிரதிபலிக்கவில்லை எனவும், உண்மையில் இறந்தவர்களின் தொகை மிகவும் அதிகம் எனவும், அரச சார்பற்ற நிறுவனங்கள், தங்கள் அறிக்கைகளில் தெரிவித்துள்ளன.

ஹூதி போராளிகளுக்கும் பல்வேறு அரச சார்பு ஆயுததாரிகளுக்கும் இடையிலான வன்முறையைத் தொடர்ந்தும், சவூதி அரேபியா தலைமையிலான சர்வதேச கூட்டணியின் விமானத் தாக்குதல்களை அடுத்தும், மார்ச் 2015 முதல் யேமனில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 10,000க்கும் அதிகமானது. 5,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என, டிசெம்பர் 2017இல் ஐ.நா மதிப்பிட்டுள்ள போதிலும், உண்மையான இறப்பு எண்ணிக்கை, கணிசமாக அதிகமாக இருக்கும் என்றே நம்பப்படுகின்றது. குறித்த இடைவிடாத மோதல்கள், மனிதாபிமானப் பேரழிவொன்றை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறித்த போர்ச்சூழல் காரணமாக, சுமார் 7 மில்லியன் மக்கள், பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறுபட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தங்கள், ஐ.நாவின் இடைக்கால சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆகியன, அரசாங்கத்துக்கும் ஹூதி போராளிகளுக்கும் இடையில் இடம்பெற்றிருந்த போதிலும், யேமன் அரசாங்கத்துக்கும் போராளிகளுக்கும் இடையிலான மோதல்கள், பாரிய அட்டூழியத்துக்கான குற்றங்களை (atrocity crimes) பொதுமக்கள் மீது புரிய ஏதுவாய் இருந்திருந்தன. 2016 நவம்பர் 19ஆம் திகதி, இறுதியாக ஏற்படுத்தப்பட்டிருந்த 48 மணிநேர யுத்தநிறுத்த உடன்படிக்கை, 48 மணித்தியாலங்களுக்குள் அரசியல் பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டமையால் முறிவடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட யுத்தமானது, ஒரு வருடத்துக்கு மேற்பட்ட காலமாக, கண்மூடித்தனமான குண்டுத் தாக்குதல்கள், விமானத் தாக்குதல்கள் உள்ளடங்கலாகத் தொடர்கின்றது. சமீபத்திய மாதங்களில் குறித்த யுத்தமானது, சானா மாநிலத்தை அண்டிய பிரதேசங்களில் நடைபெறுவது, பாரிய மனித அவலத்தைத் தோற்றுவித்துள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக, 2017 நவம்பர் 4 ம் திகதி ஹூதி போராளிகள், சவூதி அரேபியாவுக்கு எதிராக ஏவுகணைத் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டிருந்ததைத் தொடர்ந்து, சவூதி அரேபியா, யேமனுடனான அனைத்து கடல், விமான வழிப் போக்குவரத்து ஆகியவற்றோடு, ஏற்றுமதி - இறக்குமதியையும் தடைசெய்திருந்தது. யேமன், அதன் பிரதான உணவு விநியோகத்தில் 90 சதவீதத்தை இறக்குமதி செய்கின்ற இந்நிலையில், குறித்த தடையானது ஏற்கனவே மனித அவலத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு, உணவுப்பஞ்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஹூதி போராளிகளும் அரசாங்க-சார்பு சக்திகளும், பாடசாலைகள், மருத்துவமனைகள் ஆகியவற்றோடு, சர்வதேச மனிதாபிமானத் தொழிலாளர்கள் உட்பட பொதுமக்களின் உட்கட்டமைப்பை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றனர். மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுசைன், பொதுமக்களுக்கும் இராணுவ இலக்குகளுக்கும் இடையிலான வேறுபாடு, அனைத்துப் பக்கங்களாலும் கருத்திற்கொள்ளப்படவில்லை என தெரிவித்ததுடன், இது, “மனிதாபிமானத்துக்கு எதிரான மோசமான தாக்குதல்” என வர்ணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள், ஆயுத மோதல் பற்றிய ஐ.நா செயலாளர் நாயகத்தின் வருடாந்த அறிக்கையானது, யேமனில் 2016ஆம் ஆண்டில் 502 குழந்தைகளின் இறப்புகளை ஆவணப்படுத்தியுள்ளது. சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டணி, குறைந்தபட்சம் 683 குழந்தைகளைக் கொன்று அல்லது காயப்படுத்தியதாகக் கூறும் குறித்த அறிக்கை, ஹூதி போராளிகள் 414 பேர் கொல்லப்பட்டமைக்கு, குறித்த விமானத் தாக்குதல்களே காரணம் என அறிவித்திருந்தது.

சர்வதேச மனிதாபிமானச் சட்டம், சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஆகியவற்றின் ஏற்பாடுகளை இரு தரப்பினரும் மீறினர் என, ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) உறுதி செய்துள்ளது. தடைசெய்யப்பட்டிருந்த ஏவுகணைத் தாக்குதல்களை, யேமன் உள்நாட்டுப் போரில் சவூதி அரேபியா பயன்படுத்தியதென, சவூதி அரேபியாவே உறுதிசெய்திருந்தது. ஏப்ரல் 20ஆம் திகதி, ஹூதி - சலே படைகள், தடைசெய்யப்பட்ட மிதிவெடிகளையும் கண்ணிவெடிகளையும் பயன்படுத்தியுள்ளன என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 1,500 சிறுவர்கள், ஆயுதக்குழுக்களின் ஆட்சேர்ப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர் என, ஐ.நா குழந்தைகள் அமைப்பின் அறிக்கை, கண்டனம் தெரிவித்துள்ளது. OHCHRஇன் தகவல்களின் படி, யேமனில் இடம்பெற்றுவரும் மோதல், நாட்டின் பஹாய் இன மக்களுக்கு எதிரான மதரீதியான துன்புறுத்தல் அதிகரிக்கவும் காரணமாக அமைந்திருந்தது.

இவ்வளவு இருந்தபோதிலும், ஐ.நா, வழமை போலவே செயலிழந்து காணப்படுவது, ஐ.நாவின் உண்மையான இருப்பையே கேள்விக்குட்படுத்தும் செயற்பாடாகும். போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை எனக் கருதப்படும் சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றமை ஆதாரபூர்வமாக வெளிவரும் போதிலும், ஐ.நா பாதுகாப்புச் சபை, யேமனில் நடைபெறும் மோதலுக்கு போதுமான அளவில் இன்னமும் பதிலளிக்கவில்லை. ஏப்ரல் 2015க்குப் பின்னரான காலப்பகுதியில், யேமன் மீதான எந்த ஒரு பாதுகாப்புச் சபை தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை, மேலும் தரப்புகளுக்கிடையில் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கும், பாதுகாப்புச் சபை எவ்வித நடவடிக்கையும் மேற்கொண்டிருக்காமை, ஐ.நாவின் தோற்றுவிப்பு நோக்குக்கு விரோதமானது.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை, பிராந்திய இராணுவக் கூட்டணியை ஆதரிக்கும் பிரதான சக்திகளாக இருக்கும் அதே வேளையில், ஈரான் ஹூதி போராளிகளுக்கு, தொடர்ச்சியாக இராணுவ உதவி வழங்கி வருவது, பதிலி யுத்தமொன்றின் வடிவாகும். சவூதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை நிறுத்த ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் சர்வதேச அழுத்தம் கிடைக்காதவரை அல்லது குறித்த பிராந்தியத்தில் மூன்றாவது நாடு தலையிடும் வரை, குறித்த மனித அவலம் ஓயாது என்பதே உண்மை நிலையாகும். இந்நிலையிலேயே ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகரின், பாதுகாப்புச் சபையின் இயலாமைக்கு எதிரான கண்டனம் பார்க்கப்பட வேண்டியதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .