2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு புதிய பிரசார வியூகம்?

எம். காசிநாதன்   / 2018 மே 14 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தமிழகத் தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது. ரஜினியும் நிர்வாகத் திறமையுள்ள மோடியும் அந்த இடத்தை நிரப்ப முடியும்” என்று பத்திரிகையாளரும், கணக்காளருமான குருமூர்த்தி அறிவித்துள்ள நிலையில், “தமிழ்நாட்டில் பா.ஜ.கவே கிடையாது” என்று பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான டொக்டர் சுப்ரமணியன்சுவாமி பேட்டியளித்து இருக்கிறார்.   

தமிழக அரசியலை மையப்படுத்தி, இரு அரசியல் விமர்சகர்களுக்கு இடையில் நடைபெற்றுள்ள இந்தக் கருத்து மோதல், ஒருவகையில் எதிர்பார்க்கப்பட்டதுதான்.  என்றாலும், தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தமட்டில், அப்படியொரு வெற்றிடம் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது, தேர்தல் அரசியல் என்பதே உண்மை நிலைவரம்.   

தி.மு.க தலைவர் கருணாநிதி, உடல்நலக்குறைவால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். அவருக்கு எதிர்த்துருவமாக இருந்த, அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா மறைந்து விட்டதால், இது போன்றதொரு பிரசாரத்தை முன்னிலைப்படுத்தி வருகிறார்கள்.  

 தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும்  மாற்றாக, ஒரு சக்தி தமிழ்நாட்டில் உருவாக வேண்டும் என்ற, அடிப்படை நோக்கத்தின் விளைவே இது போன்ற பிரசாரங்களும் பேட்டிகளும் சினிமாப் பாடலுக்கு வரும் பின்னணி இசை போல் இருக்கின்றன.  

ரஜினி, கமல் போன்றவர்களைத் தொடர்ந்து, நடிகர் சிவக்குமார் கூட, “தற்போது தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பது உண்மைதான்” என்ற கருத்தை முன்வைத்துப் பேசியிருக்கிறார். 

ஆனால், கமல் போல் அவர், அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை. ரஜினி போல், கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என்று, நீண்ட நாட்களாகச் சொல்லிக் கொண்டும் இருக்கவில்லை. அதே நேரத்தில், சிவக்குமாரின் இந்தப் பேச்சு, ஏதோ இயற்கையானது என்றும் நம்புவதற்கு இல்லை.   

கம்பராமாயண விழாக்கள் மூலம் தானும், சமூக நலத்திட்டங்கள் மூலம் நடிகர்கள் சூர்யா, கார்த்திக் ஆகியோரைப் பொது விழாக்களிலும் ஈடுபடுத்தி வரும் நடிகர் சிவக்குமாருக்கும், அரசியல் கட்சி தொடங்கும் ஆசை, துளிர் விட்டு இருக்கலாம் என்று கருத வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது.  

 கருணாநிதியும் ஜெயலலிதாவும் தீவிர அரசியலில் இருந்த காலங்களில், அரசியல் கருத்துகளைச் சொல்ல அஞ்சிய பல சினிமா நடிகர்கள், இப்போது தாராளமாக அரசியலில் சர்ச்சைகளை ஏற்படுத்தும் கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள்.  

முதலில், “தமிழக அரசியலில் வெற்றிடம்” என்ற பிரசாரத்தை முன் வைத்தார்கள். ஆனால், தி.மு.கவும் அ.தி.மு.கவும் அதைக் கடுமையாக மறுத்தன. “தமிழகத்தில் அப்படி எந்த வெற்றிடமும் இல்லை; நடிகர்கள் நாட்டை ஆள முடியாது” என்று பரபரப்பு பேட்டிகள் வௌியாகின.   

அதற்குக் காரணம், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக இருக்கும் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க கட்சி இயங்குகிறது. அ.தி.மு.கவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஆட்சி நடக்கிறது என்பது அவர்கள் பதிலடி.   

அதனால் இப்போது பிரசாரம் சற்று மாற்றப்பட்டிருக்கிறது. “கட்சிகளுக்குத் தலைமை இருக்கலாம். ஆனால், தமிழக நிர்வாகத் தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது” என்று புதிய வடிவம் பெற்றிருக்கிறது. இதன் மூலம், தமிழ்நாட்டை ஆட்சி செய்த கருணாநிதி, ஜெயலலிதா போன்ற தலைமைகள், இப்போது இல்லை என்பதைப் பிரசாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.   

அதாவது, தி.மு.கவில் உள்ள ஸ்டாலின், அ.தி.மு.கவில் உள்ள எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் போன்றவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா போன்று தலைமைத்துவ ஆற்றல் கொண்டவர்கள் அல்ல என்பதே முன் வைக்கப்படுகிறது. தலைமைப் பொறுப்பில் ஜெயலலிதா இல்லாததால், அ.தி.மு.க இரு பிளவுகளாகி நிற்கிறது. ஒன்று, சசிகலா பக்கமும் இன்னொன்று, எடப்பாடி பழனிசாமி பக்கமும் நிற்கிறது.   

தி.மு.கவுக்கு ஸ்டாலின் செயல் தலைவராக இருந்தாலும், அவருக்கும் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற நிர்வாகத் தலைமை கிடையாது என்ற கருத்து பரப்பப்படுகிறது. 

“அடுத்து, தி.மு.க ஆட்சி அமையும். தமிழகத்தில் நிர்வாகச் சீரழிவை தி.மு.க தான் மாற்றிக் காட்ட முடியும்” என்ற தி.மு.கவின் பிரசாரத்தை முறியடிக்க, “தமிழக தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது” என்ற பிரசாரம் வரும் நாட்களில் மேலும் சூடு பிடிக்கும். 

“சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது மட்டுமே இலக்கு; ஆனால் பா.ஜ.கவுடன் கூட்டணி கிடையாது” என்று போயஸ் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும், “தண்ணீர் என்றாலே எனக்கு ஆர்வம் பிறந்து விடுகிறது. தென்னிந்திய நதிகளை இணைப்பதுதான் என் வாழ்நாள் இலட்சியம்” என்று ‘காலா’ பட வெளியீட்டு விழாவிலும் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசியிருப்பதன் பின்னனியில், இந்தப் பிரசாரத்தை ரஜினியே தீவிரப்படுத்துவார். விரைவில் மாநில மாநாட்டை நடாத்துவதற்குத் திட்டமிட்டு வரும் ரஜினிக்கு, இந்த ‘வெற்றிடப் பிரசாரம்’ துரும்பாக அமையலாம்.   

இந்தத் தலைமை வெற்றிடப் பிரசாரம், ரஜினிக்காக என்பதை அ.தி.மு.கவும் 
தி.மு.கவும் நன்கு உணர்ந்திருக்கின்றன. அதன் தாக்கம், அ.தி.மு.கவின் முக்கிய பிரமுகர்களின் கருத்துகளில் எதிரொலிக்கிறது. இவற்றையும் தாண்டி, பா.ஜ.க தலைவர் சுப்ரமணியன்சுவாமி, “நடிகர்கள் மற்றவர்கள் எழுதுவதை வைத்துப் பேசிக் கொண்டிருப்பவர்கள்.  சுயமாகச் சிந்திக்கத் தெரியாதவர்கள்.  குருமூர்த்தி எழுதிக் கொடுப்பதை வைத்துக் கொண்டு, ரஜினி பேசி வருகிறார்” என்று காரசாரமாகச் சாடியிருக்கிறார். 

ஆரம்பத்திலிருந்தே ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு சுப்ரமணியன்சுவாமி எதிர்த்து வந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க தலைவர்களும் பா.ஜ.கவுக்கு  ஆதரவான துணை அமைப்புகளும் ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு ஆதரவாகவே இருக்கின்றன.  

 இந்த ஆதரவு, ரஜினியின் அரசியல் பிரவேசத்தை, ‘பா.ஜ.ககாக வருகிறார்’ என்று, மக்கள் மன்றத்துக்கு எடுத்துச் சென்று விட்டது. குறிப்பாக, குருமூர்த்தியை சந்தித்து ரஜினி ஆலோசனை நடத்தியது, இப்போது ரஜினியால் தமிழகத் தலைமையை நிரப்ப முடியும் என்று ஆதரவளித்துப் பேசுவது எல்லாம், ரஜினியின் அரசியல் பிரவேசம் பா.ஜ.கவின் வழிகாட்டுதல்படி நடத்தப்படுகிறது என்பது, தெளிவாகி வருகிறது.  

 திராவிட இயக்கங்கள் வலுப்பெற்றுள்ள தமிழகத்தில், மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.கவுக்கு எதிராகக் கடுமையான கோபம் மாநிலம் முழுவதும் நிலவுகின்ற நேரத்தில், பா.ஜ.க நட்பு, ரஜினிக்கு எப்படிக் கை கொடுக்கப்போகிறது?   

 அதனால்தான், ரஜினி “பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை” என்று, நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.  

ஆனால், தமிழகத் தலைமைக்கு வெற்றிடம் என்று புறப்பட்டிருக்கும் ரஜினிக்கு, ஒரு மன்றம் இருக்கிறதே தவிர, கட்சியின் அமைப்பு இல்லை. அதேபோல், நடிகர் விஜயகாந்த் தனிக்கட்சி தொடங்கிய போது, அவரிடம் ஐக்கியமானது போல், வேறு எந்த அரசியல் பிரபலங்களும் ரஜினியிடம் போய்ச் சேரவில்லை.  

 இதே ஆர்வத்தில், களத்துக்கு வந்திருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் கட்சி தொடங்கப்பட்டு விட்டது. ஆனால், கிராமம் தோறும் இன்னும் கட்சி அமைப்புகள் உருவாக்கப்படவில்லை. இது தவிர, நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோர் இருவருக்குமே அடிப்படை வாக்கு வங்கி, இதுவரை நடைபெற்ற எந்த தேர்தலிலும் உறுதியாக வௌிப்படவில்லை.   

ஆனால், அடிப்படை வாக்கு வங்கிகள் உள்ள கட்சிகளாக தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் இன்னும் களத்தில் உள்ளன. ஏன் இடது, வலது கம்யூனிஸ்ட் கட்சிகளும் தமிழக அரசியல் களத்தில் அப்படியே இருக்கின்றன.   

தி.மு.க, அ.தி.மு.க தவிர மற்றக் கட்சிகளின் வாக்கு வங்கிகள், ஆட்சி அமைப்பதற்குப் போதிய வாக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவை எல்லாம் அடிப்படை வாக்கு வங்கி கொண்ட கட்சிகள்.  

 இந்தக் கட்சிகளுக்கும், அடிப்படை வாக்கு வங்கியே இல்லாத கமல், ரஜினி போன்றோருக்குமான தேர்தல் களமாகத் தமிழகத் தேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் பிரசார யுக்தி, இப்போது தொங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரசாரம் வெற்றி பெற ரஜினியும் கமலும் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கும்.   

ஏதோ திடீரென்று கிடைக்கும் புதையல் போன்றதல்ல தமிழகத்தின் முதலமைச்சர் பதவி என்பதையும் அடிப்படை வாக்கு வங்கிகளைக் கொண்ட கட்சிகளைச் சமாளிப்பது, அவ்வளவு சுலபமானது இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் பிறக்கும் என்பதே தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலைவரம்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .