2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ரணிலும் ‘கோட் சூட்’ அரசியலும்

என்.கே. அஷோக்பரன்   / 2019 ஜூன் 24 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தல் முஸ்தீபுகள் - 06

இலங்கை அரசியலில் சகுனம், காலம், நல்ல நேரம், ஜோதிடம், மந்திரம், மாந்திரீகம், பூஜைகள், திருத்தல தரிசனம் போன்றவற்றின் மீதான அதீத நம்பிக்கை என்பது, மிக வௌிப்படையாகவே நாம் கண்டுணரக்கூடிய விடயமாக இருக்கிறது.  

‘சிங்கள-பௌத்தத்தின்’ காவலாளிகளாகத் தம்மை மார்தட்டிக்கொள்வோர் கூட, திருப்பதிக்கும் பத்மநாபசுவாமி கோவிலுக்கும் ஓடி ஓடிச் சென்று, தரிசனங்களில் ஈடுபடுவது எல்லாம் இந்த அதீத நம்பிக்கையால்த்தான்.  

 ஜோதிடரைக் கேட்டே தேர்தல் தினத்தைத் தீர்மானிக்கும், முடிவுகள் எடுக்கும் கால நேரத்தைத் தீர்மானிக்கும் போக்கும் இலங்கைக்குப் புதியதல்ல. அதுபோலவே, அதிர்ஷ்டத்தின் மீதான நம்பிக்கையும் அரசியல்பரப்பில் மிகுந்தே காணப்படுகிறது.   

ரணில் விக்கிரமசிங்க என்ற ஆளுமையின் மேல், விரும்பியோ விரும்பாமலோ தோல்வியின் முத்திரை மிக அழுத்தமாகக் குத்தப்பட்டிருக்கிறது. சுதந்திர இலங்கையின், மூத்த தேசியக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக, 1994 முதல் கோலோச்சிக் கொண்டிருப்பவர் ரணில்.   

இவர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த காலப்பகுதியில் நான்கு ஜனாதிபதித் தேர்தல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் இரண்டில் மட்டுமே ரணில் போட்டியிட்டார் (1999, 2005). இரண்டு தடவையும் மிக நெருக்கமான போட்டி நிலவிய நிலையில், ரணிலால்  ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை.  குறிப்பாக, 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், தமிழீழ விடுதலைப் புலிகள் தேர்தலைப் புறக்கணிக்கக் கோராது, வடக்கு, கிழக்கு வாக்களித்திருக்குமானால் ரணில் விக்கிரமசிங்க அந்தத் தேர்தலில் வென்றிப்பார் என்பதே நிலவும் பொதுவான அபிப்பிராயமாகும்.   

2005 இன் பின்னர், நடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் (2010, 2015) ரணில் போட்டியிடவில்லை. மாறாக, பல எதிர்க்கட்சிகளையும் ஒன்றுதிரட்டிய ஒருமித்த எதிரணியின் பொதுவேட்பாளராக, 2010இல் சரத் பொன்சேகாவையும் 2015இல் மைத்திரிபால சிறிசேனவையும் களமிறக்கி, அவர்களுக்கு ரணிலும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரவளித்திருந்தது.  

ஜனாதிபதித் தேர்தல் தோல்விகள் மட்டுமல்ல, ரணிலின் தலைமையின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு முறை மட்டுமே ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. முதலாவதாக, 2001இலும்  பின்னர் 2015இலும் ஆகும்.   

2001இல் தொடங்கிய ஆட்சி, ஜனாதிபதி சந்திரிக்காவுடனான முறுகல் நிலையையும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தம், பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட பின்னடைவாலும் 2004இல் முடிவுக்கு வந்தது.   

அதன் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கு, ஏறத்தாழ ஒரு தசாப்தத்துக்கும் மேற்பட்டகாலம் தேவைப்பட்டது. இந்த ஒரு தசாப்தகாலம், ரணிலுக்கு இலகுவானதாக இருக்கவில்லை. குறிப்பாகக் கட்சிக்குள், ரணிலின் தலைமைக்கெதிராக எழுந்த குரல்களும் தலைமைக்கு ஏற்பட்ட போட்டியும் உட்கட்சி முறுகலை அதிகப்படுத்தியதுடன், ஐ.தே.க என்ற பலமான தேசியக் கட்சி, வினைத்திறனாகச் செயற்பட முடியாத நிலை ஏற்பட்டது.   

ரணில் தலைவராகத் தொடர்ந்ததால் கட்சியிலிருந்து சில அரசியல்வாதிகள் விலகினார்கள். சிலர், தாம் கட்சிதாவிப் பதவிகளைக் கைப்பற்றிக்கொள்ள இதை ஒரு சாட்டாக்கிக் கொண்டார்கள். எது எவ்வாறாக இருப்பினும், கட்சிக்கு வௌியில் மாத்திரமில்லாமல், கட்சிக்குள்ளும் ரணில் மீதான அதிருப்தி இருக்கவே செய்தது.  

 ஆனால், இந்த அதிருப்தியாலும் எதிர்ப்பாலும் ரணிலை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு கட்டத்தில், இனி ரணில், தலைவராகத் தொடர முடியாது என்ற கடுமையான நெருக்கடிச் சூழல் கட்சிக்குள் எழுந்தபோது, அனைவரும் ரணிலின் இராஜாங்கம் இதோடு முடிவடைகிறது என்று நினைக்குமளவுக்கு நிலைமை வந்தபோதும் கூட, அதையெல்லாம் கடந்து, ரணில் இன்றுவரை கட்சியின் தலைமையைத் தன்னிடம் வைத்திருப்பதானது ஆச்சரியமானதுதான்!   

2015 ஜனவரிக்கு முன்பாக, ரணில் மீண்டும் இலங்கையின் பிரதமராவார் என்று யாராவது சொல்லியிருந்தால், அதை அனைவரும் நகைச்சுவையாக எதிர்கொள்ளும் நிலையே இருந்தது. ஆனால், 2015 ஜனவரியில் இலங்கையின் பிரதமராக ரணில் மீண்டும் ஆனார்.    

ஆனால், இந்த இராஜதந்திரங்களையெல்லாம் அவரால் தேர்தல் வெற்றிகளாக மாற்றமுடியாமைதான், அவர் தோல்வியின் அடையாளமாகப் பார்க்கப்படக் காரணமாகும்.  

‘கோட் சூட்’ அரசியல் என்பது, சுதந்திர இலங்கையில் கொலனித்துவம் விட்டுச்சென்ற முக்கிய அடையாளங்களில் ஒன்று. இலங்கையின் முதலாவது பிரதமர் டீ.எஸ். சேனநாயக்க, அவரது மகன் டட்லி, அவரது உறவினர் சேர்.ஜோன் கொத்தலாவல என, இலங்கையின் ஆரம்பகாலத் தலைமைகள் ‘கோட் சூட்’ அரசியல்வாதிகளாகவே இருந்தார்கள்.   

இதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க. இலங்கை அரசியல் பரப்பில், அநகாரிக தர்மபாலவிலிருந்து ஆரம்பித்த ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தை, நேரடி அரசியலில் தத்தெடுத்து, உயிர்கொடுத்தவர் எஸ்.டபிள்யு.ஆர்.டீ. பண்டாரநாயக்க ஆவார். ‘கோட் சூட்’ அரசியலுக்கு மாற்றாக, ‘தேசிய உடை’ அரசியலைப் பிரபல்யம் செய்தவர் அவர்.   

சுதந்திர இலங்கை அரசியலில், இன்றுவரை இந்தக் ‘கோட் சூட்’ - ‘தேசிய உடை’ பிரிவினையைக் காணலாம். சமூகவியல் ரீதியில் பார்த்தால், இந்தக் ‘கோட் சூட்’ - ‘தேசிய உடை’ வேறுபாடுகளுக்கும் இனம், மதம், கல்வி, சமூகம், அந்தஸ்து, சாதி, வர்க்கம், அரசியல் கொள்கை ஆகியவற்றுக்கும் இடையிலான தொடர்புகளை அடையாளம் காணக் கூடியதாக இருக்கும். இவை நிரந்தரமானவையல்ல; ஆனால் பொதுவான அம்சங்கள் பல தொடர்புபடுவதை நோக்கலாம்.   

இலங்கையைப் பொறுத்தவரை, ஓர் அரசியல் தலைவர் அணியும் ஆடை, பேச்சு, மொழி, உச்சரிப்பு என்பன, அவரது இனம், மதம், கல்வி, சமூக அந்தஸ்து, சாதி, வர்க்கம், அரசியல் கொள்கை ஆகியவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் உணர்த்துவதாகவே இருக்கிறது. அத்துடன், வாக்குவங்கியைப் பொறுத்தவரையும் வாக்குவங்கியானது, தமது தலைவர் யார் என்பதைத் தீர்மானிப்பதிலும் மேற்குறித்த விடயங்கள், குறிப்பிடத்தக்க ப‍ங்கை வகிக்கின்றன என்பது மறுக்க முடியாதது.  

இந்தக் ‘கோட் சூட்’ - ‘தேசிய உடை’ இருதுருவ பிரிநிலையில், ரணில் விக்கிரமசிங்க ‘கோட் சூட்’ பிரிவுக்குரியவர் என்பது வௌ்ளிடைமலை. அதனை மறைக்கவோ, மாற்றவோ கூட அவர் முனையவில்லை. இதுதான், தான் என்பதை மறைக்க, அவர் எண்ணியதில்லை; எத்தனித்ததும் இல்லை. அதனால்தான், பௌத்த விகாரைகளுக்கும், கோவில்களுக்கும் பூஜை வழிபாட்டுக்குச் சென்றாலும் கூட, ரணில் ‘சாரம்’ கட்டியதில்லை.   

மறுபுறத்தில், அவருடைய சரளமான ஆங்கிலப் பேச்சும், மேற்குலக ஆதரவு நிலைப்பாடும், திறந்த பொருளாதாரக் கொள்கை நிலைப்பாடும், தனியார்மயமாக்கல் மீதான நம்பிக்கையும் ஒப்பீட்டளவில் தாராளவாதக் கொள்கை மீதான சற்றேனுமான சார்பும் தேசியவாதிகளும் இடதுசாரிகளும் ரணில் மீதான கடுமையாக விமர்சனங்களை முன்வைக்க முக்கிய காரண‍ங்களாகும். மறுபுறத்தில், கட்சிக்குள் அவருடைய மேலாதிக்கப் போக்கும், கட்சியைக் கொண்டு நடத்தும் விதமுமே, தான் நினைத்ததிலிருந்து மாறாத பற்றுறுதியும் அவரைச் சர்வாதிகாரி என விமர்சிக்கக் காரணம் என, கட்சிக்குள் அவரை எதிர்ப்பவர்கள் சொல்லும் கருத்தாகும்.   

மறுபுறத்தில், இவற்றுற்கு எல்லாம் மாறுபட்ட வகையில், முடிவெடுக்க முடியாதவர், ஒரு விடயத்தை நடத்தும் வல்லமையற்றவர், தனது நிலைப்பாட்டில் நிற்க முடியாவர், பலமற்றவர், வெற்றிபெற முடியாதவர், உறுதியாகப் பேசமுடியாதவர் என்ற கருத்தும் பொதுவில் நிலவுவதையும் அவதானிக்கலாம்.   
மேலும், சாணக்கியப் பேர்வழி, தந்திரோபாயக்காரர், நம்பமுடியாதவர் என்ற அடையாளங்களும் ரணில் மீது சாற்றப்படுவதைக் காணலாம். இத்தனை ஒன்றுக்கொன்று முரணாண அடையாளங்களைக் கொண்ட முரண்பாடுகள் நிறைந்த ஆளுமையாகவே ரணில் காணப்படுகிறார்.   

எத்தனை எதிர்மறை அடையாளங்கள் ரணில் மீது இருந்தாலும், கற்றவர், அறிவுள்ளவர், நேர்மையானவர், கறைபடியாத கரம் என்ற அடையாளங்களும் அவர் மீதான பொது அபிப்பிராயமாக இருந்ததையும் மறுக்க முடியாது.   

ஆனால், மத்தியவங்கி முறிகள் மோசடி தொடர்பில், அவரது பெயர் அடிபடத் தொடங்கியதிலிருந்து ‘கறைபடியாத கரம்’ என்ற அடைமொழியில் கறைபடிந்துவிட்டது என்பதுதான் யதார்த்தம்.  

இந்த நிலையில்தான், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடுவாரா, அல்லது கடந்த இருமுறை செய்ததைத் போலவே, இன்னொருவரைக் களத்தில் இறக்கிவிடுவாரா என்ற கேள்வி முக்கியம் பெறுகிறது.   
அண்மையில், அமைச்சர் ஹர்ஷ டி சில்வா டுவிட்டரில் ஒரு சுவாரஷ்யமான செய்தியைப் பகிர்ந்திருந்தார். அலரி மாளிகையில், முன்னாள் மாலைத்தீவு ஜனாதிபதி நஷீட் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்த இரவுச் சந்திப்பொன்றின் முடிவில், “நீங்கள் ஓய்வுபெற நேரமாகிவிட்டது” என்று நஷீட், ரணிலுக்குச் சொல்ல, “ஓய்வா”? என்று ரணில் ஆச்சரியமாக வினவியதாகவும் “இல்லை, இன்றைய நாளுக்கு ஓய்வுபெற என்பதைச் சொன்னேன்” என்று அவர் தௌிவுபடுத்த, அனைவரும் சிரித்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.   இதில் குறிப்பிடத்தக்க விடயம், அரசியலிலிருந்து ஓய்வுபெற ரணில் விக்கிரமசிங்க தயாராகவில்லை என்பதாகும். ஆகவே, அரசியலில் தொடர்ந்தும் பயணிக்கும் திட்டம் அவருக்கு இருக்கிறது.   

அப்படியானால், நிச்சயமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை அவர் உடனடியாக யாருக்கும் விட்டுத்தரப்போவதில்லை என்பது நிச்சயம். இந்தச் சூழலில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான, அவரது திட்டம் என்னவாக இருக்கும் என்ற ஊகம் முக்கியம் பெறுகிறது.   

குறிப்பாக, கரு ஜெயசூரிய போட்டியிடுவார்; சஜித் பிரேமதாஸ போட்டியிடுவார் என்ற வதந்திகள் பலமாகப் பரவிக்கொண்டிருக்கும் நிலையில், ரணில் போட்டியிடுவாரா என்று கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.  

ஆனால், இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முன்பதாக, இன்னொரு முக்கிய விடயத்தை கருத்திற்கொள்ள வேண்டும். அரசமைப்புக்கான 19ஆம் திருத்தத்துக்குப் பின்பு, அடுத்ததாக வரும் ஜனாதிபதி, இதுவரை காலமும் இருந்த மற்றும் தற்போது இருக்கின்ற ஜனாதிபதியை விட ஒப்பீட்டளவில் குறைந்த அதிகாரத்தையே கொண்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருப்பார். அவரால் அமைச்சுப் பதவிகளைக் கூட வகிWக்க முடியாது.   

நாடாளுமன்றமும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையும் தற்போதுள்ளதைவிடச் சற்றே பலம்வாய்ந்ததாக இருக்கும். இந்த நிலையைக் கருத்திற் கொள்ளும் போது, ஜனாதிபதி ஆவதற்கான ஊக்கவிசை, முன்பை விடக் குறைவாகவே இருக்கிறது. ஆகவே, ஜனாதிபதி ஆக வேண்டும் என்ற நீண்டநாள் ஆசையை (?) தவிர, ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேறென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதும், அவர் போட்டியிடும் பட்சத்தில் இலங்கையின் வாக்குவங்கியை அவரால் தனக்குச் சாதமாக்க முடியுமா, அதன் மூலம் வெற்றிபெற முடியுமா என்பதும் எமக்கு எழும் முக்கிய கேள்விகளாகும்.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .