2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘வெள்ளை’ இனவாதத்துக்கு முடிவு வருமா?

Gopikrishna Kanagalingam   / 2017 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனவாதம் தொடர்பாகவும் மதவாதம் தொடர்பாகவும் பாகுபாடுகள் தொடர்பாகவும், உலகுக்கெல்லாம் பாடமெடுக்கும் ஐக்கிய அமெரிக்கா, அண்மைக்காலத்தில் சிறிது அடக்கி வாசிப்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த நாட்டில், அண்மைக்காலத்தில் பகிரங்கமாகவே ஆரம்பித்திருக்கும் இனவாதங்களும் மதவாதங்களும் பாகுபாடுகளும் தான், இதற்கான காரணங்களாக இருக்கின்றன.  

அதற்காக, போர்க்குற்றம் தொடர்பாகவும் பாகுபாடு தொடர்பாகவும், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் ஐ.அமெரிக்கா பாடமெடுத்த போது, அது தேனும் பாலும் ஓடும் நாடாகக் காணப்பட்டதா என்றால், இல்லை. ஈராக் போர் என்ற மிக மோசமான, கொடூரமான முடிவை எடுத்து, அதன் மூலம் பல்லாயிரம் உயிர்களைக் கொன்ற பின்னரும் கூட, போர்க்குற்றம் பற்றிக் கதைக்கும் தைரியமும் மிடுக்கும், ஐ.அமெரிக்காவுக்கு இருந்தது. ஆனால், அந்நாட்டின் அத்தனை குற்றங்களும் குறைபாடுகளும், ஓரளவு திறமைமிக்க தலைமைத்துவத்தின் கீழ், தேன் பூசப்பட்ட வார்த்தைகளின் கீழ் மறைக்கப்பட்டே காணப்பட்டன. அதில் தான், இப்போது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.  

நாட்டின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்ட பின்னர், அந்த நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அத்தனை மாற்றங்களும், இதுவரை காலமும் எதையெல்லாம் ஏனைய நாடுகள் செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டதோ, அவையெல்லாம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  

ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்று, இன்று வரை 7 மாதங்கள் கூட ஆகியிருக்கவில்லை. அதற்குள், பல்வேறு சர்ச்சைகளும் பல்வேறு குழப்பங்களும் நிறைந்த ஆட்சியாக இது காணப்படுகிறது. “இந்தக் குழப்பத்தின் பின்னர் இந்த ஆட்சி நிலைக்காது” என்று எண்ண, ஆட்சி நிலைப்பது மாத்திரமன்றி, முன்னர் காணப்பட்டதை விடப் பெரியளவிலான குழப்பமும் ஏற்படுகிறது. ஆனால், இவற்றுக்கெல்லாம் மகுடம் வைப்பதைப் போன்றே, கடந்த வாரம் அமைந்தது.  

முதலாவதாக, வடகொரியா மீது தாக்குதல் நடத்தப் போவதான சமிக்ஞையை, ஜனாதிபதி ட்ரம்ப் வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, ஐ.அமெரிக்காவின் பிராந்தியமான குவாம் மீது, தாக்குதல் நடத்தப் போவதாக, வடகொரியா மிரட்டியது. அதன் பின்னரும், இராணுவம் தயாராக இருக்கிறது என்ற அடிப்படையில், ஜனாதிபதி ட்ரம்ப் பதிலளித்தார். 

வடகொரியாவோ, ஜனாதிபதி ட்ரம்ப்பை “விடயங்களைப் புரிந்துகொள்ள இயலாதவர்” என்றவாறு விளித்தது. இவையெல்லாம், அணுவாயுதங்களைக் கொண்டிருக்கின்ற இந்த இரண்டு நாடுகளுக்குமிடையில், அணுவாயுத யுத்தம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.  

ஆனால், அந்த வாரத்தில் இடம்பெற்ற இன்னுமொரு நிகழ்வு, இன்னொரு விதமான அழுத்தத்தை, ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு வழங்கியது. அது தான், வேர்ஜினியா மாநிலத்தில் இடம்பெற்ற போராட்டங்களும் அதன் பின்னரான வன்முறைகளும்.  

ஐ.அமெரிக்காவின் வரலாற்றில், கறுப்பினத்தவர்களை அடிமையாக வைத்திருந்தமையும் அதேபோன்று அதன் பின்னர் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான பாகுபாடுகளும், நாம் அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்கிறது. ஆனால், இலங்கையின் சாதாரணமானவர்களுக்கு, இந்த அடிமைத்தனத்தோடு சம்பந்தப்பட்ட இன்னொரு வரலாறு தெரிவதில்லை. அது தான் “அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு”. அடிமையாக வைக்கப்பட்டிருந்தவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றபோது, அடிமைகளில் பொருளாதார ரீதியாகத் தங்கியிருந்த சில மாநிலங்கள் ஒன்றிணைந்து, ஐ.அமெரிக்காவிலிருந்து வெளியே, தனியே அமைத்துக் கொண்ட கூட்டணி தான் இது. இதன் காரணமாக, சிவில் யுத்தமொன்றும் இடம்பெற்றது. 

இந்த யுத்தமும் இந்தப் பிரிவும், கறுப்பினத்தவர்களை அடிமைகளாகவே வைத்திருக்க வேண்டுமென்ற இனவாத நோக்கிலான கண்ணோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்னமும் கூட இவை, ஐ.அமெரிக்க வரலாற்றின் கறுப்புப் புள்ளிகளாகக் காணப்படுகின்றன.  

ஆனால், அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் வரலாற்றை வெளிப்படுத்தும் சிலைகள், பல்வேறு இடங்களில் இன்னமும் காணப்படுகின்றன. இவை, இனவாதத்தை வெளிப்படுத்துகின்றன என்ற அடிப்படையில், இவற்றை நீக்குவதற்கான முயற்சிகள், அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.  

வேர்ஜினியாவில் காணப்படும் இவ்வாறான சிலையை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தான், இனவாதம் பற்றிய கவனத்தை, ஐ.அமெரிக்காவில் மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர், இனவாதக் கருத்துகளை வெளிப்படுத்தியதோடு, நாஸிகளின் வணக்கமுறையையும் வெளிப்படுத்தினர். இது, நவ நாஸிஸக் கொள்கைகளைக் கொண்டவர்கள், எவ்வளவு வெளிப்படையாகச் செயற்படுகிறார்கள் என்பதைக் காட்டியது.  
இந்த இனவாத வெளிப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. அங்கு தான், இரு தரப்புக்குமிடையிலான மோதல்கள் ஏற்பட்டன. அது, பின்னர் வன்முறையாக மாறியது.   

இனவாதிகள், தங்களுக்கான ஆர்ப்பாட்டத்தையும் போராட்டத்தையும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டமை, எந்தளவுக்குச் சரியானது என்ற விமர்சனம் காணப்படுகிறது. 

அந்த விமர்சனத்தில், உண்மை காணப்படுகிறது. ஓர் இனம் தான், ஏனைய எல்லா இனங்களையும் விட உயர்ந்தது என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதும் அந்த இனத்துக்கு விசேடமான கவனிப்புகளை அல்லது வாய்ப்புகளைக் கோருவதும், எந்தளவுக்கு அனுமதிக்கப்பட வேண்டியது அவசியம் என்பது, முக்கியமான கேள்வியாக இருக்கிறது.  

ஆனால் மறுபக்கமாக, ஐ.அமெரிக்காவின் அரசமைப்பின் 1ஆவது திருத்தம், கருத்துகளைச் சுதந்திரமாக வெளியிடுவதற்கான உரிமையை உறுதிசெய்கிறது.

அவ்வாறிருக்கையில், வெறுப்பு அல்லது இனவாதப் பேச்சுகளை, எந்த அடிப்படையில் கட்டுப்படுத்துவது என்ற யதார்த்தமான கேள்வியும் எழுகிறது. இதனால் தான், இவ்விடயம், இன்னமும் சூடுபிடிக்கும் ஒன்றாக மாறியிருக்கிறது.  

குறித்த இனவாதப் போராட்டத்தில் கலந்துகொண்ட 20 வயதேயான இளைஞனொருவன், தனது காரைக் கொண்டுசென்று, இனவாதத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டவர்கள் மீது மோதிக்கொண்ட நிலையில், ஒருவர் உயிரிழந்ததோடு, 19 பேர் காயமடைந்தனர். இதன் பின்னர் தான், இச்சம்பவம் தொடர்பான கவனம், மேலும் அதிகரித்தது.  

ஐ.அமெரிக்காவில் நடைபெறும் சிறிய விடயங்களுக்கும், தன்னுடைய கருத்தைத் தெரிவிக்கும் ஜனாதிபதி ட்ரம்ப், இந்த விடயம் தொடர்பாக மாத்திரம் அமைதி காத்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பத்திரிகைகள், வேறு ஊடகங்கள் ஆகியவற்றில் வெளியாகும் செய்தி அறிக்கைகள் தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்து, “தன்பக்க நியாயத்தை” வெளிப்படுத்துவதற்கு, டுவிட்டர் இணையத்தளத்தை அவர் பயன்படுத்துவதுண்டு. ஆனால், சார்லொட்டெஸ்வைல் விவகாரம் தொடர்பாக மாத்திரம், அவர் எதனையும் தெரிவிக்கவில்லை.  

நீண்ட நேரத்தின் பின்னர் தான், “அனைத்துத் தரப்புகளையும்” கண்டிப்பதாக, அறிக்கையொன்றை வெளியிட்டார். இதில் குறிப்பிடத்தக்க விடயமாக, அந்த ஊடகச் சந்திப்பில், 2 அல்லது 3 தடவைகள், ஒலிவாங்கிக்கு அண்மையாக அவர் சென்ற போது, “வெள்ளையின ஆதிக்கத்தைக் கோருவோர் தொடர்பான உங்கள் கருத்து என்ன?” என, ஊடகவியலாளர் சத்தமிட்டனர். அந்தக் கேள்விகளையெல்லாம், ஜனாதிபதி ட்ரம்ப் தவிர்த்தார்.  

இவை நடைபெற்று, சுமார் 2 நாட்களின் பின்னர் தான், இனவாதிகளைக் கண்டிப்பதாக, ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தார். ஆனால், அவரது அறிவிப்பு, மிகவும் தாமதப்படுத்தப்பட்ட ஒன்று என்றே, விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.  

இந்த நிலையில் தான், வெள்ளையின ஆதிக்கவாதிகளைக் கண்டிப்பதில், ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு ஏன் இத்தனை தயக்கம் என்ற கேள்வி எழுகிறது. இதைப் புரிந்துகொள்வதற்கு, இலங்கையின் உதாரணத்தையும் எதிர்கொள்ள முடியும். இலங்கையின் அண்மைக்கால அரசாங்கங்கள், பெரும்பான்மையினத்தவர்களால் மேற்கொள்ளப்படும் இனவாதச் செயற்பாடுகளைக் கண்டிப்பதற்கு, தயக்கம் காட்டியே வந்திருக்கின்றன. அவ்வாறு கண்டனத்தை வெளியிட்டால், தமது வாக்கு வங்கி பாதிக்கப்பட்டு விடுமோ என்பது, அவர்களின் அச்சமாக இருக்கிறது.  

அதேபோல் தான், ஜனாதிபதி ட்ரம்ப்பின் பிரதான வாக்கு வங்கியாக, வெள்ளையின மக்கள் காணப்படுகின்றனர். அவரது ஆதரவாளர்களில் சுமார் 40 சதவீதத்தினர், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, கென்யாவில் பிறந்தவர் என்று நம்புகின்றனர் என, தேர்தலுக்கு முன்னைய ஆராய்ச்சியொன்று வெளிப்படுத்தியிருந்தது. ஆகவே, கடும்போக்கான கொள்கைகளைக் கொண்ட தனது ஆதரவாளர்களை இழந்துவிடக்கூடாது என்பதில், ஜனாதிபதி ட்ரம்ப், கவனமாக இருந்திருந்தார்.  

இவ்வாறு, தனது வாக்கு வங்கிக்குப் பயந்துகொண்டு, இனவாதத்தைத் தட்டிக்கேட்க விரும்பாத ஜனாதிபதியொருவர் ஆட்சியில் இருக்கும் போது, ஐ.அமெரிக்காவில் வெள்ளையின ஆதிக்கத்தை விரும்புவோரின் ஆதிக்கமும் செயற்பாடுகளும் அதிகரிக்குமென்ற அச்சம் காணப்படுகிறது.

குறிப்பாக, ஜனாதிபதி ட்ரம்ப்பின் பிரதான உத்தியாளரான ஸ்டீவன் பனன், கடும்போக்கு வலதுசாரியாகக் கருதப்படுகிறார். அவரது பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவராகக் காணப்படும் செபஸ்டியன் கோர்கா, அதே மாதிரியான போக்கைக் கொண்டவர்.

ஜனாதிபதியின் முக்கியமான உதவியாளர்களில் ஒருவராகக் கருதப்படும் ஸ்டீவன் மில்லர், இவ்வாறான கருத்துகளைக் கொண்டவராக இருக்கிறார். இவர்களையெல்லாம் அருகில் வைத்துக் கொண்டு, வெள்ளையின இனவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, ஜனாதிபதி ட்ரம்ப்பே விரும்பினாலும் கூட, எதையாவது செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது.  

எனவே தான், காலங்காலமாகக் காணப்படுகின்ற வெள்ளையின ஆதிக்கம் என்பது, வெள்ளையின இனவாதமாக, சாதாரண மட்டத்தில் மாறுகின்ற ஆபத்து, ஜனாதிபதி ட்ரம்ப்பின் நிர்வாகத்தின் கீழ் ஏற்பட்டிருக்கிறது என்பது தான், இதில் சொல்ல வேண்டிய ஒன்றாக இருக்கிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .