2024 மே 09, வியாழக்கிழமை

சம்பூரில் சூரியக்கல மின்நிலையம்; இந்திய, ஜப்பானியத் திட்டங்கள் நிராகரிப்பு

Kogilavani   / 2017 ஜூன் 28 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்துன் ஏ. ஜயசேகர

இந்திய, ஜப்பானிய நிதியுதவிடன் கூடிய, திரவப் பெற்றோலிய வாயு மின் நிலையங்களை சம்பூரில் அமைக்கும் முன்மொழிவைத் தொடர்ந்து கொண்டு செல்வதற்கு எதிராக, அரசாங்கம் முடிவு எடுத்துள்ளது என, மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, நேற்றுத் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்துக்குப் பதிலாக, 50 மெகாவொட் சக்தியுடையை, சூரியக்கல மின்நிலையம், அங்கு நிர்மாணிக்கப்படுமென, அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இந்திய முதலீட்டுடன், 500 மெகாவொட் சக்தியுடைய நிலக்கரி மின்நிலையமொன்றை சம்பூரில் அமைக்கும் ஒப்பந்தம், ஓகஸ்ட் 2011இல் கைச்சாத்திடப்பட்டதோடு, நிர்மாண ஒப்பந்தம், ஒக்டோபர் 2013இல் பூரணப்படுத்தப்பட்டது. அதன்படி, இலங்கை மின்சார சபையும் இந்தியாவின் நச்சுரல் தேர்மல் பவர் கோர்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்த, கூட்டு அமைப்பாக இது அமையுமென முடிவெடுக்கப்பட்டது.

ஆனால், திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நிலக்கரிக்கெதிரான அமைப்புகள் ஆகியவற்றின் எதிர்ப்புப் போன்வற்றின் காரணமாக, அத்திட்டம் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, நிலக்கரி மின்நிலையத் திட்டத்தை, திரவப் பெற்றோலிய வாயு மின்நிலையமாக மாற்றுவதற்கு, இலங்கை கோரியது. இந்தியாவும் அதற்கு ஒத்துக் கொண்டது.

ஆனால், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களின் ஒன்றியம், சம்பூரில் திரவப் பெற்றோலிய வாயு மின்நிலையம் அமைப்பதற்கு எதிரான அழுத்தத்தை வழங்கியது.

இந்நிலையிலேயே, சூழலுக்கு நேயமான, பசுமை சக்திகளான சூரியக் கலம், காற்று சக்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி மின்நிலையங்களை அமைப்பதற்கு, இலங்கை மின்சார சபை, முன்னுரிமை வழங்குமென, அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, தலா 1 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சிறிய அளவிலான சூரியக்கல மின்நிலையங்கள் 60ஐ அமைப்பதற்கு, 20 முதலீட்டாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த அமைச்சர், ஓர் அலகு மின்சாரத்தை, 12.73 ரூபாய்க்கு, இலங்கை மின்சார சபை கொள்வனவு செய்யுமெனவும், இது, ஓர் அலகுக்கான சராசரி விலையின் அரைவாசி அளவானது என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X