2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’பிரதமர் யாரென்பது எமக்குத் தேவையில்லை’

Editorial   / 2018 டிசெம்பர் 13 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

 

“ஜனநாயகத்துக்காக நாங்கள், அந்த நிலைப்பாட்டை எடுப்போம். நாங்கள் அதிலிருந்து மாறப்போவதில்லை. அடுத்த அரசாங்கம் அமையுமாக இருந்தால், அதில் பிரதமர் யார் என்பது எமக்குத் தேவையில்லை” என்றுத் தெரித்த ஜே.வி.பி, யார் அந்த ஆசனத்தில் அமர்ந்தாலும், அவர்களை மாற்ற முடியாதென்றும் ஆசனத்தில் அமர்ந்த நேரம் முதல், எவ்வாறு பணத்தைத் தேடுவதென்பது தான் அவர்களின் குறிக்கோளாக இருக்குமென்றும் கூறியது.

அரசியல் கலாசாரம் மற்றும் பொருளாதார முறைமையில் மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை. இதனால், எந்த முறையில் பார்த்தாலும் அந்த ஆசனத்தில் அமர்ந்தாலும், அது தங்களுக்குத் தேவைப்படாதெனக் கூறிய ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, தாங்கள் அரசியல் நிலைப்பாடொன்றில் இருப்பதாகவும் சூழ்ச்சியைத் தோற்கடிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்து செயற்படுவதாகவும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (12), ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்குவதற்கான நம்பிக்கைப் பிரேரணை மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர்   மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், பிரதமர் ஆசனத்தில் யார் அமர்ந்தாலும் தமக்குத் தேவையில்லை என்றும் ரணில் அமர்ந்தாலும் எதுவும் நடக்கப் போவதில்லை என்றும் கூறியதோடு, இதனால், இன்றைய தினம் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை, தமக்குத் தேவைப்படாது என்பதைக் கூறிக்கொள்ள விரும்புவதாகக் கூறினார்.

“ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் நியமிப்பதற்காக நம்பிக்கை வெளியிடும் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், கடந்த ஏப்ரல் 4ஆம் திகதியன்று, பிரதமருக்கு (ரணில்) எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டது. அப்போது, கடந்த காலங்களில் அவரின் செயற்பாடுகள் தொடர்பாகத் தெளிவாக விளக்கப்படுத்தி, நாங்கள் அந்த பிரேரணையை ஆதரித்தோம்” என்றார்.

எவ்வாறாயினும், கடந்த ஏப்ரல் 4ஆம் திகதியன்று, நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்து தாங்கள் முன்வைத்த விடயங்கள், எந்த வகையிலும் குறைவடையவில்லை என்றும் அவை இன்னும் செல்லுபடியாகும் என்பதைத் தெளிவாகக் கூறிக்கொள்வதாகவும், அநுரகுமார எம்.பி கூறினார்.

அன்று தாங்கள் சுட்டிக்காட்டும் போது, அரசாங்கத்தின் இருப்பு நாடாளுமன்றத்தில் தலைகளின் எண்ணிக்கையில்  மாத்திரமில்ல, மக்களின் நம்பிக்கையிலும் தங்கியுள்ளது என்பதைக் கூறியிருந்ததாகவும் தெரிவித்த அவர், எவ்வாறாயினும், அரசாங்கத்துக்கு எதிராக வாக்கெடுப்புகள் நடத்தப்படும் போது, நாடாளுமன்றத்தில் தலைகளின் மூலமே, அரசாங்கம் தனக்கான நம்பிக்கையைக் காட்டியுள்ளதென்றும் ஆனால், மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளவில்லை என்றும், அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .