2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

புதிய அரசமைப்பினூடாக ’வடக்கு மக்களின் பிரச்சினைளுக்குத் தீர்வு’

Editorial   / 2018 டிசெம்பர் 13 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

 

புதிய அரசமைப்பில், பிரிக்கப்படாத ஒரு நாட்டுக்குள், ஒற்றையாட்சியின் கீழ், அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வைத் தாங்கள் முன்வைப்பதாகத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க, நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் கூறினார். 

“மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சியே மக்களாட்சி என்ற அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் கூற்றை, நான் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்” என்றுத் தெரிவித்த அவர், அரசமைப்பின்படி, நாம் அரசியல் பேதங்களுக்கு அப்பால் செயற்பட வேண்டும் என்றும் அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தில் மாற்றங்களைச் செய்து, சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவியதாகவும் அதனால், இன்று ஜனநாயகத்தைப் பாதுகாக்க மக்கள் முன்வர முடிந்தநிலை உள்ளதென்றும் கூறினார். 

நாடாளுமன்றத்தில் நேற்று (12), தனக்கு ஆதரவான நம்பிக்கைப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், “இந்தப் பிரேரணையை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கிய சகல உறுப்பினர்களுக்கும், எனது நன்றிகளைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட அரசியல் சூழ்ச்சியை வெற்றிகொண்ட ஒரு நகர்வாகவே, இந்தச் செயற்பாட்டையும் நான் கருதுகின்றேன்” என்றுத் தெரிவித்ததோடு, “எனது நண்பர் அநுரகுமார திசாநாயகவின் வார்த்தைகளில் கூறுவதென்றால், “ஒக்டோபர் சூழ்ச்சி” என்றே கூறவேண்டும். இதில், நாடாளுமன்றத்தைப் பாதுகாக்க நாம் அனைவரும் முன்வந்துள்ளோம்” என்றார்.

“அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க தயாராக உள்ளோம். தமிழ் மக்களுடன் கலந்துரையாடி, சகல இனத்தவரும் சகல மதத்தவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை, அரசமைப்பின் மூலமாகப் பெற்றுக்கொடுக்கும் நிலைப்பாட்டில் இருந்து, நாம் மாறவில்லை” என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கூறியதன் பிரகாரம், ஜனநாயகம் என்பது, மக்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி தான் மக்கள் ஆட்சி என்றும் ஆகவே, மக்கள் மூலமாக ஆட்சி உருவாக வேண்டுமென்றும், நாடாளுமன்றமொன்றை உருவாக்கி, அதில் பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பதே அதன் பொருளென்றும் மாறாக, ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் அல்லவென்றும் கூறிய விக்கிரமசிங்க, ஆகவே, மக்கள் ஆட்சிக் கொள்கைக்கு நாம் அனைவரும் இணைந்துள்ளோம் என்றார்.

“நாம், எப்போதும் சட்டத்தைச் சரியாகக் கையாளும் நாடு. ஆகவே, சட்டத்துக்குக் கட்டுப்பட்டு, முதன்மைச் சட்டமான அரசமைப்புக்குக் கட்டுப்பட்ட நபர்களாக நாம் செயற்பட வேண்டும். நாம் எப்போதும், அரசமைப்புக்கமையச் செயற்பட வேண்டும். எமக்கு எவ்வாறான அரசியல் கொள்கை இருந்தாலும் கூட, அதற்கு அனைவரும் கட்டுப்பட்டுச் செயற்பட வேண்டும்” என்றார்.

தாமரை மொட்டுக்கு வாக்களித்தவர்களாக இருக்கலாம். அல்லது மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வாக்களித்தவர்களாக இருக்கலாம். ஆனால், அனைவரும் கூறுவது அரசமைப்பை மீறாதுச் செயற்பட வேண்டும் என்பது மட்டுமேயாகும் என்றும் கூறிய அவர், தமது போராட்டமும்  அதுவேயாகும் என்றார். 

சபையின் 122 பேரும், சபையைப் பாதுகாக்க முன்வந்தனர் என்றும் அதற்கான இந்தப் போராட்டத்தின் வெற்றிக்காகப் போராடியுள்ளனர் என்றும் கூறிய அவர், அதேபோல், சபாநாயகர் முன்னெடுத்த நடவடிக்கைகளையும் தலைமைத்துவத்தையும், தாம் எப்போதும் மதிப்பதாகவும் கூறினார்.

யுத்தத்தின் பின்னர், இன்று நாம் தமிழ் மக்களுடன் கலந்துரையாடி, சகல இனத்தவர்களும் சகல மதத்தவர்களும் ஏற்றுகொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை, அரமைப்பின் மூலமாகப் பெற்றுக்கொடுக்கத் தாம் தயாராக உள்ளதாகவும் அந்த நிலைப்பாட்டில் இருந்து தாம் மாறப்போவதில்லை என்றும், ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .