2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மக்கள் பிரச்சினைகளை ’சர்வதேசம் தீர்க்க முடியாது’

Kogilavani   / 2017 நவம்பர் 17 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

"கொள்கைக்கான, நடைமுறைச் சாத்தியமான மக்களில் அபிலாஷைகளை வென்றெடுக்கக்கூடிய கூட்டணியுடன் சேர்ந்து பயணிக்கத் தயார்" என, ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, தெரிவித்தார்.

அரச வானொலியின் நேரடி நிகழ்ச்சியில் நேற்று (16) கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்துரைக்கையில் கூறியதாவது,

“தமிழ்க் கட்சிகளுக்குள் ஐக்கியமின்மையால் தான் பிரச்சினை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்க் கட்சிகளின் வரலாற்றில், பெரும்பான்மைப் பலத்துடன் நீண்ட காலமாக இருந்து வந்திருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் சாதிக்க முடியாததை, இனிவரும் காலங்களில் ஒற்றுமையுடன் சாதிக்க முடியும் என்று எண்ணுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

“இங்கு ஒற்றுமையென்பது, தேர்தல்காலக் கூட்டாகவே இருந்து வருகிறது. கொள்கைக்கான கூட்டுகள் இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. வாக்குகளை அபகரிக்கும் நோக்கில் கூட்டுச் சேர்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. சர்வதேசத்தைப் பூச்சாண்டி காட்டிச் சாதிக்கலாம் என நினைக்கிறார்கள். இதே சர்வதேசம், முள்ளிவாய்க்காலில் எம்மக்கள் மடியும்போது என்ன செய்தார்கள்? வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“ஆகையால், எமது பிரச்சினையை நாங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும். எனக்குப் பின்னால் மக்கள் பலம் இருந்தால், நிச்சயமாக என்னால் சாதித்துக் காட்ட முடியும். ஆகவே, ஐக்கியம் என்று கூறுவது, தேர்தல் காலத்தில் வாக்குகளை அபகரிப்பதற்கான கோஷமே தவிர, வேறொன்றும் இல்லை.

“எங்களைப் பொறுத்தவரையில், தனித்துப் போட்டியிடுவதுதான் நோக்கம். ஆனால், பொருத்தமான கூட்டு வருமாக இருந்தால், அவர்களை அணைத்துக்கொண்டு செல்வதற்கும் தயாராக இருக்கின்றோம். கூட்டு என்பது, தேர்தல்காலக் கூட்டாக இருக்க முடியாது. கொள்கைக்கான, நடைமுறைச் சாத்தியமான, மக்களில் அபிலாஷைகளை வென்றெடுக்கக்கூடிய கூட்டாக இருக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு” என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .