2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவில் இருவருக்கு கொரோனா: 15 பேர் தனிமை

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 31 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 30.10.2020 அன்று கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்ட இருவரும் பேலியகொட மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புபட்டுள்ளனர்.  ஆகையால், அவர்களுடன் நெருக்கமான தொடர்பினைப் பேணியவர்கள் என்றடிப்படையில் இதுவரையில் 15பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (31) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,


முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன்முதலாக கொரோனா தொற்றாளர்கள் இருவர் நேற்றைய தினம் இனங்காணப்பட்டுள்ளனர்.

எமது மாவட்டத்தில் மூன்று தனிமைப்படுத்தல் நிலையங்கள் இயங்கிவந்தன. அந்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் வேறு மாவட்டங்களிலிருந்து கொரோனா தொற்று உள்ளவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நபகர்கள் அ​ழைத்துவரப்பட்டு, குறித்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தி பரிசோதனைகளை மேற்கொண்டு தொற்று உறுதிசெய்யப்படுபவர்கள் வேறு மாவட்டங்களிலுள்ள சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சிலரும், கொரோனா கொத்தணிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தோம்.

அவ்வாறு அனுப்பப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளிலிருந்து, 30.10.2020 அன்று போதனா வைத்தியசாலையில் மேற்கொண்ட பரிசோதனைகளின் முடிவில் எமது மாவட்டத்திலும் அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது.

எனினும் முற்கூட்டியே அவர்களுக்குக் கொரோனாத் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரியின் தலைமையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள்.

இவ்வாறு இனங்காணப்பட்டவர்கள் கடந்த 19.10.2020 ஆம் திகதியிலும் 21.10.2020 ஆம் திகதியிலும் பேலியகொடவிலுள்ள மீன் சந்தைக்கு சென்றுவந்தவர்களாவர்.

இந்நிலையில் ,அவர்கள் கடந்த 21ஆம் திகதி அன்று திரும்புகின்றபோது கொரோனா கொத்தணி  பேலியகொடவில் இருப்பதனை நாம் இனங்கண்டு அவர்கள் இங்கு வரும் முன்னரே அந்த செய்தியை நாம் அறிந்து, முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் இணைந்து அவர்கள் வருகைதரும்போதே நேரடியாக அவர்களைத் தனிமைப்படுத்தும் இடத்திற்குக் கொண்டுசென்றிருந்தனர்.

அவ்வாறு கொண்டுசென்றவர்களில், வாகனச் சாரதிக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

அதே சந்தர்ப்பத்தில் அதற்கு முன்னதாக கடந்த 19ஆம் திகதி சென்ற வாகனத்தில் அவருடைய உதவியாளராகச் சென்ற 25வயது நிரம்பிய ஒரு நபருக்கும் கொரோனாத் தொற்று இருந்ததாக அறியப்பட்டது.

இதேவேளை அடுத்ததடவை வாகனத்தின் உதவியாளராகச் சென்ற அவரின் தந்தைக்கு இன்னமும் கொரோனத்தொற்று அறியப்படவில்லை. அவருக்குக் கொரோனாத்தொற்று இல்லை என்றே கூறப்பட்டது. எனினும் அவருக்கு மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளவேண்டிய தேவை உள்ளது.

இதேவேளை இவருடன் தொடர்புடைய இவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இருவர் தற்போது கொரோனாத் தொற்று சந்தேகத்தின்பேரில் தனிமைப்படுத்தியுள்ளோம். அவர்களுக்குரிய பி.சி.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.

மேலும் இவ்வாறு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதும் அவர்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்புபட்டவர்கள் என்ற அடிப்படையில் இதுவரை 15பேரைத் தனிமைப்படுத்தியுள்ளோம்.

குறிப்பாக இவ்வாறு கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்படுப்போது, தொற்றாளர்களுடன் தொடர்புடைய பிரதேசத்தினையோ, அல்லது கிராம அலுவலர் பிரிவையோ முற்றாக முடக்குவது வழமை. ஆனால் எமது மாவட்டத்தில் அத்தகைய இறுக்கமான செயற்பாட்டினைச் செய்யவில்லை.

ஏன்எனில் இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் இருவரையும், நாம் ஏற்கனவே பத்து நாட்களுக்கு முன்பாகவே, அவர்களுக்கு தொற்று இருக்கலாம் என்ற அடிப்படையில் சுயதனிமைப்படுத்தலில் ஒருவரையும், மற்றவரை சமாசத்திலும் தனிமைப்படுத்தி வைத்திருந்தோம்.

ஆகவே இவர்களிடமிருந்து ஏனையோருக்கு தொற்று பரவியிருக்கக்கூடிய வாய்ப்புக் குறைவாக உள்ளது.

எனினும் 25வயதையுடைய தொற்றாளருடன் அவருடைய சகோதரி பத்து நாட்களுக்கு முன்னர றெருங்கிப் பழகியிருந்ததனால் அவருக்கு சில வேளைகளில் கொரோனாத் தொற்று இருந்தால் அவருடன் தொடர்புடைவர்களுக்கும் தொற்று பரவலாம் என்ற அடிப்படயில் அவருக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

குறிப்பாக அவருடைய சகோதரி ஆடைத் தொழிலகம் ஒன்றில் பணிபுரிவதால், அவருடன் தொடர்புடைய அந்த ஆடைத் தொழிலகத்தில் பணிபுரியும் நபர்களையும் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளோம். அவர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள இருக்கின்றோம் - என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .