2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நிர்ணய சபைக்கு சமர்ப்பிப்பு

Editorial   / 2017 செப்டெம்பர் 22 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசமைப்பொன்றுக்கான யோசனைகளை முன்வைப்பதன் நிமித்தம் நியமிக்கப்பட்டுள்ள வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை, அரசமைப்பு நிர்ணய சபைக்கு, நேற்று (21) சமர்ப்பிக்கப்பட்டது.

சபை, நேற்றுக்காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை கூடியது. அரசமைப்பு நிர்ணய சபை அமர்வின் போதே இந்த இடைக்கால அறிக்கை முன்வைக்கப்பட்டது. 

வழிநடத்தல் குழுவின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அக்குழுவின் இடைக்கால அறிக்கையை, அரசமைப்பு நிர்ணய சபைக்குச் சமர்ப்பித்தார்.  

அரசமைப்பைத் தயாரிப்பதற்காக, முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டதுடன், இதற்காக, பிரதமர் தலைமையில் வழிநடத்தல் குழுவொன்று அமைக்கப்பட்டது.  

இந்தக் குழு, 30க்கும் மேற்பட்ட தடவைகள் கூடி, அரசமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் பற்றி ஆராய்ந்திருந்தது. 

வழிநடத்தல் குழுவால் நியமிக்கப்பட்ட ஆறு உப-குழுக்களின் அறிக்கைகளில் காணப்பட்ட விடயங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு, இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் சமர்ப்பிக்கப்பட்ட, புதிய அரசமைப்பை உருவாக்குவது தொடர்பில் அமைக்கப்பட்ட அரசமைப்புச் சபையால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையானது, 12 உப-தலைப்புகளை ​கொண்டுள்ளது.  

அவையில் அறிக்கையைச் சமர்ப்பித்து உரையாற்றிய பிரதமர், இலங்கை ஒரே அரசின் கீழ் செயற்படும் என்பதே அதன் முதலாவது வசனமாக அமைந்துள்ளதெனத் தெரிவித்தார்.  

அதுபோன்று, அதிகாரப் பரவலாக்கம் தொடர்பிலான யோசனைகளும் அதில் உள்ளடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். 

கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, இந்த இடைக்கால அறிக்கையை எதிர்வரும் மாதம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதாக அவர் இதன்போது தெரிவித்தார்.  

புதிய அரசமைப்புத் தொடர்பில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள், யோசனைகளே அன்றி, இவை சட்டங்கள் அல்ல எனத் தெரிவித்த பிரதமர், பொதுமக்களின் அபிப்பிராயத்தின் பின்னரே அவை இறுதி வடிவம் பெறும் எனக் குறிப்பிட்டார். 

இவ்விடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் தொடர்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற இரு பிரதான கட்சிகள் தங்களது சம்மதத்தை தெரிவிக்கும் நிலையில், தானும் அதனை அனுமதிப்பதாக, பிரதமர் இதன்போது தெரிவித்தார். 

பிரித்துக் கூறு போட முடியாத ஒரே இலங்கையை அங்கிகரிப்பதற்கு அனைத்து சமூகத்தினரும் தயாராக இருக்கின்றனர் எனவும், இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம் எனவும் தெரிவித்த பிரதமர், பிரிவினைகள் காணப்பட்டிருந்த இந்நாட்டில் பொதுவான ஒரு கொள்கையை ஏற்படுத்தும் பொருட்டு அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். 

“இவ்வாறான அரிய சந்தர்ப்பம், எமது கைகளிலிருந்து நழுவிச் செல்வதற்கு இடமளிக்கக் கூடாது” எனவும் அவர் தெரிவித்தார். 

 பல்வேறு தேவைகளை, மிக வினைத்திறன் மிக்க வகையில் நிறைவேற்றும் பொருட்டு, அதற்கு அவசியமான அதிகாரத்தை பிரிப்பதற்கான அடிப்படை கொள்கைகள், மாகாண சபை முதலமைச்சர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .