2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘சகலரும் ஏற்கும் தீர்வு அவசியம்’

Editorial   / 2018 டிசெம்பர் 02 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், ஹஸ்பர் ஏ ஹலீம், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், எப்.முபாரக் 

நாட்டில் குழப்பமான அரசியல் சூழ்நிலை நிலவுகின்ற இத்தருவாயில், வவுணதீவில் பொலிஸார் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் எனச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இத்தகைய படுகொலை ஆயுதக் கலாசாரத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாதென்றார்.

காத்தான்குடி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு, சாதனையாளர்கள் கௌரவிப்பு ஆகிய நிகழ்வுகள், கல்லூரி அதிபர் எஸ்.எச். பிர்தௌஸ் தலைமையில், காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் நேற்று (01) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், வடக்கு, கிழக்கு இனப் பிரச்சினைக்கு ஆயுதக் கலாசாரத்தால் எந்தத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை எனவும் அதனால் மீண்டும் இனங்களுக்கிடையில் மோதல் நிலையும், யுத்த சூழ்நிலையுமே ஏற்படுமென்றும் தெரிவித்தார்.

யுத்தம் நிறைவடைந்து 9 வருடங்களுக்குப் பின்னர், மட்டக்களப்பு  மாவட்டத்தில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட மோசமான சம்பவமாக வவுணதீவு சம்பவத்தைப் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், பொலிஸாரைப் படுகொலை செய்து விட்டு, அவர்களது ஆயுதங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளமையானது, ஒரு குழுவினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இராணுவ, பொலிஸ் புலனாய்வு அறிக்கைகள் தெரிவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.  

இவ்விடயம் சம்பந்தமாக மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (30) கூடி ஆராய்ந்தாகவும் தெரிவித்த ஹிஸ்புல்லாஹ் எம்.பி, நாட்டில் குழப்பமான அரசியல் சூழ்நிலையில் தாம் இருப்பதாகவும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் வட, கிழக்கு இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்றும் அவ்வாறான தீர்வொன்றை மிக விரைவில்  முன்வைத்து, அத்தீர்வு சகல இன மக்களினதும் ஒத்துழைப்போடு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி மிகவும் கவனமாக உள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .