2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அமைச்சர்களின் விடுப்பை வலியுறுத்தப் போவதில்லை: சி.வி

Editorial   / 2017 ஜூன் 19 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண சபையின் விசாரணை அறிக்கையில், குற்றம் நிரூபிக்கப்படாத 2 அமைச்சர்களும், விசாரணைக் காலம் முடியும் வரையில் விடுப்பில் செல்ல வேண்டுமென்ற தனது நிபந்தனையை, தொடர்ந்தும் முன்வைக்கப் போவதில்லை என, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், மதத் தலைவர்கள் ஆகியோர், விசாரணைகளில் அமைச்சர்கள் தலையிடக்கூடாது என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பின்னணியிலேயே, இந்த முடிவை எடுப்பதாகவும், முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், முதலமைச்சருக்கு வழங்கிய பதில் கடிதத்தில் கூறப்பட்ட விடயங்களுக்குப் பதிலளிக்குமுகமாக, முதலமைச்சர் இன்று அனுப்பியுள்ள கடிதத்திலேயே, இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இரண்டு அமைச்சர்களும், தங்களது சம்பளத்தைப் பெறுவதற்கு உரித்துடையவர்கள் எனவும் அவர்களது உத்தியோகபூர்வ வாகனங்களைத் தொடர்ந்தும் பயன்படுத்தலாம் எனவும், முதலமைச்சர் குறிப்பிட்டார்.

ஆனால், விசாரணைக் குழு, தனது விசாரணைகளை மேற்கொள்ளும் வரையில், சாட்சிகளைப் பாதுகாப்பதற்காகவே, அவர்கள் விடுப்பில் செல்ல வேண்டுமென அறிவிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், குறித்த 2 அமைச்சர்கள் மீது, புதிய குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .