2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பம்?

Editorial   / 2018 ஒக்டோபர் 17 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

காணாமலாக்கப்பட்ட சம்பவங்களோடு தொடர்புபட்டனர் எனச் சந்தேகிக்கப்படும் இராணுவ, பொலிஸ் அதிகாரிகளை, குறித்த வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை, சேவைகளிலிருந்து அவர்களை இடைநிறுத்தி வைக்க வேண்டுமெனப் பரிந்துரைத்துள்ளதாக, அவ்வலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நேற்று (16) தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடனான சந்திப்பொன்று, காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரிகளுடன், கொழும்பில் உள்ள லக்‌ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்துள்ளது என்பது தொடர்பிலான விசாரணைகளை, தமது அலுவலகம் விரைவில் ஆரம்பிக்க உள்ளதென, அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூருவதற்கு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உரிமை இருப்பதாகவும், தமது அலுவலகம் சார்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குப் பரிந்துரைகளை முன்வைத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் எந்தவொரு பகுதியிலும் மனிதப் புதைகுழிகள் கண்டுப்பிடிக்கப்பட்டால், அதில் மீட்கப்படும் மனித சடலங்களுக்கும் காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணைகளை, காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் மேற்கொள்ளும் என்றார்.

மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்படும் எலும்புக்கூடுகள் யாருடையவை, இவர்களது இறப்புக்குக் காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரையில் கண்டுபிடிக்கவில்லை எனவும் தெரிவித்த அவர், மன்னார் மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டு வரும் குழுவினருக்குத் தேவையான வசதிகளை, தமது அலுவலகம் ஏற்படுத்திக் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டிருப்பதை, அரசாங்கமும், அரசாங்கத்தின் எதிர்த் தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு செயற்பாட்டிலும், வடக்கில் உள்ளவர்கள் நம்பிக்கையற்றிருப்பதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

நாடளாவிய ரீதியில் காணாமற்போனோர் தொடர்பான அலுவலகங்கள் விரைவில் ஸ்தாபிக்கப்பட உள்ளதோடு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளவும், தேவைப்பட்டால் நீதியைப் பெற்றுக்கொள்ளும் உரிமை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருந்தால், அவர்களை மரபணுப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மூலம் கண்டறிவதற்கான முயற்சிகளை தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .