2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நூரளையில் நோயாளர்களுக்குக் கண்ணில் பாதிப்பு; விசாரணைக்குப் பணிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 25 , மு.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

நுவரெலியா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற நோயாளர்களுக்கு, பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளதெனத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்கவுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் 73 ஆவது பொதுச் சபை மாநாடு உள்ளிட்ட அரச வைபவங்கள் பலவற்றில் கலந்துகொள்வதற்காக, ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்குச் சென்றுள்ள அமைச்சர் ராஜித, நுவரெலியா வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் அறிந்துகொண்டதன் பின்னர், அவசர அலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

நுவரெலியா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக, கடந்த 17 ஆம் திகதி வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்களுக்குச் சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர், அவர்களுள் 23 பேர் பார்வை இழந்ததைத் தொடர்ந்து, அவர்கள் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குச் செலுத்தப்பட்ட ஊசியாலே, பார்வை இழப்பு ஏற்பட்டது எனக் கூறப்படுகிறது.

பார்வைக் குறைபாட்டுக்கு, நீரிழிவு நோய், உயர்குருதி அழுத்தம் உள்ளிட்ட நோய்களும் மிக முக்கிய காரணம் என்பதால், பார்வைக் குறைபாடுகளுக்காக வரும் நோயாளிகளுக்கு, பார்வைக் குறைபாட்டுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பாக, நீரிழிவு நோய், உயர்குருதி அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கே முதலில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கமைவாகவே, மேற்படி நோயாளர்களுக்கும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஊசி ஏற்றப்பட்டுள்ளது. இந்த ஊசியை ஏற்றியதன் பின்னர், மேற்படி 23 பேரும் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

வீடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட மேற்படி நோயாளர்கள், பார்வையை முற்றாக இழந்துள்ளதுடன், அவர்களது கண்களிலிருந்து கண்ணீர் வடிய ஆரம்பித்துள்ளது. அதன் பின்னர் மேற்படி அனைவரும், உறவினர்களுடன் உதவியுடன் மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, வைத்தியசாலை நிர்வாகம் மேற்படி 23 பேரையும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், வைத்தியர்களின் நேரடிக் கண்காணிப்பில், கடந்த ஒரு வாரமாக, தொடர் சிகிச்சை அளித்து வருகிறது.

இதனால், இவர்களது கண்பார்வை, ஓரளவுக்குத் திரும்பியுள்ளதென, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அநுர ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக சிகிச்சைகள் உரிய முறையில் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், இது தொடர்பில் சுகாதார அமைச்சால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்தார். அத்தோடு, குறித்த ஊசியை, ஏனைய நோயாளர்களுக்கும் செலுத்துவது, இடைநிறுத்தப்பட்டுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், இவ்வாறான சம்பவங்கள், ஏனைய வைத்தியசாலைகளில் பதிவாகவில்லை என்று, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எனினும், ஊசி ஏற்றப்பட்டதால் ஏற்பட்டுள்ள பாரதூரமான நிலையைக் கருத்திற் கொண்டு, நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில், மேற்படி ஊசி வகைகளைத் தற்போதைக்குப் பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதென, சுகாதார அமைச்சின் வைத்தியர்கள் பிரிவின் பணிப்பாளர் லால் பனாபிடிய தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .