2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மஹிந்தவின் கயிற்றை தின்றுவிட்டனராம்

A.Kanagaraj   / 2018 பெப்ரவரி 23 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகிய இருவரும், நாடாளுமன்றத்தில் புதன்கிழமை, விடுத்த விசேட அறிவிப்புகளை அடுத்து, ​அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, பெற்றிருந்த வெற்றியை, மக்களின் மனதிலிருந்து இல்லாமற் செய்வதற்கான, நாடகமாகவே, நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை பலரும் விமர்சித்தனர். எனினும், அது அமைச்சரவையில் மாற்றங்களை கொண்டுவருமளவுக்கு வ​ழிசமைத்துவிட்டன என்றும் கூறப்படுகின்றது.

தேர்தல் பெறுபேறுகளின் ஒரு கட்டமாக, பிரதமர் ரணிலும் அரசாங்கமும் பதவிவிலகி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கமொன்றை நிறுவி, பிரதமராக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவை நியமிக்கவேண்டுமென்ற யோ​சனையும் முன்வைக்கப்பட்டது. அதற்காக, அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, தயாசிறி ஜயசேகர, டிலான் பெரேரா மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் திலங்க சுமத்திபால ஆகியோர் தீவிரமாக செயற்பாட்டனர்.

இவ்வாறான நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு பகிரங்கமாக அறிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய அரசாங்கமொன்று அமைக்கப்படுமாயின், பதவிகளை பொறுப்பேற்காது, அந்த புதிய அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு நல்குவேன் என, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கும், மொட்டுச்சின்னத்திலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் உறுதியளித்தார்.

இதனால், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களால் முன்னெடுக்கப்பட்ட பிரதமரை மாற்றும் நாடகம், அரங்கேற்றப்படாம​ல் இடைநடுவிலேயே நின்றுவிட்டது. அதில், பிரதான பங்குதாரர்களாக, இருந்த அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகிய இருவரும் கடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குகூட போகமுடியாத நிலைமையொன்று ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில், மஹிந்த ராஜபக்ஷ இரண்டு பக்க நாடகத்துக்கான திட்டத்தை வகுத்திருந்தார். அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, பிரதமர் பதவியை ரணிலிடமிருந்து அபகரிக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் ​சேர்ந்த சிலருக்கு, அவரே ஆலோசனை வழங்கியிருந்ததாக அறியமுடிகின்றது.

என்றாலும், பிரதமர் ரணிலுக்கு அழைப்பை எடுத்த மஹிந்த ராஜபக்ஷ, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பின்னடைந்தமைக்காக, பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டிய தேவையில்லையென, ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இரண்டு கயிறுகளை மஹிந்த ராஜபக்ஷ கொடுத்துள்ளார். அந்த கயிறு இத்தக்கயிறு என்று தெரிந்துகொள்ளாமல், ​அமைச்சர்களான  சுசில் பிரேமஜயந்த மற்றும் தயாசிறி ஜயசேகர, ஆகிய இருவரும், ரணிலிடமிருந்து  பிரதமர் பதவியை அபகரிப்பதற்கான, நாடகத்தில் பிரதான பாத்திரங்களை ஏற்று, இருதியில் மூக்குடைப்பட்டுள்ளனர் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான நாடகத்துக்கு மத்தியிலேயே ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் பல சுற்றுப்பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அதில், அமைச்சரவையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தவேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

அந்த தீர்மானித்தின் பின்னர், பிரதமர் ரணிலை பதவியிலிருந்து நீக்கிவிடும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் தங்களுடைய அமைச்சுப் பதவிகளை தக்கவைத்து கொள்வதற்கான, முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பிரபல அமைச்சர்கள் தங்களுடைய அமைச்சுப் பதவிகளை பாதுகாப்பதில் குறியாகவிருக்கின்றனர். இராஜாங்க அமைச்சர்களில் சிலர், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும், பிரதியமைச்சர்களில் பலர், இராஜாங்க அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்வதற்காக பிரயத்தனத்தில் ஈடுபட்டனர். அதுவே ஒரு குளிர்கால யுத்தமாக மாறிவிட்டது.

அந்த குளிர்கால யுத்தத்துக்கு மத்தியிலேயே, அலரிமாளிகையில் வியாழக்கிழமைகளில் நடைபெறும், வழமையான சந்திப்புகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டுள்ளார்.

“ ​பெரிய பிரச்சினை​யொன்று முடிந்துவிட்டது. அமைச்சரவைப் பிரச்சினையையும் மிகவிரைவாக, தீர்த்துக்கொள்ளவேண்டும். இந்தப் பிரச்சினையை, இழுத்துக்கொண்டு போகவிடக்கூடாது” என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

“மிக விரைவில், தீர்வு கண்டுவிடுவேன். அமைச்சரவை மாற்றத்தின் போது, விடுக்கப்பட்டிருக்கும் கோரிக்கை அதிகமாகும். சிரேஷ்ட உறுப்பினர்களை பாதுகாக்கவேண்டும். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இல்லாத, மாவட்டங்கள் தொடர்பிலும் சிந்திக்கவேண்டும். இரண்டு அல்லது மூவரையே, மேலே தூக்கிவிடுவதற்கு இடமிருக்கிறது. சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும், இறுதி பட்டியலை தயாரித்து, அதன்பிரகாரம் விரைவாக முடிவெடுக்கப்படும்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

“ஐயோ சேர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை, அரசாங்கத்தில் மிகவும் குறைவு என்பதனால் பிரச்சினைகளை ஏற்படுத்திகொள்ளவேண்டிய தேவையில்லை. சு.க சார்பில் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு புதிய முகங்கள் இல்லவே, இல்லை” என அமைச்சர் வஜிர அ​பேவர்தன தெரிவித்துள்ளார்.

குறுகிக்கிட்ட, ஐ.தே.கவின் பதுளை மாவட்ட எம்.பியான ஷமிந்த வி​ஜேசிறி, “ஐ.ம.சு.மு அரசாங்கத்தை அமைத்து, பிரதமரை மாற்றுவதற்கு முயன்ற, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு, அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, ஐ.தே.கவினர் கடுமையான எதிர்ப்பை ​வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.

“அவ்வாறானவர்கள் வைத்துக்கொண்டு, இனிமேலும் எப்படி அரசாங்கத்தை கொண்டுச்செல்வது. அரசாங்கம் மற்றும் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டுமென கூறியவர்களின் செயற்பாடு ஒழுக்கமற்ற செயற்பாடாகும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது அவ்விடத்திலிருந்த, அமைச்சர் கயந்த கருணாதிலக்க, “பிரதமரை மாற்றுவதற்கு முடியுமா? என்பது தொடர்பில் உயர்நீமன்றத்தின் வியாக்கியானத்தை பெற்றுக்கொள்வதற்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் முயற்சித்தனர்” என்றார்.

“அது ஒருபுறமிருக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய பதவிக்காலம் 5 வருடங்களா அல்லது 6 வருடங்களா என்பதுதொடர்பில், உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கேட்டு, இறுதியில் பிரச்சினையில் சிக்கிக்கொண்டார். இந்நிலையில், 19ஆவது திருத்தத்தின் ஊடாக, பிரதமரை நீக்கமுடியுமா? என வியாக்கியானம் கேட்டால், அதுவும் சிக்கலில் முடிந்துவிடுமோ என்ற அச்சத்தில்தான், உயர்நீதிமன்றத்தை அவர்கள் நாடவில்லையென, அங்கிருந்த ஐ.தே.கவின் சட்ட ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கருத்துரைத்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல,  “உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், மக்கள் நல்ல பாடம்புகட்டியுள்ளனர். ஆகையால், எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில், நாட்டை கட்டி​யெழுப்புவதுடன், மக்களின் மனதை வெல்லும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும். குறிப்பாக, வாழ்க்கைச் செலவை குறைக்கும் திட்டங்களை முன்னெடுக்க​ வேண்டும்” என்றார்.

​அந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்திலிருந்த அமைச்சர் நவீன் திஸாநாயக்க, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில், ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் குறைவாகும். அரசாங்கத்துக்கு எதிரான செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஆகையால், அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்” என்றார்.

அவருடைய கருத்துக்கும், ஆலோசனைகளுக்கும் அங்கிருந்தவர்கள் ஆமோதித்தனர். அதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவேண்டுமென, பிரதமரும் தெரிவித்ததையடுத்து, அந்த கலந்துரையாடல் நிறைவடைந்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .