2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

2ஆவது டெஸ்ட் நாளை: இந்தியாவின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா அவுஸ்திரேலியா?

Editorial   / 2018 டிசெம்பர் 13 , பி.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பேர்த்தில், இலங்கை நேரப்படி நாளை காலை 7.50க்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், தொடரின் முதலாவது போட்டியை வென்று எழுச்சி கொண்டுள்ள இந்தியாவை எவ்வாறு அவுஸ்திரேலியா தடுத்து நிறுத்தப் போகின்றதென்ற கேள்வி காணப்படுகின்றது.

இந்நிலையில், இந்திய அணியின் இரவிச்சந்திரன் அஷ்வின், ரோகித் ஷர்மா ஆகியோர் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்டில் விளையாட மாட்டார்கள் என்ற செய்தி சிறிதளவு ஊக்கத்தை அவுஸ்திரேலியாவுக்கு அளித்திருந்தாலும் இச்செய்தி குறிப்பிடத்தக்களவான சாதகத்தை அவுஸ்திரேலியாவுக்கு வழங்காது.

ஏனெனில், இந்தப் புதிய பேர்த் மைதான ஆடுகளத்தில், இரண்டு அணிகளுக்குமிடையே இடம்பெற்ற இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியை வைத்துப் பார்க்கும்பொழுது உயரமான அஷ்வினால் பெற்றுக் கொள்ளக்கூடிய பவுண்ஸ் ஒன்றை மாத்திரமே அவரை நேரடியாக பிரதியீடு செய்வார் என எதிர்பார்க்கப்படும் இரவீந்திர ஜடேஜா பெற்றுக் கொள்வது குறைவாக இருக்கும்.

மறுபக்கமாக, அஷ்வினை விட டெஸ்ட் போட்டிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் சபையின் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முன்னிலையில் காணப்படும் ஜடேஜா, களத்தடுப்பிலும் மிகச் சிறப்பாக விளங்குவதால் அது இந்திய அணிக்கு சாதகமானதாகவே காணப்படும்.

இதுதவிர, ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாகக் காணப்படுமென எதிர்பார்க்கப்படுவதால், அஷ்வினுக்குப் பதிலாக நான்காவது வேகப்பந்துவீச்சாளராக புவ்னேஷ்வர் குமாரை களமிறக்கும் தெரிவொன்றும் இந்திய அணித்தலைவர் விராத் கோலிக்கு காணப்படுகின்றது.

அடுத்து, ரோகித் ஷர்மாவுக்கு பதிலாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் ஹனும விஹாரி, தான் விளையாடிய டெஸ்டில் அரைச்சதமொன்றைப் பெற்றதுடன் தனது சுழற்பந்துவீச்சால் விக்கெட்டுகளையும் கைப்பற்றிய நிலையில், நான்காவது வேகப்பந்துவீச்சாளர்களுடன் விளையாடும் முடிவை எடுத்தால் இந்தியாவுக்கு உபயோகமானவராகவே காணப்படுகின்றார்.

அந்தவகையில், இவர்கள் இருவரும் விளையாடமல் போவது இந்தியாவுக்கு பெருமளவு தாக்கத்தை வழங்காதென்ற நிலையில், வேகமான, பவுண்ஸை வழங்கக்கூடிய ஆடுகளமாக இருக்கக்கூடுமென எதிர்பார்க்கப்படும் குறித்த ஆடுகளத்தில் அவுஸ்திரேலியாவின் மிற்செல் ஸ்டார்க்கின் பெறுபேற்றிலேயே அவ்வணியின் வெற்றிவாய்ப்பு தங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அது தவிர, முதலாவது டெஸ்டில் போராட்டத்தை வெளிப்படுத்திய ஷோன் மார்ஷ், ட்ரெவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா ஆகியோரிடமிருந்தும் சதங்களை அவுஸ்திரேலியா எதிர்பார்க்கின்றது.

மறுபக்கமாக, முதலாவது டெஸ்டில் நோபோல்கள் காரணமாக இரண்டு விக்கெட்டுகளை இஷாந்த் ஷர்மா இழந்திருந்ததோடு, அவரின் பல நோபோல்கள் நடுவர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை என காணொளிகளில் வெளிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர் இப்போட்டியில் நிச்சயம் மிகுந்த கவனம் பெறுவார். ஒவ்வொருமுறை அவர் பந்துவீசவரும்போது அவர் தனது காலை எங்கு வைக்கிறார் என்பது பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கப்படுவது நிச்சயம்.

இதேவேளை, கோலியின் குறிப்பிடத்தக்க பெரிய ஓட்ட எண்ணிக்கை இல்லாமல் முதலாவது டெஸ்டில் இந்தியா வென்றமை நல்ல அறிகுறியாக இருக்கின்றபோதும் அவர் தனது டெஸ்ட் போட்டிகளில் முதல்நிலைத் துடுப்பாட்டவீரர் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்வதற்கு அவர் இப்போட்டியில் பிரகாசிக்க வேண்டியிருக்கின்றது. இதுதவிர, உபஅணித்தலைவர் அஜின்கியா ரஹானேயிடமிருந்து சதத்தை இந்திய அணி எதிர்பார்க்கின்றது.

இந்நிலையில், காயமடைந்துள்ள இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பிறித்திவி ஷா இப்போட்டியில் விளையாடுவதற்கான உடற்றகுதியைப் பெறாதபோதும் அடுத்த போட்டியில் விளையாடுவதற்கான உடற்றகுதியைப் பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், ஓட்டங்களைப் பெற்று தமது இடங்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அழுத்தத்தில் இந்திய அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் லோகேஷ் ராகுல், முரளி விஜய் ஆகியோர் காணப்படுகின்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .