2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அத்லெட்டிகோவை வீழ்த்தியது றியல்

Editorial   / 2019 பெப்ரவரி 10 , பி.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், தமது வைரிக் கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் அணியின் மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் அவ்வணியை றியல் மட்ரிட் தோற்கடித்தது.

இப்போட்டியின் 16ஆவது நிமிடத்தில், றியல் மட்ரிட்டின் மத்திய கழக வீரர் கஸேமீரோ, எம்பி தலைக்கு மேலால் அபாரமாகப் பெற்ற கோல் காரணமாக அவ்வணி முன்னிலை பெற்றது. எவ்வாறாயினும், சக முன்கள வீரர் ஏஞ்சல் கொரேராவிடமிருந்து பெற்ற பந்தை அத்லெட்டிகோ மட்ரிட்டின் முன்கள வீரர் அன்டோனி கிறீஸ்மன் கோலாக்க கோலெண்ணிக்கையை அத்லெட்டிகோ மட்ரிட் சமப்படுத்தியது.

குறித்த கோல் பெறப்படுவதற்கு முன்னர், றியல் மட்ரிட்டின் முன்கள வீரர் வின்சியஸ் ஜூனியரை விதிமுறைகளை மீறி ஏஞ்சல் கொரெரா கையாண்டாரா என காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பு மூலம் பார்வையிடப்பட்டு அவ்வாறில்லை எனத் தீர்மானிக்கப்பட்டபின்னரே குறித்த கோல் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து முதற்பாதி முடிவடைய சில நிமிடங்களிருக்கையில், காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பின் இன்னொரு தலையீட்டுடன் வின்சியஸ் ஜூனியரை, அத்லெட்டிகோ மட்ரிட்டின் பின்கள வீரர் ஜொஸே கிம்மென்ஸ் விதிமுறைகளை மீறி கையாண்டார் எனத் தீர்மானிக்கப்பட்டு பெனால்டி வழங்கப்பட்ட நிலையில், அதைக் கோலாக்கிய றியல் மட்ரிட்டின் அணித்தலைவர் சேர்ஜியோ றாமோஸ் தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

பின்னர் இரண்டாவது பாதி ஆரம்பித்த சில நிமிடங்களில், அத்லெட்டிகோ மட்ரிட்டின் முன்கள வீரர் அல்வரோ மொராட்டா கோலொன்றைப் பெற்றபோதும் காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பின் மூலம் மொராட்டா ஓவ் சைட்டில் இருந்தார் எனத் தீர்மானிக்கப்பட்டு குறித்த கோல் நிராகரிக்கப்பட்டது.

இதன்பின்னர், றியல் மட்ரிட்டின் பெனால்டி பகுதிக்குள் மொராட்டா வீழ்ந்தபோது பெனால்டி வழங்குமாறான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், சக மத்தியகள வீரரான லூகா மோட்ரிச்சிடமிருந்து பெற்ற பந்தை மாற்று வீரராகக் களமிறங்கிய றியல் மட்ரிட்டின் கரெத் பேல் போட்டியின் 74ஆவது நிமிடத்தில் கோலாக்கியதோடு இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றது. குறித்த கோல், றியல் மட்ரிட்டுக்காக பேல் பெற்ற 100ஆவது கோலாகும்.

அந்தவகையில், குறித்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் லா லிகா புள்ளிகள் பட்டியலில், அத்லெட்டிகோ மட்ரிட்டை பின்தள்ளி இரண்டாமிடத்துக்கு றியல் மட்ரிட் முன்னேறியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .