2024 மே 08, புதன்கிழமை

அவுஸ்திரேலியா எதிர் நியூசிலாந்து: டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பிக்கிறது

Editorial   / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, பேர்த்தில் பகலிரவுப் போட்டியாக இலங்கை நேரப்படி நாளை காலை 10.30மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.

இத்தொடருக்கு முன்பதாக சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் இரண்டாமிடத்தில் நியூசிலாந்தும், ஐந்தாமிடத்தில் அவுஸ்திரேலியாவும் காணப்படுகின்றபோதும் இத்தொடரானது நியூசிலாந்துக்கு சவாலானதாகவே காணப்படுகின்றது.

பற் கமின்ஸ், ஜொஷ் ஹேசில்வூட், மிற்செல் ஸ்டார்க், நேதன் லையனைக் கொண்ட அச்சுறுத்தும் பந்துவீச்சு வரிசையை எவ்வாறு டொம் லேதம், கேன் வில்லியம்சன், றொஸ் டெய்லர் ஆகியோர் எதிர்கொள்கின்றார்கள் என்பதைப் பொறுத்தும், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோணரின் விக்கெட்டுகளை எவ்வளவு விரைவாக நியூசிலாந்துப் பந்துவீச்சாளர்கள் கைப்பற்றுகின்றார்கள் என்பதைப் பொறுத்துமே இத்தொடரின் போக்கு தீர்மானிக்கப்படும்.

அந்தவகையில், நியூசிலாந்தின் பிரதான ஆயுதமாகக் காணப்படும் ட்ரெண்ட் போல்ட், அண்மையிலேயே காயத்திலிருந்து குணமடைந்துள்ளமை அவ்வணிக்கு பின்னடைவாகக் காணப்படுகிறது. ஆக, ட்ரெண்ட் போல்டுக்குப் பதிலாக டிம் செளதி, நீல் வக்னருடன் லொக்கி பெர்கியூசன் களமிறக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்டவரிசைக்கு அச்சுறுத்தலை வழங்கலாம்.

தவிர, டொம் லேதம் மூலம் சிறந்த ஆரம்பத்தைப் பெற்று, அணித்தலைவர் கேன் வில்லியம்சன், றொஸ் டெய்லர், ஹென்றி நிக்கொல்ஸ் ஆகியோர் இனிங்ஸைக் கட்டியெழுப்பி பாரிய ஓட்ட எண்ணிக்கையை பெறும் பட்சத்திலேயே அவுஸ்திரேலிய துடுப்பாட்டவரிசைக்கு அழுத்தத்தை வழங்க முடியும்.

எதிர்பார்க்கப்படும் நியூசிலாந்து அணி: 1. ஜீட் றாவல், 2. டொம் லேதம், 3. கேன் வில்லியம்சன், 4. றொஸ் டெய்லர், 5. ஹென்றி நிக்கொல்ஸ், 6. பி.ஜெ. வட்லிங்க், 7. டரைல் மிற்செல், 8. மிற்செல் சான்ட்னெர், 9. டிம் செளதி, 10. நீல் வக்னர், 11. லொக்கி பெர்கியூசன்.

அவுஸ்திரேலிய அணி: 1. ஜோ பேர்ண்ஸ், 2. டேவிட் வோணர், 3. மர்னுஸ் லபுஷைன், 4. ஸ்டீவ் ஸ்மித், 5. மத்தியூ வேட், 6. ட்ரெவிஸ் ஹெட், 7. டிம் பெய்ன், 8. பற் கமின்ஸ், 9. மிற்செல் ஸ்டார்க், 10. நேதன் லையன், 11. ஜொஷ் ஹேசில்வூட்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X