2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக்: முதலாமிடத்துக்கு முன்னேறியது லிவர்பூல்

Editorial   / 2019 பெப்ரவரி 10 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதலாமிடத்துக்கு லிவர்பூல் முன்னேறியது.

தமது மைதானத்தில், நேற்று இடம்பெற்ற ஏ.எவ்.சி போர்ண்மெத் அணியுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் முதலாமிடத்துக்கு லிவர்பூல் முன்னேறியது.

இப்போட்டியின் 24ஆவது நிமிடத்தில், சக மத்தியகள வீரர் ஜேம்ஸ் மில்னரிடமிருந்து பெற்ற பந்தைக் கோலாக்கிய லிவர்பூலின் முன்கள வீரர் சாடியோ மனே தனதணிக்கு முன்னிலை வழங்கினார். அடுத்த 10ஆவது நிமிடத்தில், மத்தியகள வீரர் ஜோர்ஜினியோ விஜ்னால்டும் பெற்ற கோலோடு தமது முன்னிலையை லிவர்பூல் இரட்டிப்பாக்கியது.

முதற்பாதி முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் முன்னிலை வகித்த நிலையில், இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் சக முன்கள வீரர் றொபேர்ட்டோ பெர்மினோ வழங்கிய பந்தை லிவர்பூலின் இன்னொரு முன்கள வீரரான மொஹமட் சாலா கோலாக்கியதோடு அவ்வணி இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

அந்தவகையில், இப்போட்டியில் வென்றதுடன், கடந்த வார நடுப்பகுதியில் இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் கோலெண்ணிக்கை கணக்கில் இரண்டாமிடத்துக்கு கீழிறங்கியிருந்ததிலிருந்து மீண்டு முதலாமிடத்தை லிவர்பூல் அடைந்து கொண்டது.

இதேவேளை, புல்ஹாம் அணியின் மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற மன்செஸ்டர் யுனைட்டெட், இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் நான்காமிடத்துக்கு முன்னேறியது. இப்போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக, போல் பொக்பா இரண்டு கோல்களையும் அன்டோனி மார்ஷியல் ஒரு கோலையும் பெற்றனர்.

இந்நிலையில், ஹட்டர்ஸ்பீல்ட் அணியின் மைதானத்தில் நேற்று  நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது. ஆர்சனல் சார்பாக, அலெக்ஸ் இவோபி, அலெக்ஸான்ட்ரே லகஸ்ரே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, ஹட்டர்ஸ்பீல்ட் டெளண் அணி சார்பாகப் பெறப்பட்ட கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .