2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்துக்கெதிரான 3ஆவது டெஸ்ட் நாளை: ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை?

Editorial   / 2018 நவம்பர் 22 , பி.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதலிரண்டு போட்டிகளிலும் வென்றுள்ள இங்கிலாந்து ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நாளை காலை 10 மணிக்கு மூன்றாவது டெஸ்ட் ஆரம்பிக்கின்றது.

இந்நிலையில், குறித்த போட்டியில் எந்தமுடிவு பெறப்பட்டாலும் சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரப்படுத்தலில் மூன்றாமிடத்திலிருக்கும் இங்கிலாந்து இரண்டாமிடத்துக்கு முன்னேறும் என்பதோடு, ஆறாமிடத்திலிருக்கும் இலங்கை ஏழாமிடத்துக்கு கீழிறங்குமென்றபோதும் தமது நம்பிக்கையை வளர்த்தெடுக்கொள்வதற்கும் அழுத்தங்களைக் குறைப்பதற்கும் குறித்த போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளது.

எனினும் இலங்கையணிக்கு வருத்தமளிக்கும் செய்தியாக, காயத்திலிருந்து குணமடைந்து வரும் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் இப்போட்டியிலும் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இங்கிலாந்தின் இறுதி இனிங்ஸில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அகில தனஞ்சய தனது பந்துவீச்சுப்பாணியை சோதனைக்குட்படுத்துவதன் காரணமாக இப்போட்டியைத் தவறவிடுகின்றார்.

அந்தவகையில், இருவரினதும் இழப்பு இலங்கையணியில் உணரப்படுகின்றபோதும் சந்திமாலுக்குப் பதிலாக தனுஷ்க குணதிலகவும் அகிலவுக்குப் பதிலாக நிஷான் பிரீஸும் இலங்கைக் குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர். இதில், சந்திமாலுக்குப் பதிலாக கடந்த டெஸ்டுக்கான இலங்கைக் குழாமில் சேர்க்கப்பட்டிருந்த சரித் அசலங்க குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சந்திமாலுக்குப் பதிலாக கடந்த போட்டியில் விளையாடிய றொஷேன் சில்வாவுடன் சிரேஷ்ட வீரர்களான அஞ்சலோ மத்தியூஸ், திமுத் கருணாரத்ன ஆகியோரிலேயே இலங்கையின் துடுப்பாட்டம் தங்கியுள்ளது. இதுதவிர, கெளஷால் சில்வாவை அணியில் பிரதியீடு செய்வார் என எதிர்பார்க்கப்படும் தனுஷ்க குணதிலகவும் துடுப்பாட்டத்தில் மேலும் பலம் சேர்க்கலாம்.

பந்துவீச்சுப் பக்கம் அகிலவுக்குப் பதிலாக லக்‌ஷான் சந்தகானும் களத்தடுப்பில் கடந்த போட்டியில் சொதப்பியிருந்த மாலிந்த புஷ்பகுமாரவுக்குப் பதிலாக நிஷான் பீரிஸும் அணியில் இடம்பெறக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

மறுபக்கமாக, கடந்த போட்டியில் விளையாடிய அணியிலிருந்து இரண்டு மாற்றங்களை இங்கிலாந்து மேற்கொண்டுள்ளது. சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சனுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதுடன், அவர் இன்னொரு சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளரான ஸ்டூவர்ட் ப்ரோட்டால் பிரதியீடு செய்யப்பட்டுள்ளார். இதுதவிர, காயமடைந்துள்ள சாம் கர்ரனுக்குப் பதிலாக மூன்றாமிலக்க துடுப்பாட்ட வீரராக ஜொனி பெயார்ஸ்டோ களமிறங்கவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .