2024 மே 08, புதன்கிழமை

இறுதிப் போட்டியில் பரிஸ் ஸா ஜெர்மைன்

Editorial   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான பிரெஞ்சுக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு பரிஸ் ஸா ஜெர்மைன் அணி தகுதிபெற்றுள்ளது.

கோன் அணியின் மைதானத்தில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான அரையிறுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே பிரெஞ்சுக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இவ்வாண்டுடன் சேர்த்து தொடர்சியாக நான்காவது ஆண்டாக தகுதிபெற்றுக் கொண்டது.

இப்போட்டியின் 25ஆவது நிமிடத்தில், சக பரிஸ் ஸா ஜெர்மைன் வீரர் எடின்சன் கவானி தந்த பந்தை கிலியான் மப்பே கோலாக்க பரிஸ் ஸா ஜெர்மைன் முன்னிலை பெற்றது. தொடர்ந்த ஆட்டத்தில், முதற்பாதி முடிவடைய இரண்டு நிமிடங்கள் இருக்கையில் கோன் அணியின் இஸ்மயில் டயமன்டே பெற்ற கோலுடன் கோலெண்ணிக்கையை முதற்பாதி முடிவில் கான் அணி சமப்படுத்தியது.

இரண்டாவது பாதியில் இரண்டாவது நிமிடத்தில் எடின்சன் கவானி கோலொன்றைப் பெற்றதாகக் கருதப்பட்டபோது, அக்கோல் காணொளி உதவி மத்தியஸ்தரால் ஓவ் சைட் என நிராகரிக்கப்பட்டது. எனினும் போட்டியின் 81ஆவது நிமிடத்தில் எடின்சன் கவானி கொடுத்த பந்தை கிலியான் மப்பே கோலாக்க முன்னிலை பெற்ற பரிஸ் ஸா ஜெர்மைன், போட்டி முடிவடையும் தருணங்களில் கிறிஸ்தோபர் என்குங்கு பெற்ற கோலோடு இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

அந்தவகையில், கடந்த மூன்றாண்டுகளிலும் பிரெஞ்சுக் கிண்ணத் தொடரில் சம்பியனான பரிஸ் ஸா ஜெர்மைன், அடுத்த மாதம் எட்டாம் திகதி இடம்பெறவுள்ள இவ்வாண்டு இறுதிப் போட்டியில் லெஸ் ஹேர்பியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X