2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இலங்கையை வெல்லுமா மே. தீவுகள்?

Editorial   / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டி (ODI) தொடரானது நாளை ஆரம்பிக்கிறது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரானது கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடனேயே ஆரம்பிக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் எட்டாமிடத்தில் இலங்கையும், ஒன்பதாமிடத்தில் மேற்கிந்தியத் தீவுகளும் காணப்படுகின்ற நிலையில் ஏறத்தாழ இரண்டு அணிகளும் ஒரே நிலையில் காணப்படுவதால் இத்தொடரானது போட்டித் தன்மையாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு அணிகளிலும் திறமையாக வீரர்கள் இருக்கின்றபோதும் வீரர்கள் அனைவரிடமிருந்தும் தனித்திறமையாக பெறுபேறுகளே வெளிப்படுவதுடன் ஒத்திசைவான பெறுபேறுகளின் அரிதான தன்மையே இரண்டு அணிகளுக்கும் பிரச்சினையாக இருக்கிறது.

எவ்வாறிருப்பினும் சொந்த மண்ணில் தொடர் இடம்பெறுவதானது இலங்கைக்கு சாதகத்தை வழங்குகின்ற நிலையில், தனுஷ்க குணதிலக, ஒஷத பெர்ணான்டோ ஆகியோரை காயத்தால் இழந்தமை பாதிப்பு என்றபோதும் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, நிரோஷன் டிக்வெல்ல, முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், குசல் பெரேரா, திஸர பெரேரா போன்றோரின் மீள்வருகை இலங்கைக்கு பலத்தை வழங்குகின்றது.

நிதானமான ஆரம்பத்தை திமுத் கருணாரத்னவிடமிருந்து எதிர்பார்க்கும் இலங்கையானது, நிரோஷன் டிக்வெல்ல, அவிஷ்க பெர்ணான்டோ, குசல் பெரேரா போன்றோரிடமிருந்து வேகமான ஓட்டங்களை எதிர்பார்க்கின்றது.

தவிர, இனிங்ஸின் மத்தியபகுதியில் அணியை நகர்த்திச் செல்லுவதற்கு அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, ஷெகான் ஜெயசூரிய ஆகியோரை இலங்கை நம்புகையில், இறுதி நேரத்தில் அதிரடியாக ஓட்டங்களைக் குவிப்பதற்கு திஸர பெரேராவை நம்பிக் காணப்படுகிறது.

பந்துவீச்சுப் பக்கம் நுவான் பிரதீப், இசுரு உதான போன்ற சிரேஷ்ட வீரர்களுடன், இளம்வீரர்களான லஹிரு குமார, வனிடு ஹஸரங்க ஆகியோர் நம்பிக்கையளிக்கின்றனர்.

மறுபக்கமாக உடற்றகுதிச் சோதனைகளில் தேறாததால் எவின் லூயிஸ், ஷிம்ரோன் ஹெட்மயர் ஆகியோர் மேற்கிந்தியத் தீவுகள் குழாமில் இடம்பெறாதது அவ்வணிக்கு நிச்சயமாக பின்னடைவே ஆகும்.

இந்நிலையில், டரன் பிராவோவின் மீள்வருகையானது அவர்களின் வெற்றிடத்தை ஓரளவுக்கு நிரப்பும் என எதிர்பார்க்கப்படுகையில், ஷே ஹோப், நிக்கலஸ் பூரான், றொஸ்டர் சேஸோடு ஏனைய வீரர்களும் தொடர்ச்சியான பெறுபேற்றை வெளிப்படுத்தினால் இலங்கையை மேற்கிந்தியத் தீவுகள் வீழ்த்த முடியும்.

ஷெல்டன் கோட்ரல். அல்ஸாரி ஜோசப், கீமோ போல் என அச்சுறுத்தும் பந்துவீச்சு வரிசையைக் கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஹெய்டன் வோல்ஷ் ஜூனியர், பேபியன் அலன் ஆகியோர் சிறந்த ஒத்துழைப்பை வழங்கக் கூடியவர்களாக உள்ளனர்.

இத்தொடரை இழந்தால் தரவரிசையில் ஒன்பதாமிடத்துக்கு இலங்கை கீழிறங்குவதுடன், எட்டாமிடத்துக்கு மேற்கிந்தியத் தீவுகள் முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .