2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கை எதிர் பங்களாதேஷ்: டெஸ்ட் தொடர் ஆரம்பமாகின்றது நாளை

Editorial   / 2018 ஜனவரி 30 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், சிட்டகொங்கில் இலங்கை நேரப்படி நாளை காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகின்றது.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் குறிப்பிடத்தக்களவுக்கு பங்களாதேஷ் முன்னேறியிருக்கின்றபோதும் டெஸ்ட் போட்டிகளில் இலங்கைக்கு குறிப்பிடத்தக்களவு சவாலை வழங்குமா என்பது சந்தேகத்துக்குரியதொன்றாகவே இருக்கின்றது.

ஏனெனில், தமது சொந்த மண்ணில் வைத்து அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட்டொன்றை வென்றபோதும் தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் மோசமாகத் தோற்று, சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் ஒன்பதாமிடத்திலேயே இருக்கின்றது.

இந்நிலையில், தமது சொந்த மண்ணில் இடம்பெறும் இத்தொடரில் சுழற்பந்துவீச்சாளர்களினாலேயே பங்களாதேஷின் பலம் பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகின்ற நிலையில், காயம் காரணமாக தமது அணித்தலைவரை ஷகிப் அல் ஹஸனை இழந்தது அவ்வணிக்கு பின்னடைவாகவே காணப்படுகிறது. எனினும் அவருக்குப் பதிலாக அணியில் இடம்பெற்றுள்ள சிரேஷ்ட சுழற்பந்துவீச்சாளர் அப்துர் ரஸாக்கின் அனுபவம் பங்களாதேஷுக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷகிப் அல் ஹஸன் இல்லாத நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உப அணித்தலைவர் மஹ்முதுல்லா இப்போட்டியில் பங்களாதேஷ் அணிக்குத் தலைமை தாங்கவுள்ளார்.

மறுபக்கமாக, கடந்த காலங்களில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இலங்கையணி சொதப்பியிருந்த நிலையிலும் டெஸ்ட் போட்டிகளில் சவால்மிக்க அணியாகவே விளங்கியிருந்ததோடு, ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து பாகிஸ்தானையும் வென்று சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் ஆறாமிடத்திலிருக்கின்றது.

உலகின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரங்கன ஹேரத்தை இலங்கையணி கொண்டிருப்பது அவ்வணிக்கு பலத்தை வழங்குவதோடு, அணித்தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் அஞ்சலோ மத்தியூஸ், திமுத் கருணாரட்ண, றொஷேன் சில்வா, தனஞ்சய சில்வா ஆகியோர் அண்மைய போட்டிகளில் ஓட்டங்களைப் பெற்றமை அவ்வணிக்கு மேலதிக சாதகத்தை வழங்குகிறது.

எதிர்பார்க்கப்படும் பங்களாதேஷ் அணி: 1. தமிம் இக்பால், 2. இம்ருல் கைஸ், 3. மொமினுள் ஹக், 4. முஷ்பிக்கூர் ரஹீம், 5. மஹ்முதுல்லா (அணித்தலைவர்) 6. லிட்டன் தாஸ் (விக்கெட் காப்பாளர்) 7. சபீர் ரஹ்மான், 8. மொஸடெக் ஹொஸைன், 9. அப்துர் ரஸாக், 10. தன்பீர் ஹைதர், 11. முஸ்தபிசூர் ரஹ்மான்.

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி: 1. திமுத் கருணாரட்ண, 2. தனுஷ்க குணதிலக, 3. தனஞ்சய டி சில்வா, 4. அஞ்சலோ மத்தியூஸ், 5. தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), 6. றொஷேன் சில்வா 7. நிரோஷன் டிக்வெல்ல (விக்கெட் காப்பாளர்), 8. டில்ருவான் பெரேரா, 9. ரங்கன ஹேரத், 10. சுரங்க லக்மால், 11. துஷ்மந்த சமீர.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .