2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உலகக் கிண்ணத்தில் இலங்கையின் தலைவராக கருணாரத்ன?

Editorial   / 2019 மார்ச் 19 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில், இலங்கையணியின் தலைமைப் பொறுப்பை, சிரேஷ்ட ஆரம்பத் துடுப்பாட்டவீரர் திமுத் கருணாரத்னவிடம் கையளிப்பது தொடர்பில் இலங்கையின் தேர்வாளர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமது வெளிநாட்டு வீரராக திமுத் கருணாரத்னவை, இங்கிலாந்துக் கவுண்டியான ஹம்ஷையர் கைச்சாத்திட்டிருந்தபோதும், மாகாண ஒருநாள் தொடரில் விளையாடும் பொருட்டு அடுத்த மாதம் இலங்கையில் இருக்குமாறு திமுத் கருணாரத்ன வினவப்பட்டுள்ளார். குறித்த தொடரிலேயே, இலங்கையின் ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியில் திமுத் கருணாரத்னவின் பொருத்தப்பாடு குறித்து தேர்வாளர்கள் மதிப்பிடவுள்ளனர்.

தான் இதுவரை விளையாடிய 17 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், 15.83 என்ற சராசரியிலேயே ஓட்டங்களைப் பெற்றுள்ள திமுத் கருணாரத்ன, கடந்த 2015ஆம் உலகக் கிண்ணத்தின் பின்னர் ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்றில் விளையாடியிருக்கவில்லை என்பதுடன், டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரரொருவராகவே இருக்கின்றார்.

எனினும், லசித் மலிங்கவின் கீழ் ஒன்பது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், இன்னும் ஒரு வெற்றியை இலங்கை பெறாதநிலையிலேயே, உலகக் கிண்ணத்தில் இலங்கையணியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு திமுத் கருணாரத்ன கருத்திற் கொள்ளப்படுகின்றார்.

இந்நிலையில், எதையும் தேர்வாளர்கள் உறுதிப்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ள திமுத் கருணாரத்ன, ஆனால், தான் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அணித்தலைவராக மாறக்கூடிய வாய்ப்பொன்று இருப்பதை மனதில் வைத்துக் கொள்ளுமாறு அவர்கள் தனக்கு கூறியதாக கூறியுள்ளார்.

சாதாரண ஒருநாள் சர்வதேசப் போட்டி துடுப்பாட்டவீரர் போன்று வேகமாக திமுத் கருணாரத்ன துடுப்பெடுத்தாடதபோதும், இலங்கையணியின் இனிங்ஸின் நங்கூரமாக அவர் இருப்பார் என நம்பப்படுகிறது. அண்மைய ஆண்டுகளில், வழமையாக ஆரம்ப விக்கெட்டுகளை இலங்கை இழக்கின்றது. இதுதவிர, தென்னாபிரிக்காவில் விளையாடிய முழுமையான நான்கு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் முழுமையாக 50 ஓவர்களிலும் இலங்கை துடுப்பெடுத்தாடியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, தென்னாபிரிக்காவில் வைத்துப் பெற்ற அவ்வணிக்கெதிரான 2-0 என்ற டெஸ்ட் தொடர் வெற்றியில், அனுபவமற்ற வீரர்களிடமிருந்து சிறந்த பெறுபேற்றைப் பெற்ற திமுத் கருணாரத்னவின் திறமையையையும் மேம்பட்டதாக தேர்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், அணியில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவராக இருக்கின்ற முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸையும் அணித்தலைமைப் பொறுப்புக்கு கருத்திற்கொள்வதாக தலைமைத் தேர்வாளர் அஸந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அணியின் முழுமையான ஆதரவைப் பெற்றிக்கவில்லை என தேர்வாளர்கள் கருதுகின்ற தற்போதைய அணித்தலைவர் லசித் மலிங்க, உலகக் கிண்ணத்தில் தலைமை தாங்குவதையும் தேர்வாளர்கள் நிராகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சராசென்ஸ் அணிக்கெதிரான பிறீமியர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரின் அரையிறுதிப் போட்டியில், எஸ்.எஸ்.சி அணிக்காக மூன்றாமிடத்தில் களமிறங்கிய திமுத் கருணாரத்ன, 115 பந்துகளில் 109 ஓட்டங்களைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .