2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

களிமண் பருவகாலத்தில் விளையாடத் திட்டமிடுகிறார் பெடரர்

Editorial   / 2019 ஜனவரி 21 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

களிமண் பருவகாலத்தில் விளையாடத் திட்டமிட்டுள்ளதாக உலகின் மூன்றாம்நிலை வீரரான ரொஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக இரண்டாண்டுகளாக களிமண் பருவகாலத்தில் விளையாடியிருக்காத சுவிற்ஸர்லாந்தின் பெடரர், இறுதியாக 2016ஆம் ஆண்டு இத்தாலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலேயே களிமண் தொடர் போட்டியொன்றில் பங்கேற்றிருந்தார்.

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில் இறுதியாக 2015ஆம் ஆண்டு பங்கேற்றிருந்த 20 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற பெடரர், சக சுவிற்ஸர்லாந்து நாட்டவரான ஸ்டான் வவ்றிங்காவிடம் தோல்வியடைந்திருந்தார்.

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், தனது நான்காவது சுற்றுப் போட்டியில் கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்டிபாஸிடம் தோல்வியடைந்து குறித்த தொடரிலிருந்து வெளியேறிய பின்னர் கருத்துத் தெரிவித்த 37 வயதான பெடரர், தான் கொண்டாட்டத்தைக் கொண்டிருக்க விரும்புகின்ற காலகட்டத்தில் தான் இருப்பதாகக் கூறியதுடன், மீண்டும் பாரிய இடைவெளியொன்றை எடுக்க வேண்டிய கட்டாயமுண்டு என தான் உணரவில்லை எனக் கூறியுள்ளார்.

2016ஆம் ஆண்டு முழுவதும் காயத்தால் அவதிப்பட்டதைத் தொடர்ந்தே கடந்த இரண்டு களிமண் பருவகாலத்தையும் பெடரர் தவறவிட்டிருந்தார். முதுகு உபாதை காரணமாக 2016ஆம் ஆண்டு பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில் விளையாடியிருக்காத பெடரர், முழங்கால் பிரச்சினையொன்றைத் தொடர்ந்து அவ்வாண்டு பருவகாலத்தை முன்னதாகவே முடித்துக் கொண்டிருந்தார்.

2017ஆம் ஆண்டில் தனது மீள்வருகையின்போது அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரையும் மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரையும் வென்ற பின்னர் கருத்துத் தெரிவித்த பெடரர், தான் இப்போதும் 24 வயதைக் கொண்டிருக்காததால் பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில் மாத்திரமே விளையாடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருந்தார். எவ்வாறாயினும் புற்தரை ஆடுகளங்களிலான தொடர்களில் கவனம் செலுத்தும் பொருட்டு அவ்வாண்டு பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில் பங்கேற்காதிருக்கத் தீர்மானித்த பெடரர் அவ்வாண்டு விம்பிள்டன் பட்டத்தை வென்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .