2024 மே 08, புதன்கிழமை

சிறந்த வீரராக கோலி

Editorial   / 2019 ஜனவரி 23 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் கடந்தாண்டின் சிறந்த வீரராக இந்திய அணியின் தலைவர் விராத் கோலி தெரிவாகியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக, டெஸ்ட் போட்டிகளுக்கான கடந்தாண்டின் சிறந்த வீரராகவும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான கடந்தாண்டின் சிறந்த வீரராகவும் தெரிவாகிய கோலி, குறித்த மூன்று விருதுகளையும் ஒன்றாக வென்ற முதலாவது வீரராக தனது பெயரைப் பதிவுசெய்து கொண்டார்.

இதேவேளை, கடந்தாண்டின் டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டி அணிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், அவையிரண்டின் தலைவராகவும் கோலியே தெரிவாகியுள்ளார்.

கடந்தாண்டில், 13 டெஸ்ட் போட்டிகளில் 55.08 ஓட்டங்கள் என்ற சராசரியில் ஐந்து சதங்கள் உள்ளடங்கலாக 1,322 ஓட்டங்களைப் பெற்ற கோலி, 14 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 133.55 ஓட்டங்கள் என்ற சராசரியில் ஆறு சதங்கள் உள்ளடங்கலாக 1,202 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதுதவிர, 10 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 211 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

அந்தவகையில், டெஸ்ட் போட்டிகளுக்கானதும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் முதலிடத்துடன் கடந்தாண்டை முடித்துக் கொண்ட கோலியே, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் டெஸ்ட் போட்டிகளிலும் கடந்தாண்டில் அதிக ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

கடந்தாண்டின் சிறந்த வீரராக ஏகோபித்த வகையில் முன்னாள் வீரர்களையும் ஊடகவியலாளர்களையும் உள்ளடக்கிய வாக்களிக்கும் அகடமியால் கோலி தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், சிறந்த வீரருக்கான வாக்களிப்பில் கோலிக்கு அடுத்ததாகக் காணப்பட்ட தென்னாபிரிக்காவின் இளம் வேகப்பந்துவீச்சாளர் கஜிஸோ றபாடா, டெஸ்ட் போட்டிகளுக்கான கடந்தாண்டின் சிறந்த வீரருக்கான விருதில் கோலிக்கு அடுத்ததாக இரண்டாமிடத்தில் காணப்பட்டிருந்தார். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான கடந்தாண்டின் சிறந்த வீரருக்கான விருதில் கோலிக்கு அடுத்தாக இரண்டாமிடத்தில் ஆப்கானிஸ்தானின் இளம் சுழற்பந்துவீச்சாளர் ரஷீட் கான் காணப்பட்டிருந்தார்.

2017ஆம் ஆண்டும் அவ்வாண்டின் சிறந்த வீரராகவும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான சிறந்த வீரராகவும் தெரிவாகியிருந்த கோலி, 2012ஆம் ஆண்டின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான சிறந்த வீரராகவும் தெரிவாகியிருந்தார்.

இந்நிலையில், ஆண்டின் சிறந்த இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி பெறுபேற்றுக்கான விருதை, சிம்பாப்வேக்கெதிராக கடந்த ஜூலையில் சிம்பாப்வேயின் ஹராரேயில் இடம்பெற்ற போட்டியில் 76 பந்துகளில் 172 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலியாவின் ஆரோன் பின்ஞ் பெற்றார்.

இந்நிலையில், கடந்தாண்டின் சிறந்த வளர்ந்துவரும் வீரராக இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் றிஷப் பண்ட் தெரிவானார். கடந்தாண்டில் எட்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம், இரண்டு அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 537 ஓட்டங்களைப் பெற்ற பண்ட், 40 பிடியெடுப்புகளையும் இரண்டு ஸ்டம்பிங்குகளையும் மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை, கடந்தாண்டின் சிறந்த துணைக்கண்ட வீரராக ஸ்கொட்லாந்தின் துடுப்பாட்டவீரர் கலும் மக்லியொட்டும் சிறந்த நன்னடத்தைகான விருதை நியூசிலாந்தின் அணித்தலைவர் கேன் வில்லியம்சனும் வென்றதோடு, கடந்தாண்டின் சிறந்த நடுவராக குமார் தர்மசேன தெரிவானார். நியூசிலாந்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தை இந்தியா வென்றமை இரசிகர்களின் தருணமாகத் தெரிவாகியிருந்தது.

இந்நிலையில், கடந்தாண்டின் டெஸ்ட் அணியில் கோலியுடன் சேர்த்து பண்ட், வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா என நான்கு இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளதுடன், வில்லியம்சன், ஹென்றி நிக்கொல்ஸ், டொம் லேதம் என மூன்று நியூசிலாந்து வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். ஏனைய ஐவரும் இலங்கை (திமுத் கருணாரத்ன), மேற்கிந்தியத் தீவுகள் (ஜேசன் ஹோல்டர்), தென்னாபிரிக்கா (கஜிஸோ றபாடா), அவுஸ்திரேலியா (நேதன் லையன்), பாகிஸ்தான் (மொஹமட் அப்பாஸ்) என ஐந்து நாடுகளிலிருந்தும் தலா ஒவ்வொருவர் இடம்பெற்றுள்ளனர்.

ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியில், கோலியுடன் ரோகித் ஷர்மா, சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், பும்ரா என நான்கு இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளதுடன், ஜோ றூட், ஜொனி பெயார்ஸ்டோ, ஜொஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் என நான்கு இங்கிலாந்து வீரர்களும் இடம்பெற்றுள்ளதோடு, பங்களாதேஷ் (முஸ்தபிசூர் ரஹ்மான்), ஆப்கானிஸ்தான் (ரஷீட் கான்), நியூசிலாந்து (றொஸ் டெய்லர்) ஆகிய மூன்று நாடுகளிலிருந்தும் தலா ஒவ்வொருவர் இடம்பெற்றுள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X