2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘சிறந்ததொரு தலைவர் நான்’

Editorial   / 2017 ஜூன் 13 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியின் தலைவரான ஏபி டி வில்லியர்ஸ், 2019ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரில், தனது அணியை வழிநடத்த விரும்புவதாகத் தெரிவித்ததோடு, தென்னாபிரிக்காவை வழிநடத்தும் திறன், தனக்குக் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்திய அணிக்கெதிராக, நேற்று முன்தினம் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில, படுதோல்வியடைந்த தென்னாபிரிக்க அணி, அத்தொடரிலிருந்து வெளியேறியிருந்தது. சர்வதேச கிரிக்கெட் சபையின் முக்கியமான தொடர்களில், முக்கியமான போட்டிகளில் தோல்வியடையும் தென்னாபிரிக்காவின் தன்மை, இப்போட்டியிலும் வெளிப்பட்டிருந்தது.

அணித் தலைவர் ஏபி டி வில்லியர்ஸ், துடுப்பாட்டத்திலும் இத்தொடரில் சறுக்கியிருந்ததோடு, அணித்தலைமைப் பொறுப்புக் குறித்தும் கேள்விகள் எழுந்திருந்தன. இதற்குப் பதிலளிக்கும் போதே அவர், அடுத்த உலகக் கிண்ணத்துக்குத் தலைமை தாங்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

“ஏனென்றால், நான் சிறந்ததொரு தலைவர். இந்த அணியை, என்னால் முன்கொண்டு செல்ல முடியும். உலகக் கிண்ணமொன்றை வெற்றிகொள்ள, எங்களை என்னால் கொண்டுசெல்ல முடியுமென நான் நம்புகிறேன். இந்தத் தொடர் தொடர்பாகவும், இதையே நான் நம்பியிருந்தேன். ஆனால், இதை நான் நம்புகிறேன். இதைச் செய்வதை, நான் விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

இந்தப் போட்டியில், தென்னாபிரிக்க அணி, 3 விக்கெட்டுகளை ரண் அவுட் முறையில் இழந்திருந்தது. இது, தென்னாபிரிக்க அணி, பதற்றத்தை வெளிப்படுத்தியமையைக் காட்டியது.

இந்நிலையில், தயார்படுத்தலைப் பொறுத்தவரை, அனைத்திலும் சிறப்பாகச் செயற்பட்டதாகக் குறிப்பிட்ட ஏபி டி வில்லியர்ஸ், அதில் சந்தேகமேதும் கிடையாது என்று தெரிவித்தார். “வலைப்பயிற்சியில் நாங்கள், மிக மிகக் கடுமையாகப் பணியாற்றுகிறோம். அணியிலுள்ள ஏனையோரை, நாங்கள் ஆதரிக்கிறோம், அவர்களை நம்புகிறோம். ஏதோவொரு காரணத்துக்காக, இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன” என்றார்.

தென்னாபிரிக்க அணி, விக்கெட் இழப்பின்றி 76 ஓட்டங்களுடன் காணப்பட்டு, பின்னர் 191 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தமையை, மிகவும் மோசமான துடுப்பாட்டப் பெறுபேறு என்பதை, ஏபி டி வில்லியர்ஸ் ஏற்றுக் கொண்ட போதிலும், தாங்கள் பதற்றத்தால் அவ்வாறு நடக்கவில்லை என்று குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .