2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

செல்சியை வென்று காலிறுதியில் பார்சிலோனா

Editorial   / 2018 மார்ச் 15 , பி.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா தகுதிபெற்றுள்ளது.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான செல்சியை வென்றமையைத் தொடர்ந்தே காலிறுதிப் போட்டிக்கு பார்சிலோனா தகுதிபெற்றுள்ளது.

செல்சியின் மைதானத்தில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதலாவது சுற்றுப் போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்திருந்த பார்சிலோனா, தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று காலை இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியின் மூன்றாவது நிமிடத்திலேயே லூயிஸ் சுவாரஸ் வழங்கிய பந்தைய கடிமான நிலையொன்றிலிருந்து செல்சியின் கோல் காப்பாளர் திபோ கோர்த்துவாவின் கால்களுக்குள்ளால் செலுத்தி கோலைப் பெற்ற லியனல் மெஸ்ஸி பெற்ற கோலின் மூலம் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

பின்னர், செல்சியின் சீஸ்க் பப்ரிகாஸ் பந்தின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் போட்டியின் 20ஆவது நிமிடத்தில் லியனல் மெஸ்ஸி வழங்கிய பந்தை உஸ்மான் டெம்பிலி கோலாக்க தமது முன்னிலையை பார்சிலோனா இரட்டிப்பாக்கிக் கொண்டது.

இதையடுத்து, செல்சியின் சீஸர் அத்பிலிகெட்டாவின் தவறொன்றைத் தொடர்ந்து, லூயிஸ் சுவாரஸ் வழங்கிய பந்தை திபோ கோர்துவாவின் கால்களுக்குள்ளால் மீண்டும் போட்டியின் 63ஆவது நிமிடத்தில் கோலாக்கிய தனது 100ஆவது சம்பியன்ஸ் லீக் கோலை லியனல் மெஸ்ஸி பெற்றார்.

இந்நிலையில், போட்டி முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் இப்போட்டியில் வென்ற பார்சிலோனா, 4-1 என்ற மொத்த கோல் கணக்கில் காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

இதேவேளை, தமது மைதானத்தில் இடம்பெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதலாவது சுற்றுப் போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்த ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பெயார்ண் மியூனிச், துருக்கியக் கழகமான பெஸ்கிட்டாஸின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான இரண்டாவது சுற்றுப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றி, 8-1 என்ற மொத்த கோல் கணக்கில் காலிறுதிக்குத் தகுதிபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .