2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜுவென்டஸிலிருந்து வெற்றியுடன் விடைபெற்றார் புபான்

Editorial   / 2018 மே 20 , பி.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸின் அணித்தலைவரும் கோல் காப்பாளருமான ஜல்லூயிஜி புபான், ஜுவென்டஸுக்காக தான் விளையாடிய கடைசிப் போட்டியில் வெற்றியுடன் விடைபெற்றுக் கொண்டார்.

ஜுவென்டஸின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஹெலாஸ் வெரோனா அணியுடனான போட்டியே 40 வயதான ஜல்லூயிஜி புபான் ஜுவென்டஸ் சார்பாக விளையாடிய கடைசிப் போட்டியாக அமைந்த நிலையில், குறித்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் வென்றிருந்தது. ஜுவென்டஸ் சார்பாக, டானியல் ருகனி, மிரலெம் பிஜானிக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, ஹெலாஸ் வெரோனா அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெஸ்ஸியோ செர்சி பெற்றிருந்தார்.

இந்நிலையில், கடந்த வாரம் இடம்பெற்ற போட்டியிலேயே நடப்பு சீரி ஏ தொடரின் சம்பியன்களாக தம்மை ஜுவென்டஸ் உறுதிப்படுத்தியிருந்த நிலையில், இப்போட்டியின் முடிவில் ஜுவென்டஸுக்கு சீரி ஏ பட்டம் வழங்கப்பட்டிருந்தது.

கோல் காப்பாளர்களுக்கான உலக சாதனைத் தொகையாக 52 மில்லியன் யூரோக்களுக்கு பர்மா கழகத்திலிருந்து ஜுவென்டஸில் 2001ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஜல்லூயிஜி புபான், நேற்று முன்தினம் விளையாடிய சீரி ஏ போட்டி 640ஆவது சீரி ஏ போட்டியாகும்.

இந்நிலையில், வேறு கழகங்களில் விளையாடுவதற்கு, பயிற்றுவிப்பில் பதவிகளைப் பெற்றுக் கொள்வது குறித்து ஆலோசிக்கையில், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனில் விளையாடுவதற்கு அக்கழகம் வாய்ப்பொன்றை வழங்கியுள்ளதாகக் கூறப்படுவதுடன், ஜுவென்டஸால் பயிற்றுவிப்பு பதவியொன்றை ஏற்குமாறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .